130 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயம் இயேசு சபை தடைக்குப் பிறகு மீண்டும் மறைப்பணியாற்ற வந்த புதிய மதுரை மறைத்தளத்தின் ஃபிரெஞ்சு இயேசு சபைக் குருக்களால் பங்கு ஆலயமாகக் கட்டப்பட்டது
மறுமலர்ச்சி இயேசு சபை குருக்கள் மலையடிப்பட்டிக்கு பணியாற்ற வந்த போது, ஏற்கனவே பனிமய அன்னை பங்கில் அதிகாரத்தில் இருந்த கோவா பதுருவாதா குருக்களிடமிருந்து எதிர்ப்பும், சச்சரவுகளும் எழுந்தது. எனினும், இறைமக்களில் பெரும்பாலானோர், இயேசு சபை குருக்களுக்கு ஆதரவாக இருந்தனர். எனவே தங்களுக்கென ஒரு ஆலயத்தை இயேசு சபை குருக்கள் எழுப்பினர். இக்காலகட்டத்தில் பணியாற்றிய மறைப்பணியாளர்கள் குறித்த வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கவில்லை.
(முந்தைய இணையப் பக்கங்களில் இது குறித்த விரிவான விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது).
இவ்வாலயம் குறித்த ஒரு ஆச்சரிமான வரலாறு யாதெனில், ஒர் கூரையால் வேயப்பட்ட சிற்றாலயமும், மேலும் ஆலயத்தைச் சுற்றி ஒரு சுற்றுச் சுவரும் ஒரே இரவில் இறைமக்களால் கட்டப்பட்டதாக வரலாற்றுச் சுவடுகள் கூறுகின்றன. இவ்விரு குழுக்களுக்குமிடையே இருந்த சண்டைகள் காரணமாகவும், புதிய கட்டுமானத்திற்கு எதிர்ப்பு எழும் என்ற காரணத்தினாலும் இச்சிற்றாலயமும், சுற்றுச் சுவரும் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக கட்டப்பட்டதாக அறிகிறோம்.
கூரையாலான இவ்வாலயத்திற்கு, பின்னாட்களில் மேற்கூரை ஓடுகள் பதிக்கப்பட்டன. ஆலயம் பின்னாட்களில் புதிதாகக் கட்டப்பட்டாலும், ஒரே இரவில் கட்டப்பட்ட ஆலயச் சுற்றுச்சுவர், இன்று வரை எவ்வித பாதிப்புமின்றி, இவ்வரிய வரலாற்றினைப் பறைசாற்றி நிற்கின்றது.
இவ்விடத்தில் வசித்து வந்த இறைமக்கள், ஆலயம் கட்டுவதற்காக தங்கள் நிலங்களை நன்கொடையாக அளித்து விட்டு, மேற்குப் பகுதியின் களத்தில் குடியேறினர். இப்பகுதி குடும்பங்கள் தற்போது ஆலமரமாய் விரிந்து, மலையடிப்பட்டியின் மேற்குத்தெருவாக நிலைபெற்றிருக்கிறது. எனினும் இன்று வரை இத்தெருவினை ‘களத்து வீடு’ என அழைக்கும் வழக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது
இந்நிலையில், 1853-1895 வரை 43 ஆண்டுகள் இப்பணித்தளத்தில் அருட்தந்தை பெனடிக்ட் புர்தி ஆகச் சிறந்த பல பணிகளை மேற்கொண்டார். அவற்றுள் முக்கியமானது இப்புதிய சவேரியார் ஆலயம் ஆகும். (தந்தை குறித்த விரிவான வாழ்க்கை வரலாறு முந்தைய இணய பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது)
முன்பு ஒரே இரவில் கட்டப்பட்டு, பின்னர் ஓடு பதிக்கப்பட்ட பழைய சவேரியார் சிற்றாலயம், மக்களின் ஆன்மீகத் தேவைகளுக்கு போதாததை உணர்ந்த தந்தையவர்கள், 1885-ஆம் ஆண்டு இறைமக்களின் உதவியுடன், அந்த பழைய சவேரியார் ஆலயத்தை தரைமட்டமாக்கி, தற்போதுள்ள புதிய சவேரியார் ஆலயத்தை அழகுற, கம்பீரமாக கட்டியெழுப்பினார்.
மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இவ்வாலயத்தின் மணிக்கூண்டும் முகப்புக் கோபுரமும் அதன் மேல் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட உருண்டையும் மிக அருமையானவை. இவ்வாலயத்திற்கு ஐந்து முன்புற நுழைவு வாயில்கள் அமைந்திருப்பது இதன் மற்றொரு சிறப்பு; வத்திக்கான் ஆலயத்தில் மட்டுமே இங்ஙனம் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆலயத்தின் இரு மணிகளும், மாடக் கண்ணாடிகளும் பிரான்சிலிருந்து கொண்டுவரப்பட்டவை. கண்ணாடிகள் காலப்போக்கில் சேதமடைந்து மாற்றம் செய்யப்பட்டாலும், இம்மணிகள் இரண்டும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
மேலும், ஆலயத்திற்கு அருகிலேயே பங்குத்தந்தை இல்லம் (அற வீடு) ஒன்றையும் கட்டி எழுப்பினார். (மிகவும் சிதிலமடைந்ததால், 2004-ல் இந்த பழைய பங்குத்தந்தை இல்லம் இடிக்கப்பட்டு Fr. யூஜின் அவர்களால் புதிதாகக் கட்டப்பட்டது).
இதுமட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் மேலும் ஆறு பெரிய கோவில்களையும் கட்டியதோடு, 43 ஆண்டுகள் மக்களோடு ஒன்றற கலந்து வாழ்ந்தார்.
1895-இல், தந்தையவர்கள் தனது மறைப்பணி நிமித்தமாக தூத்துக்குடி சென்ற போது, இறைவனிடம் தன் ஆவியை ஒப்படைத்தார்; அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். எனினும், இறைமக்களின் ஏகோபித்த வேண்டுதலின் பேரில், அவரது எலும்புகள் தோண்டியெடுக்கப்பட்டு, மலையடிப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.
1909 ம் ஆண்டு நவம்பர் திங்கள், தான் எழுப்பிய இந்த சவேரியார் ஆலயத்தின் பீடத்தின் முன்பாக, அவரின் எலும்புகள் மறு அடக்கம் செய்யப் பட்டது. இத்துயர நிகழ்வின் போது மக்கள் கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்ந்தனர். இம்மறைதலத்திற்காக 40 ஆண்டுகள் தம் வாழ்நாள் முழுவதையும் கரைத்து, மாபெரும் இறைபணியாற்றிய இவ்வொப்பிலா குருவிற்கு, மக்கள் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர். மலையடிப்பட்டி மறைத்தல வரலாற்றில் தந்தை ஆற்றிய பணிகள் சாலச்சிறந்தது; போற்றுதற்குரியது. அவரின் பணிகளை, அவரின் இந்த வரலாற்றுச் சின்னங்கள் மேலும் பல நூற்றாண்டுகள் எதிரொலிக்கும் என்பதில் ஐயமில்லை.
இணை வரலாறு: பிற்கால வரலாற்று நிகழ்வுகளின் படி, 1929-இல் இரு பங்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, 1938-இல் உருவான திருச்சி தனி மறைமாவட்டத்தின் அங்கமாக மலையடிப்பட்டி பங்கு இன்று வரை செயல்பட்டு வருகிறது. (இதன் விரிவான வரலாறு முந்திய இணையப்பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது)
இங்கனம் உருப்பெற்ற புதிய சவேரியார் பங்கின் ஏழாவது குருவாக 1980-1985-இல் ந.பூலாம்பட்டியின் மண்ணின் மைந்தரான அருட்தந்தை. பத்திநாதர் பணியாற்றினார். (இவர் இதற்கு முன்னதாகவே ஐந்தாவது குருவாக 1973-1977-இல் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது). தந்தையவர்களின் இந்த இரண்டாவது பணிக்காலத்தின் போது, ஆலயம் கட்டி நூறு ஆண்டுகள் நிறைவடைந்தது.
எனவே, இவ்வாலயத்தின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் விதமாக, இவ்வாலயத்தை மீண்டும் சுண்ணாம்புக் காரையால் பூசி, புதுப்பித்து வர்ணம் பூசினார். (ஆலயம் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே மலம்பட்டி பங்கிற்கு மாற்றலாகிச் சென்றாலும், மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்).
இதன் பின், உலகத் திருச்சபையின் 2000 ம் ஆண்டு ஜூபிலி கொண்டாட்டத்தின் நினைவாக, அப்போது பங்குத்தந்தையாக (1998-2003) பணியாற்றிய Fr. திருத்துவதாஸ் அவர்கள் ஆலயத்திற்கு வர்ணம் பூசும் பணியினை மேற்கொண்டார். ஆறு மாத காலமாக உள்ளூர் கலைஞர்களைக் கொண்டே வர்ணம் பூசப்பட்ட ஆலயமானது, அப்போதைய ஆயர் மேதகு அந்தோணி டிவோட்டா அவர்களால் திறந்து வைக்கப் பட்டு மறு அர்ப்பணிப்பு செய்யப்பட்டது.
அதன் பின், 2011-ஆம் ஆண்டில், இவ்வாலயத்தின் 125 ஆண்டு ஜூபிலி நினைவாக, ஆலய புதுப்பிக்கும் பணியானது, அப்போது பங்கு குருவாக பணியாற்றிய Fr. ஜேம்ஸ் செல்வநாதன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. ஆலய புதுப்பிக்கும் பணியானது, 04-12-2010 அன்று முன்னாள் பங்குத் தந்தை Fr. T. யூஜின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆலயத்தின் வெளிப்புறம் முழுவதும் உள்ள சுண்ணாம்பு பூச்சு முழுவதுமாக சுரண்டி எடுக்கப் பட்டு, சிமெண்ட்டால் பூசப்பட்டது. பழைய உள்பீட அலங்காரங்கள் முற்றிலும் மாற்றப்பட்டு, புதிதாக மிகவும் நேர்த்தியாக, தேர்ந்த கைவினைக்கலைஞர்களால் அலங்கரிக்கப் பட்டது. ஆலயத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சரிசெய்யப்பட்டன. மாடக் கண்ணாடிகள் புதிதாக பொருத்தப் பட்டன. ஆலயம் முழுவதும் அழகுற வர்ணம் பூசப்பட்டது. ஒருவருட கடின உழைப்பினால், இவ்வாறு புதுப்பொழிவு பெற்ற ஆலயமானது, 08-04-2012 அன்று மேதகு ஆயர் அந்தோணி டிவோட்டா அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, மறு அர்ப்பணிப்பு செய்யப்பட்டது.
இப்பணிக்காக சுமார் 40 லட்சங்களுக்கு மேல் செலவு செய்யப்பட்டது. மக்களின் நன்கொடையானது பற்றாக்குறையானதால், தந்தை ஜேம்ஸ் செல்வநாதன் தன் குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தை கொசவபட்டியில் விற்று, இதற்கான கடனை அடைத்தார்.
இதுகுறித்து தந்தையவர்கள் தன் பிரிவு உபசார விழாவில் உணர்வுபூர்வமாக பகிர்ந்த பொழுது, “என் தந்தை சவரிமுத்து தனது விசுவாசத்தை இக்கோவிலில் இருந்து தான் பெற்றார். இதன் அடையாளமாக, நான் இந்த பங்கிலிருந்து விடைபெறும் போது, இப்பங்கிற்கு எவ்வித கடனும் இல்லாது ஒப்படைத்துச் செல்கிறேன்,” என மொழிந்தது இன்று வரை மக்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது.
மேலும்,கோவில் பணிகள் முடிக்கப்பட்டு மறுஅர்ப்பணிப்பு செய்யப்பட்ட நாளன்று, கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. இதற்காக கணிசமான தொகை செலவானது. இதே நாளில், மண்ணின் மைந்தரான, சகோ. ஜோசப் அற்புத ராஜ் க.ச.,அவர்களால் இசை இயக்கம் செய்யப்பட்டு, மலையடிப்பட்டி பாடகற்குழுவினர் உதவியுடன் இசைப்பதிவேற்றம் செய்து, ‘விழிகளிலே’ எனும் ஒரு இசைத்தகடு, இவ்வாலய நூற்றாண்டின் நினைவாக வெளியிடப்பட்டது. (https://bit.ly/விழிகளிலே)