1885-இல் பெனடிக்ட் புர்தி அடிகளார் பங்குத்தந்தையாக பணியாற்றிய காலத்தில், புதிய சவேரியார் ஆலயமும், பங்குத்தந்தை இல்லமும் கட்டினார். மேலும், மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றமடைய, கல்வி மிக அவசியம் எனும் தொலை நோக்கில், ஆலயத்தின் வலது புறம் ‘தூய சவேரியார் பாடசாலை’யையும் நிறுவினார். இந்த மூன்று கட்டடங்களும் ஒரே நாளில் அர்ச்சிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்தது குறிப்பிடத்தகுந்தது. சவேரியார் பள்ளியும் 1885-இல் இருந்தே செயல்பட்டு வருவதாக இன்று வரை அரசு ஆவணங்களில் உள்ளது.
இப்பள்ளிக்கட்டடம், வளைவான மேற்கூரைகளைக் கொண்டு, போர்த்துக்கீசிய கட்டட அமைப்பு போலவே இருந்தது. உட்புறம் பெரிய பெரிய தூண்கள் இருந்தன. அறைகள் ஏதும் இல்லை. தற்காலிக தடுப்புகள் கொண்டு அடைத்து, வகுப்பறைகளாக பயன்படுத்தி வந்தனர்.
பிற்காலத்தில், Fr. K.V. பீட்டர் அவர்களின் பணிக்காலத்தின் போது, மக்களின் தேவைகருதி இத்துவக்கப்பள்ளியானது நடுநிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது. இதற்கான இடப்பற்றாக்குறை காரணமாக, 1959-இல் பனிமய அன்னை ஆலய வளாகத்தில் ஓர் ஓட்டுப் பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டது. அதுவும் போதாததால், பனிமய அன்னை ஆலயமும் வகுப்பறைகளாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
1920-வரை இருபால் பள்ளியாக இயங்கிய நிலையில், புனித தெரசாள் பெண்கள் தொடக்கப்பள்ளி நிறுவப்பட்ட பின்பு (1920), ஆண்கள் தொடக்கப்பள்ளியாக தொடர்ந்து செயல்பட்டது. எனினும் 6-8 வரை பயிலும் பெண் குழந்தைகள் இப்பள்ளியிலேயே தொடர்ந்தார்கள்; இந்நிலை 1967-இல் அரசு உயர்நிலைப் பள்ளி நிறுவப்படும் வரை நீடித்தது.
இந்நிலையில், 1967-ஆம் ஆண்டு, C.N. அண்ணாத்துரை அவர்கள் தமிழக முதலமைச்சராக பணியாற்றிய காலத்தில், மலைக்கு வடக்கே, சாலைக்கு அருகில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியானது, தமிழக அரசால் நிறுவப்பட்டு, இன்று வரை நிரவகிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சவேரியார் பள்ளி மீண்டும் துவக்கப்பள்ளியாக மாற்றப்பட்டது. இம்மாற்றத்தின் போது, பனிமய அன்னை வளாகத்தின் வலது புறம் அமைந்திருந்த அன்னதான சத்திரமானது வகுப்பறைகளாக மாற்றப்பட்டன. அங்கு 4-5 வகுப்புகளும், பழைய ஓட்டுக் கட்டடத்தில் 1-3 வகுப்புகளும் செயல்படத் தொடங்கின.
இந்நிலையில், பழைய சவேரியார் பாடசாலைக் கட்டிடமானது, தமிழக அரசின் “காதி நெசவுத்தறி” அலுவலகமாகவும், மேலும் மற்றொரு பகுதியானது - ஆரம்ப சுகாதார வளாக அறையாகவும் (TMSSS), செயல்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் கட்டடம் முழுமையும் சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றதால், 120 ஆண்டுகள் பழமையான இக்கட்டிடம் முழுவதுமாக தகர்க்கப்பட்டு, அவ்விடத்தில் லூர்தன்னை கெபியானது எழுப்பப்பட்டது (இது குறித்து சிற்றாலயங்கள் வரலாற்றில் விரிவாகக் காண்க).
தந்தை யூஜின் அவர்களின் பணிக்காலத்தின் போது, ஒரு புதிய பள்ளிக்கட்டிடம் தேவையென உணர்ந்து, பனிமய அன்னை ஆலயத்தில் பின்புறம் இருந்த மைதானத்தில் இதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டார். இதற்கான அடிக்கல்லானது 07-07-2004 அன்று அப்போதைய பழைய கோவில் பங்குத்தந்தை A. ஜெயராஜ் அவர்களால் நாட்டப்பட்டது. அழகுடனும், கம்பிரமாகவும், அனைத்து வசதிகளுடனும் கட்டிமுடிக்கப்பட்ட புதிய பள்ளிக் கட்டிடமானது 10-03-2005 அன்று மேதகு ஆயர் அந்தோனி டிவோட்டா அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. (லூர்து அன்னை கெபி, பங்குத்தந்தை இல்லம், தோமையார் சமுதாயக்கூடம், சவேரியார் பள்ளி ஆகிய நான்கு கட்டடங்களுக்கும் ஒரே நாளில் அடிக்கல் நாட்டப்பட்டு, ஒரு வருடங்களுக்குப் பின் ஒரே நாளில் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.)
இப்பள்ளியின் 125 ஆண்டு நிறைவு விழா (Quasquicentennial Jubilee 1885-1908), மற்றும் சவேரியார் பள்ளி ஓட்டுக்கட்டடத்தில் செயல்படத் தொடங்கிய பொன்விழா ஆண்டு (1959-2008) என்ற வகையிலும் ஜூபிலி விழாவாக, கணக்கிடப்பட்டு, வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தந்தை யூஜின் அவர்கள் தலைமையேற்று விழாவைச் சிறப்பித்தார்கள்; விழாவில் மேலும் பல அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இவ்விழாவின் போது, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து தயாரித்த ‘ஞாபகம் வருதே’ என்கிற ஒரு குறும்படமும் வெளியிடப்பட்டு, விழாவிலேயே பொதுமக்களுக்கும் திறையிடப்பட்டது.
இந்நூற்றாண்டு விழாவின் நினைவாக, முன்னாள் மாணவர் A. ஜோசப் பீட்டர் தனராஜ் அவர்களின் உபயத்தில், ஒரு இரும்பு அலங்கார வளைவு பள்ளியின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு, 16-11-2010 அன்று திறந்து வைக்கப் பட்டது.
135 ஆண்டுகளாய் பல்வேறு மாற்றங்களுக்கு மத்தியிலும், சிறந்த கல்வித் தளமாய் இயங்கிவரும் இப்பள்ளியிலிருந்து பயன் பெற்றோர் எண்ணிலடங்கா. இங்ஙனம், இப்பள்ளியானது வெறும் பாடசாலையாக மட்டுமல்லாது, ஒரு வரலாற்றுச் சின்னமாகவும் விளங்குகிறது.
புனித தெரசாள் பெண்கள் தொடக்கப்பள்ளி 1920-ஆம் ஆண்டு மதுரை அமலோற்பவ அன்னை சபை கன்னியர்களால் நிறுவப்பட்டு, இன்று வரை சிறப்புற கல்விப்பணியினை ஆற்றி வருகின்றனர். கல்விப்பணி மட்டுமல்லாது, பீட அலங்காரம், மறைக்கல்வி வகுப்பு, வீடுகள் சந்தித்தல் என பல வகைகளிலும் கடந்த நூறு ஆண்டுகளாக பங்குத்தந்தையர்களுக்கு ஆன்மீகப் உதவியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இக்கன்னியர்களின் வாழ்வு முறையால் ஈர்க்கப்பட்டு பல இறையழைத்தல்கள் இப்பங்கிலிருந்தும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் இச்சபையில் இணைந்திருப்பது இவர்களின் தன்னலமற்ற ஆன்மீக சேவைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. (காண்க: மலைத்தளிர்கள்).
பள்ளியைப் பொருத்த வரை, பெண் குழந்தைகளையும் கல்வியில் ஊக்குவிக்கும் நோக்கில், இப்பள்ளியானது அப்போதிருந்த பங்குத்தந்தையின் வேண்டுகோளின் பேரில் ஆலயத்திற்கு வலது புறமுள்ள கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஆரம்பிக்கப் பட்டது. இச்சகோதரிகளின் தற்சார்புக்காக, கன்னியர் மடம் கட்ட தேவையான இடமும், இதனுடன் இணைந்த விவசாய நிலமும், கிணறும் தானமாக வழங்கப்பட்டது.
கடந்த ஒரு நூற்றாண்டாக, இப்பள்ளி கூரைப்பள்ளியாகவும், பின்னர் ஓட்டுக்கட்டட பள்ளியாகவுமே இயங்கி வந்துள்ளது. இந்நிலையில், மாணவிகளின் வசதியைக் கருத்தில் கொண்டும், பழைய கட்டடத்தின் நிலையைக் கருத்தில் கொண்டும், ஒரு புதிய பள்ளிக்கட்டிடம் கட்டும் பணியை அப்போதைய தலைமையாசிரியை Sr. S. லூர்து அமலி அவர்கள் முன்னெடுத்தார்கள். புதிய கட்டடத்தின் அடிக்கல்லானது, Fr. அலெக்ஸாண்டர் FSG அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, Dr. Franz Josef Vollmer மற்றும் அவரது மனைவி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பள்ளி கட்டுமானத்தில் Fr. யூஜின் அவர்களும் பல்வேறு வகைகளில் உதவினார். 2020-இல் இப்பள்ளியின் நூற்றாண்டு விழாவாக இருப்பினும், கொரோனா சூழ்நிலை காரணமாக இதுவரை கொண்டாடப்படவில்லை.
மேதகு ஆயர் தாமஸ் ஃபெர்ணான்டோ ஆண்டகையின் ஆயர் பணிக்காலத்தின் போது (1971-1990), ஐந்து புதிய கன்னியர் துறவற சபைகளைத் திருச்சி மறைமாவட்டத்தை மையமாகக் கொண்டு தோற்றுவித்தார். இச்சபைகள் திருச்சி திருச்சபையின் கீழுள்ள கிராமப்புற வளர்ச்சி மற்றும் பங்குப்பணி உதவிகளில் பங்காற்றும் தொலைநோக்குடன் ஏற்படுத்தப்பட்டன.
இங்கனம் உருவான சபைகளில் ஒன்று - “புனித தோமையார் கன்னியர் சபை” (FST - Franciscan Sisters of St. Thomas). தொடக்கத்தில் கப்புச்சின் சபைத் துறவியர்களின் மேற்பார்வையில் இயங்கி வந்த சபையானது, பிற்காலத்தில் தனித்து செயல்பட ஆரம்பித்தது.
சபை உருவான தொடக்கத்திலேயே, மலையடிப்பட்டியிலும் ஒரு மடம் ஆரம்பிக்கப்பட்டது. மலையடிவாரத்திலுள்ள, கோவிலுக்குச் சொந்தமான நிலம் இதற்காக வழங்கப்பட்டது. வறண்ட பூமியான இந்நிலம், இச்சகோதரிகளின் முயற்சியால் முந்திரிக்காடாக மாற்றப்பட்டது. மேலும், கன்னியர்கள் வசிப்பதற்கான கட்டிடம் சாலைக்கு வலது புறமாக எழுப்பப்பட்டது.
அதன் பின்புறமாக, ஏழைப் பெண்குழந்தைகள் தங்கிப் படிப்பதற்காக ஒரு விடுதியும் கட்டப்பட்டது. இவ்விடுதியானது, இன்று வரை ஏழைக்குடும்பங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக சிறப்பாக இயங்கி வருகிறது. இங்குள்ள குழந்தைகள், தொடக்கக் கல்வியை தூய தெரசாள் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை அரசு உயர் நிலைப் பள்ளியிலும் பயில்கின்றனர். இவ்விடுதியின் மூலம் பயன்பெற்ற பலரும் இன்று நல்ல பதவிகளில் பணியாற்றி வருகின்றனர்.
கல்வி மட்டுமல்லாத ஆன்மீகம் மற்றும் சுய ஒழுக்கமும் இக்குழந்தைகளுக்கு போதிக்கப்படுகிறது. பங்கில் நடைபெறும் தினசரித் திருப்பலிக்கு இவர்கள் தவறுவதில்லை; மேலும், திருத்தலத்திலும், பங்குப்பணிகளிலும் தங்களாலான அனைத்து உதவிகளையும் மனமுவந்து செய்து வருவது குறிப்பிடத்தகுந்தது.
பிற்காலத்தில், தூய தோமையார் ஆலயமானது, திருத்தலமாகச் செயல்படத் தொடங்கிய போது, இதன் ஆன்மீகப் பணி உதவிகளை இச்சகோதரிகள் சிறப்புற ஆற்றினர்.
மேலும், அவ்விடுதியில் வாழ்ந்த பல கத்தோலிக்க குழந்தைகள், இச்சகோதரிகளின் எளிய துறவற வாழ்வு முறைகளால் ஈர்க்கப்பட்டு, இதே சபையில் கன்னியர்களாக உருவாகி, இறையழைத்தல் பணியாற்றிவருவது இச்சபை சகோதரிகளின் தன்னலமற்ற துறவற வாழ்விற்கு சிறந்த உதாரணம்.
மக்களின் உயர்கல்வித்தேவைகளைக் கருத்தில் கொண்டும், இதற்காக பல கிலோமீட்டர்கள் தூரம் நடந்து சென்று கல்வி கற்கும் நிலை இருந்ததாலும், 1967-ஆம் ஆண்டு, C.N. அண்ணாத்துரை அவர்கள் தமிழக முதலமைச்சராக பணியாற்றிய காலத்தில், மலைக்கு வடக்கே, சாலைக்கு அருகில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியானது, தமிழக அரசால் நிறுவப்பட்டு, 53-ஆண்டுகளாக, இன்று வரை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அதுவரை நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்த சவேரியார் பள்ளி மீண்டும் துவக்கப்பள்ளியாக மாற்றப்பட்டது. 2017-ஆம் ஆண்டு, இப்பள்ளியின் 50 ஆண்டு பொன்விழா நிறைவையொட்டி, ஒரு அலங்கார நினைவு வளைவும், இரும்பு கதவும் பள்ளியில் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது.