இந்தியாவின் கிறிஸ்தவ மறைபரப்பு வரலாறு அப்போஸ்தலரான புனித தோமையாரின் காலத்திற்கு எடுத்துச் செல்கிறது. அப்போஸ்தலர்கள் அனைவரும் மறைபரப்பு பணிக்காக பல்வேறு தேசங்களுக்கு பயணம் சென்ற போது, கி.பி. 52-இல் புனித தோமையார் இந்தியாவிற்கு வருகை தந்தார். கேரளாவின் (அன்றைய சேர நாடு) கிராங்கனூரிலிருந்து, மலபார் பகுதிகளை மையமாகக் கொண்டு பணி செய்து, மைலாப்பூர் நோக்கி பயணம் செய்து சென்னை சின்னமலையில் கி.பி. 72-இல் மறைசாட்சியாக மரித்தார். எனினும், இவரின் மறைபரப்பு விதைகள் மலபார் பகுதிகளை விட்டு வெளியே செல்லவில்லை. இப்பகுதி மக்கள் இன்றுவரை தோமையார் கிறிஸ்தவர்களாகவே அறியப் படுகின்றனர் (Syrian Catholics). எனினும், இவரின் இறப்பிற்குப் பின் மைலாப்பூரில் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் நிலை என்னவாயிற்று என்பது வரலாற்றில் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.
இந்தியாவின் பிற்பகுதி மறைபரப்பு வரலாறு கோவாவிலிருந்து தொடங்குகிறது. போர்த்துக்கீசிய கடல் வழி வாணிபரான வாஸ்கோடாகாமா, இந்தியாவிற்கு கடல் வழியினை கண்டறிந்து 1498-இல் கோவா-கள்ளிக்கோட்டையில் தரையிறங்கிய போது, தன்னுடன் சில மறைபரப்பு பணியாளர்களையும் கொணர்ந்தார் (அக்காலத்தில், கடல்வழிப் பயணத்தின் போது, ஆன்மீகத் தேவைகளுக்காக குருக்களையும் - Chaplins உடன் அழைத்துச் செல்வது வழக்கம். இவ்வாறு போர்த்துக்கீசிய வாணிபத்தோடு, கோவாவை மையமாகக் கொண்டு கிறிஸ்தவ மறைபரப்பு பணிகளும் இந்தியாவெங்கும் துளிர்விடத் தொடங்கின. இந்நிலையில் தூத்துக்குடி இதில் ஒரு முக்கியத் தளமாக விளங்கியது - முத்து மற்றும் கடல் வழி வாணிபத்திற்கு சாதகமாக கடற்துறைமுகம் இங்கு செயல்பட்டு வந்தது இதன் முக்கிய காரணமாகும்.
இந்நிலையில், புனித சவேரியார் (1506–1552) புனித இஞ்ஞாசியாரால் மனமாற்றம் அடைந்த பின், மறைபரப்பு பணிக்காக இந்தியா வந்தடைந்தார். கோவாவிலிருந்து இந்தியா முழுவதும் பயணம் செய்து கிறிஸ்தவத்தை வளர்த்தார். குறிப்பாக, தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் இவரது பணி அளப்பரியது. இன்றும் இம்மக்கள் சவேரியார் கிறிஸ்தவர்களாகவே அறியப்படுகின்றனர்.
தூத்துக்குடி மறைபரப்பு பணிகளின் நீட்சியாக, கொன்சாலோ ஃபெர்னான்டஸ் எனும் இயேசு சபைத்துறவி, 1595-1606 ஆண்டுகளில், மதுரைப் பகுதிகளில் கடுமையான மறைபரப்பு பணிகளைச் செய்தும், பலனேதுமில்லை - ஒருவர் கூட கிறிஸ்தவ மறையை ஏற்கவில்லை.
இச்சூழ்நிலையில் ராபர்ட் டி நொபிலி அடிகளார் நவம்பர் 15, 1606 முதல் மதுரையை தனி மறைத்தள மையமாகக் கொண்டு செயல்படத் தொடங்கினார் - 30,000 க்கும் அதிகமானோருக்கு திருமுழுக்கு வழங்கினார். இம்மறைத்தளப் பணிகளானது, பின்னாட்களில் பெரிதும் வளர்ச்சியடைந்து, மேலும் பல மறைப்பணியாளர்கள் மூலம், பல்வேறு மறைபணித்தளங்களாக உருமாறியது. இது பழைய மதுரை மிஷன் (Old Madura Mission) என்று அழைக்கப்படுகிறது.
அவருக்குப் பின், புனித அருளானந்தர் (1647–1693) மறவநாட்டுப் (சிவகங்கை) பகுதிகளில் கிறிஸ்தவத்தை வளர்த்து, இறுதியில் மறைசாட்சியாய் மரித்தார். இவருடைய காலங்களில், புறத்தாக்குடி, வடுகர்பேட்டை போன்ற பழமை வாய்ந்த பங்குகளில், இவர் பங்குத்தந்தையாக பணியாற்றியதற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன. பிற்காலத்தில், 1691-ஆம் ஆண்டு புனித அருளானந்தர் பங்கு விசாரணைக்காக மலையடிப்பட்டி மறைபணித்தளத்திற்கு வருகை புரிந்தது வரலாற்று ஏடுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மலையடிப்பட்டி மறைத்தளத்தின் முன்னோடியான அந்தோணி ஃப்ரொவென்சா அடிகளாரும், இம்மறைத்தள உருவாக்கத்திற்கு முன்னர், சிறிது காலம் புனித அருளானந்தருடன் மறவ நாட்டுப் பகுதிகளில் பணி செய்து வந்துள்ளார்.
இச்சூழ்நிலையில், நாயக்கர்களின் தலைநகரானது 1616-இல் முத்துவீரப்ப நாயக்கரால், மதுரையிலிருந்து திருச்சிக்கு இடம் மாற்றப்பட்டது; இதனடிப்படையில், மதுரையின் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. இதன் காரணமாக, ராபர்ட் டி நொபிலி 1623-இல் திருச்சி பகுதிகளில் மறைபரப்பு பணிகளைத் தொடங்கி எண்ணற்ற ஆன்மாக்களை கிறிஸ்தவத்தின் பால் ஈர்த்தார்.
பின்னாட்களில், வீரமாமுனிவர் என்று அழைக்கப்பட்ட பெஸ்கி அடிகளார், தந்தை நொபிலி வித்திட்டுச் சென்ற இம்மறை விதைகளுக்கு, ஆன்மீகம் என்னும் நீர் ஊற்றி ஆலமர விழுதுகளாய் - திருச்சி மறைப்பணித்தளமாக, 1680–1747 வரையுள்ள ஆண்டுகளில் வளர்த்தெடுத்தார். இத்தகு அரும்பணியாற்றிய, இம்மாபெரும் மறைபுனிதர், 04-02-1747-இல் இறையடி சேர்ந்து அம்பலக்காடு என்ற இடத்தில் புதைக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறினாலும், மலையடிப்பட்டி மறைத்தளத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டதாக தொடக்கத்திலிருந்து பரவலாக நம்பப்பட்டு வருகிறது.
திருச்சி பகுதிகளில் புதிதாக மறைப்பணிகளை முன்னெடுப்பதில், உதவிய இன்னபிற இயேசு சபை மறைபரப்பு குருக்களின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இன்றியமையாதது; வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தது. இவர்களே இத்திருச்சி திருச்சபையின் முன்னோடிகளாவர்.
பண்டாரசுவாமிகள் அமைப்பு
இவ்வாறாக நொபிலியால் விதையிட்டு, வீரமாமுனிவரால் வளர்த்தெடுத்த திருச்சி மறைபரப்பின் போது 'பண்டாரசுவாமிகள்' எனும் ஒரு புதிய யுக்தி கையாளப்பட்டது. அதாவது, பிராமணர் அல்லாதோர் மத்தியிலும் பணியாற்றும் நோக்கில், இம்மறைபணியாளர்கள் தங்கள் பெயர்களை உள்ளூர் நடையில் மாற்றிக் கொண்டு (சுவாமி, ஆனந்தர், முனி, சந்நியாசி), அவர்களின் வாழ்க்கை முறையே தமதாக ஏற்றுக் கொண்டு (கலாச்சாரவியல் - Inculturation), கீழ் தட்டு மக்களுக்கான கிறிஸ்தவ சந்நியாசிகளாக அல்லது முனிவர்களாகத் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டனர்.
இதே போல வேதியர்கள் மத்தியிலும் இருவகை பணியாளர்கள் இருந்தனர். உபதேசியார் எனப்படுபவர் மேல்தட்டு மக்களுக்காகவும், பண்டாரம் அடித்தட்டு மக்களுக்காகவும் பணிபுரிந்தனர். இத்தகு பாகுபாட்டு முறை, வேகமான கிறிஸ்தவ வளர்ச்சியில் நல்ல பலன் தந்தாலும், தமிழக திருச்சபையில் இன்று வரை புரையோடிக் கிடக்கும் சாதியப்பாகுபாடுகளுக்கு, இதுவும் ஒரு ஆழமான காரணம் என்பது மறுக்க இயலா உண்மை.
திருச்சி மறைத்தளத்தின் பண்டாரசுவாமிகளில், காந்தலூரில் - Fr. பல்த்தார் டி கொஸ்டா (முதல் பண்டாரசுவாமி), மலையடிப்பட்டியில் - Fr. அந்தோணி ப்ரொவென்சா (பரமானந்த சுவாமிகள் ~1662) மற்றும் ஆவூரில் - Fr. ஜான் வெனான்சியுஸ் புசே (பெரிய சஞ்சீவிநாதர்) ஆகியோர் இம்மறைத்தளங்களின் ஆணிவேராக அறியப்படுகினர். இவர்களே, இம்மூன்று பழமை வாய்ந்த மறைத்தலங்களையும் உருவாக்கியவர்கள். இதில், மலையடிப்பட்டி மறைப்பணித்தள வரலாற்றினை விரிவாகக் கண்டறிய முயல்கிறோம்.