மலையடிப்பட்டியின் வரலாற்றினைக் குறித்து அறிய, அக்காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியல் நகர்வுகளைக் குறிப்பிடுவது அவசியமாகிறது. 1659-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் இறுதியில் மைசூர்ப் படை திருச்சிராப்பள்ளியை முற்றுகையிடுவதற்காக வந்து கொண்டிருந்தன. மைசூர் மன்னர் கந்திவரன் 1656 -இல் மதுரை நாயக்கருக்கு எதிராகப் போர் தொடுக்க வந்தார். நீர் வளமும் நில வளமும் மிக்க சத்தியமங்கலத்தைக் கைப்பற்றி ஊர்ப்புறமெங்கிலும் கொள்ளையடித்துச் சூறையாடினர் படைவீரர்கள். இதனால் மறைப்பணித்தளத்திலுள்ள கிறிஸ்தவ மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இப்போரில் மைசூர்ப் படைவீரர்கள் மதுரை நாயக்கரின் படையினரின் மூக்குகளை அறுக்கும் வன்செயலில் ஈடுபட்டனர். நாயக்௧ரின் படையினரால் இறுதியில் அவர்கள் துரத்தி விரட்டப்பட்டாலும், மீண்டும் அவர்களின் படைடுயடுப்பால் திருச்சிராப்பள்ளி நகரமே கவலையிலும் கலக்கத்திலும் ஆழ்ந்தது. அப்போது மதுரையை ஆண்ட மன்னர் சொக்கநாதர். இவர் திருமலை நாயக்கரின் பேரன்; இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கரின் மகன். 1659-ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் தமது 16-வது அகவையிலேயே அரியணை ஏறியவர்.
இந்நிலையில், மைசூர்ப் படைகளின் வருகையை அறிந்த கிறிஸ்தவர்களும் அச்சமுற்றனர். பழி பாதகங்களுக்கு அஞ்சாதவர்கள் கைகளில் சிக்குண்டு மாய்ந்து விடுவோமோ என்ற பயம் அவர்களைக் கவ்விக் கொண்டது. இந்நிலையில், கிறிஸ்தவர்களைக் காப்பாற்றி பாதுகாப்பான வேறு இடத்தில் குடியமர்த்த விழைந்தார் அந்தோனி ஃப்ரொவென்சா (Antony Proenca) எனும் போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த இயேசு சபைத் துறவி (Madurai Old Mission); இவர் ‘பரமானந்த சுவாமிகள்’ எனும் பண்டார புனைப்பெயரில் அறியப்பட்டார்.
விடுதலைப் பயணம்
அடிகளார், அங்கிருந்த கிறிஸ்தவர்களை ஒன்று சேர்த்துப் பாதுகாப்பான இடம் தேடித் திருச்சிராப்பள்ளியிலிருந்து தென்மேற்கு திசையை நோக்கிப் பயணமானார். மதுரை மறைப்பணித்தளத்தின் அதிபராக இருந்த ஃப்ரொவென்சா பல ஆண்டுகள் திருச்சிராப்பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணியாற்றியவர். இவர் திருச்சிராப்பள்ளியில் காந்தலூர், மலையடிப்பட்டி போன்ற மறைப்பணித்தளப் (விடத்திலாம்பூண்டி) பகுதிகளிலும் கிறிஸ்தவம் துளிர்விட்டுத் தழைக்க அரும்பாடுபட்டவர். 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற விருது வாக்குடன் வாழ்ந்தவர்.
முழு அர்ப்பணிப்பு
இவர் 1656-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 14-ஆம் நாள் இயேசு சபைத் தலைவர் ஒலிவாவுக்கு எழுதிய மடலில் தம்மை ஒரு 'பரங்கி' என்று இந்துக்கள் இழித்துரைப்பதற்கு ஏதுவாகத் தம் உடலின் நிறம் வெள்ளையாக இருப்பதால் அந்த நிறத்தைக் கருப்பாக மாற்றுவதற்காகக் களிம்பு கிடைத்தால் அதை அனுப்புமாறு கேட்டிருந்தார். தமது உடை, உணவு, மொழி ஆகியவற்றை முற்றிலும் மாற்றிக் கொண்டு அருள்பணி செய்த ஃப்ரொவென்சா அடிகளார் தம் உடலின் நிறத்தையும் கிறிஸ்துவின் நற்செய்தியின் பொருட்டு மாற்றிக் கொள்ள ஆவல்கொண்டார். இதனை ஒரு சிறுபிள்ளைத்தனமான வேண்டுகோள் எனக் கருதிட வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மணப்பாறையை நெருங்கியவுடன் அதன் அருகே உள்ள விடத்திலாம்பூண்டி (இன்றைய விடத்திலாம்பட்டி) எனும் சிற்றூர் பாதுகாப்பானது என்பதை அறிந்த ஃப்ரொவென்சா அடிகளார், கிறிஸ்தவர்களைக் அவ்வூரில் குடியேற்றினார். விடத்திலாம்பூண்டி திருச்சிராப்பள்ளியிலிருந்து 20 கல் தொலைவில் உள்ளது. மரங்கள் அடர்ந்து. குன்றுகள் சூழ்ந்து இயற்கையிலேயே ஓர் அரணாக அது விளங்கியது. மேலும் அப்பகுதியில் வாழ்ந்தோர் பெரும்பாலானோர் வறியவர்கள். அதனால் கொள்ளையடிக்கும் நோக்கில் அந்நியப் படைகள் அங்கு வருவதற்கும் வாய்ப்பில்லை.
ஃப்ரொவென்சா அடிகளார் தங்குவதற்காக ஒரு ஓலைக் குடிசையை மக்கள் அமைத்தனர்; இரு மாதங்கள் அக்குடிசையில்தான் அவர் தங்கினார். ஏற்கெனவே மறைக்கல்வி கற்பிக்கப்பட்டுத் தயாரிப்புச் செய்யப்பட்டிருந்த 40 பேருக்கு அவர் திருமுழுக்கு அளித்தார்.
குமாரவாடி ஜமீன்தார்
அதைத் தொடர்ந்து குமாரவாடி ஜமீன்தாரின் ஆதரவைப் பெறுவதற்காக அவரைச் சந்தித்தார். இந்த ஜமீன்தார் மதுரை நாயக்க மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டவர். ஒரு குறுநில மன்னராக அப்பகுதியை ஆட்சி செய்தார். அவர் அடிகளாரை மரியாதையோடு வரவேற்று அன்புடன் உரையாடிக் கிறிஸ்தவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பதாக உறுதி கூறினார். அருகாமையிலுள்ள சிற்றூர் மக்களுக்கும் அவரை அறிமுகம் செய்தார். கிறிஸ்தவர்கள் குடியேறுவதற்காகத் தகுந்த இடத்தை அவரே தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தையும் தந்தார்.
முற்றிலும் எதிர்பாராத அளவுக்கு குமாரவாடி ஜமீன்தார் அளித்த ஆதரவால் மகிழ்வுற்ற கிறிஸ்தவர்கள் தாங்கள் வழிபடுவதற்காக ஒரு கோயிலையும், அருள்பணியாளர் தங்குவதற்கு ஓர் இல்லமும் கட்ட முயற்சிகள் மேற்கொண்டனர். கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மேலைநாட்டுச் சந்நியாசி போதிக்கும் புதிய மறை தங்கள் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என அச்சமுற்ற சில இந்துக்கள், கிறிஸ்தவர்கள் கோயில் கட்டுவதைக் கடுமையாக எதிர்த்தனர்; அதை நிறுத்துமாறு வற்புறுத்தினர். எதிர்ப்பு அலைகள் எழும்பிய சூழலில் அந்தோனி ஃப்ரொவென்சா குமாரவாடி ஜமீன்தாரைச் சந்தித்தார். வற்புறுத்தலால் அல்ல, உரையாடலால் தான் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சிறந்தது என்பதை ஜமீன்தார் தெளிவுபடுத்தினார். அவரது அறிவுரையை ஏற்று அப்பகுதி இந்துக்களைச் சந்தித்து அடிகளார் உரையாடினார்; அவர்களின் ஆதரவைப் பெற்றார். அதனால் அமைதி ஏற்பட்டது. எத்தடையுமின்றிக் கோயிலும் கட்டி முடிக்கப்பட்டது.
முதல் உயிர்ப்பு பெருவிழா
1660-ஆம் ஆண்டு உயிர்ப்புப் பெருவிழா (28-03-1660) மிக ஆடம்பரமாகக் கொண்டாடப்பட்டது. இது கிறிஸ்தவர்களின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத நாள். கோயிலையும் பீடத்தையும் அலங்கரிப்பதற்காகப் பெரும் எண்ணிக்கையில் மலர்க் கொத்துக்களை ஜமீன்தாரே அனுப்பி வைத்தார். பாதுகாப்பிற்காக இரு அதிகாரிகளைச் செல்லுமாறு பணித்தார். மேலும் அவரே பட்டாடை உடுத்திக் குதிரைமீது அமர்ந்து தீப்பந்தம் ஏந்தியோர் புடைசூழக் கோயிலுக்கு விடியற்காலையிலேயே வந்தார். வழிபாட்டு நிகழ்வுகள் முடியும் வரை பங்கேற்றார். பீட அலங்காரத்தைக் கண்டு வியந்தார்; மனதாரப் பாராட்டினார். மிக ஆடம்பரமாகக் கொண்டாடப்பட்ட உயிர்ப்புப்பெருவிழாவினால் ஒரு சில இந்துக்கள் எரிச்சலுற்றனர். பொறாமைத் தீ அவர்களின் உள்ளங்களில் கொழுந்துவிட்டு எரிந்தது.
இந்நிலையில் விடத்திலாம்பூண்டியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும், மழை பொய்த்தமைக்குக் கிறிஸ்தவர்கள் தான் காரணம் என்ற குற்றச்சாட்டை வைத்தனர். சாமியாடிய சிறுமி ஒருத்தி எல்லையம்மனுக்கு விருப்பமான இடத்தில் கிறிஸ்தவர்கள் கோயில் கட்டியதால் கடும் அழிவுகளை ஊர் மக்கள் சந்திக்க நேரிடும் என வாக்குரைத்தாள். இவ்வேளையில் புயலால் விழுந்த மரத்தினால் எல்லையம்மன் கோயிலின் ஒரு பகுதி சேதமுற்றது. இதற்கும் கிறிஸ்தவா்கள் தான் காரணம் என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவியது. இருப்பினும் ஜமீன்தார் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகவே இருந்தார். சில இந்துக்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அவர் “மைசூர்ப் படையைக் கண்டு பயந்து ஓடிய இந்தக் கிறிஸ்தவர்களைப் பார்த்தா எல்லையம்மன் ஓடிப்போய்விட்டது! இந்தக் கிறிஸ்தவ சந்நியாசியை விரட்டியடிக்க எத்தனித்தால் இதைவிடப் பெரும் துன்பத்தை அவர் உங்களுக்குச் செய்யலாம். ஆகவே அவர்களுக்கு யாதொரு தீங்கும் செய்யாதீர்கள்,” என்று அறிவுறுத்தினார். அதன்பிறகு கிறிஸ்தவர்கள் அங்கு நிம்மதியாக வாழ்ந்தனர்.
அந்தோனி ஃப்ரொவென்சா விடத்திலாம்பூண்டியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தொடர்ந்து பணியாற்றினார். இரு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கோயிலுக்கு உட்பட்டு 400 கிறிஸ்தவர்கள் இருந்தனர். இவ்வளர்ச்சி நற்செய்திப்பணிக்கு மேலும் உரமூட்டுவதாக அமைந்தது. ஜமீன்தாரும் கிறிஸ்தவத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்; அதற்கு ஆதரவாகவே பேசினார்; கிறிஸ்தவர்களின் கள்ளமற்ற பண்பை வெளிப்படையாகவே பாராட்டினர். ஃப்ரொவென்சா ஓர் இரவு முழுவதும் அவரோடு விண்ணுலகைப்பற்றி உரையாடியதாகத் தமது மடலில் குறிப்பிட்டுள்ளார். அவரது இறைவேண்டலால் ஜமீன்தாரின் அவையில் இருந்த இரு பெண்கள் பேயின் பிடியிலிருந்து விடுதலை பெற்றனர். அவர் மந்திரித்துத் தந்த சாம்பலைப் பூசியதால் அவரது சகோதரியே குணமானார். இருப்பினும் அவருக்குப் பல மனைவிகள் இருந்ததாலும் அவரது சாதியைச் சேர்ந்தவர்களுக்கு அஞ்சியதாலும் ஜமீன்தார் திருமுழுக்குப் பெறவில்லை. ஃப்ரொவென்சா விடத்திலாம்பூண்டியில் இல்லாத போது இந்துக்கள் சிலர் கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததால் கடும் சினமுற்ற சில கயவர்கள் கிறிஸ்தவ ஆலயத்துக்குத் தீ வைத்துக் கொளுத்தினர். அது முற்றிலும் எரிந்து சாம்பலானது.
ஊருக்குத் திரும்பிய அடிகளார் கோயில் தீக்கிரையானதைக் கண்டு வருந்தினார். இருப்பினும் அவர் மனம் தளராமல் ஒரு புதிய கோயிலைக் கட்ட முயற்சிகள் செய்தார். இந்நிலையில் இந்துக்கள் ஜமீன்தாரிடம் சென்று, “நீங்கள் எங்களை விடப் புதிதாகக் குடியேறிய கிறிஸ்தவர்களை அதிகம் விரும்புகிறீர்கள்; அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள்; ஆதலால் நாங்கள் வேறு இடத்துக்குச் சென்று விடுகிறோம்,” என்று கூறினர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜமீன்தார் கிறிஸ்தவர்களை விடத்திலாம்பூண்டியின் தென்மேற்கில் நான்கு மைல் தொலைவில் உள்ள முள்ளிப்பாடியில் குடியேறுமாறு கேட்டுக்கொண்டார்.
மக்களும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டு முள்ளிப்பாடி நோக்கி தங்கள் காலடிகளை வைத்தனர். இதிலிருந்து இம்மறைதளத்தின் வரலாறு தன் அடுத்த அத்தியாயத்திற்குச் செல்கிறது.