1708-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இயேசு சபைத் துறவியரின் மடல்கள் முள்ளிப்பாடி மறைத்தளத்தின் புதிய பெயரான ‘மலையடிப்பட்டி’ பணித்தளத்தைப் பற்றிக் கூறுகின்றன. இதுவே முதல் முதலாக ‘மலையடிப்பட்டி’ என்னும் பெயர் வரலாற்று ஏடுகளில் பதியப்பட்ட காலம்.
முந்தைய வரலாற்றில் குறிப்பிட்டது போல, முள்ளிப்பாடியில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், சிலகாலம் மறைவிடங்களில் வாழ்ந்து (20 Years - No Records Found), பின்னர் 1700-களிலிருந்து புலம் பெயர்ந்து, முள்ளிப்பாடிக்கு தெங்கிழக்கே, 300 மீட்டருக்கு அப்பாலுள்ள தற்போது கிராமம் அமைந்துள்ள பகுதிகளில் குடியேறியிருக்க வேண்டும். மலைக்கற்கள் புரண்டு வீடுகள் மீது விழும் அபாயத்தாலும், உடல் நலச்சீர்கேடுகளை முன்னிட்டும் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். பின்னாட்களில், இக்கிராமம் ‘மலையடிப்பட்டி’ என்ற பெயர் பெற்றது.
பெயர்க்காரணம்
மலையடிவாரம் + பட்டி = “மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஊர்”
மரபு வழியாக அறிந்த வரை இம்மலையில் செழிப்புற வளரும், அதீதமான ஆலஞ்செடிகள் (ஆலாம்பழம்) காரணமாக, 17-ஆம் நூற்றாண்டு வரை ஆலன் மலை அல்லது ஆலாமலை என்றழைக்கப்பட்டு வந்தது. பிற்காலத்தில், 1714-இல் தோமையார் சிற்றாலயம் அமைக்கப்பட்ட காலத்திலிருந்து தோமையார் மலை எனும் சுட்டுப்பெயர் பெற்று, நாளடைவில் அதுவே சுயபெயராகிப்போனது.
‘பட்டி’ எனும் சொல்லை ஆராய்ந்தால், முல்லை நிலத்துச் சிற்றூர்களைப் ‘பட்டி’ என்று அழைக்கும் வழக்கம் தமிழக கலாச்சாரத்தில் பண்டைய காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது. காடுகளில் கால்நடைகளை மேயவிட்டு மாலையில் அவற்றை ஓரிடத்தில் அடைப்பர். அவ்விடத்திற்கு ‘பட்டி’ என்று பெயர். நாளடைவில், ஊர்ப்பெயர்களிலும் அது நிலைத்து விட்டது.
பின் குறிப்பு : 1700-களில் ‘மலையடிப்பட்டி’ எனும் புது குடியிருப்புப்பகுதி உருவாகத் தொடங்கியிருந்தாலும், முள்ளிப்பாடி மறைபணித்தளம் இன்னும் செயல்பாட்டில் தான் இருந்தது; முழுவதுமாக கைவிடப்படவில்லை; 1714-இல் பனிமய அன்னை ஆலயம் கட்டப்படும் வரை முள்ளிப்பாடி மறைத்தளம் அவ்விடத்திலேயே செயல்பட்டு வந்தது.
1708 முதல் 1712 வரை இம்மானுவேல் தோஸ் ரேஸ் (Emmanuel does Reys) அடிகளார், இப்ப்பணித்தளத்தைக் கண்காணித்தார். இங்கிருந்து அவர் திண்டுக்கல் சென்று அப்பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்களைச் சந்தித்து அருள் பணி தேவைகளை நிறைவேற்றினார்.
தமிழ் கத்தோலிக்க வரலாற்றில் ‘திண்டுக்கல்’ எனும் பெயர் இவரைக் குறித்த ஆவணமாகிய ‘The Annual Letter of Madura Mission’, 1711 எனும் கடிதத்தில் முதல் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளது; இதே கடிதத்தில் மலையடிப்பட்டியில் வாழ்ந்து வந்த கம்மாள கிறிஸ்தவர்களின் குண நலங்களைப் பற்றியும் தந்தையவர்கள் இவ்வாறு விளக்கியிருக்கிறார் - “இரும்பை அடித்து வளைத்து இவர்கள் செய்யும் தொழில் போலவே, இவர்கள் உள்ளமும் இரும்பைப் போல் கடினமாகிப் போய்விட்டது; தங்க மனம் கொண்ட மறைப்பணியாளர் கூட இவர்கள் மத்தியில் பொறுமை இழப்பார்.”
திண்டுக்கல் - மலையடிப்பட்டியின் கீழ் இயங்கி வந்த அக்காலகட்டத்தில், நல்லமநாயக்கன்பட்டியில் ஒரு ஆலயம் தந்தை அவர்களால் கட்டப்பட்டது; மேலும் திண்டுக்கலிலுள்ள தற்போதைய உத்தமபாளையம் பங்கு, 1774 வரை மலையடிப்பட்டி மறைத்தளத்தின் கீழ் செயல்பட்டு வந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.
அவரது அரும் முயற்சியால் 1709-இல் 236 பேரும், 1712-இல் 200 பேரும், 1713-இல் 120 பேரும் மனம் திரும்பினர். உடல் நோயால் நலிவுற்றுத் தொடர்ந்து வருந்திய இப்பணியாளர் 1713-ஆம் ஆண்டு முத்துக்குளித்துறைக்கு அனுப்பப்பட்டார். இவர் மட்டுமல்லாது இங்குப் பணியாற்றிய சில பணியாளர்கள் நோய் பீடிக்கப்பட்டு வாடினர். கோடையில் கடுமையான வெயில், குளிர் காலத்தில் வீசும் பனிக்காற்று, சுகாதாரமற்ற தண்ணீர் போன்றவை அவர்களைப் பாதித்திருக்க வேண்டும்.
1714-ஆம் ஆண்டு மலையடிப்பட்டியில் பணியாற்றியவர் அந்தோணி டயஸ் (Antony Dias). இவர் தமிழில் ‘கர்த்த நாதன்’ என அழைக்கப் பட்டார். ஏற்கெனவே இருந்த கோயில் தாழ்வான பகுதியில் சதுப்பு நிலத்தில் இருந்ததால் ஒரு புதிய ஆலயத்தைப் பாளையக்காரர் முத்துநாயக்கர் தாராள உள்ளத்தோடு அளித்த நிதியுதவியோடு கட்டியெழுப்பினார். இதைப் பனிமய மாதாவுக்கு அர்ப்பணித்தார். ஆவூர் ஆலயத்தைவிடப் பழமை வாய்ந்த ஆலயமாக இது திகழ்வது குறிப்பிடத்தக்கது. (விரிவான விளக்கம் ஆலயங்கள் வரலாற்றில் கொடுக்கப் பட்டுள்ளது).
அந்தோனி ரிக்கார்டி (Antony Riccardi) 1714 முதல் 1726 வரை மலையடிப்பட்டியில் அருள்பணியாற்றியவர். இந்துக்களின் பலத்த எதிர்ப்பையும் மீறிச் சிற்றூர்களில் ஆலயங்கள் பல கட்டினார். மணப்பாறைக்கு வடக்கே உடையாபட்டியில் ஆலயம் அப்போது கட்டப்பட்டது. 1718-இல் பூலாம்பட்டி மற்றும் பூலாம்பட்டியில் வீரப்பூர் ஜமீன்தார் மற்றும் சில வன்னிய கிறிஸ்தவர்கள் உதவியுடன் சிற்றாலயங்கள் எழுப்பப்பட்டன.
தந்தையவர்கள் முயற்சியால், 1718-இல் பழனியில் ஒரு ஆலயம் கட்டப்பட்டது - இவ்வாலயம் மட்டுமே சில காலங்கள் வரை அழிவுறாமல் பாதுகாக்கப்பட்டது. இக்காலகட்டத்தில், மலையடிப்பட்டி மறைத்தலமானது பழனி வரை பரந்து விரிந்திருந்தது இதன் மூலம் புலப்படுகிறது (1740-இல் பழனியில் 100 பெரியவர்களுக்கும் & 400 சிறுவர்களுக்கும் Fr. ஜான் பாப்டிஸ்ட் புட்டாரி (John Baptist Bhuttari) அடிகளார் திருமுழுக்கு வழங்கியதாக வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன - இப்பணியாளர் குறித்து வேறெந்த தகவலும் இல்லை).
இக்காலத்தில் கிறிஸ்தவர்களும் மறைப்பணியாளர்களும் எண்ணற்ற துன்பங்களையும் கொடுமைகளையும் சந்திக்க நேரிட்டது. கிறிஸ்தவர்கள் அரும்பாடுபட்டுக் களிமண்ணால் ஆலயங்கள் எழுப்பி அவற்றைக் கூரையால் வேய்ந்தனர். அவற்றைப் பிற சமயச் சகோதரார்கள் சிலர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் தீவைத்து எரித்தனர்.
மறைப்பணியாளர்களும் பயணம் செய்யும் போது பல்வேறு தாக்குதல்களுக்கு இரையாயினர்: 1718 இல் அந்தோனி ரிக்கார்டியும், அவரது வேதியர்களும் சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இரு சமயங்களில் அடிகளார் இறப்பின் எல்லைக்கே சென்று விட்டார். இருமுறையும் நோயில்பூசுதல் அருளடையாளத்தைப் பெற்றார்.
1726-இல் மலையடிப்பட்டிஃயில் பணியாற்றிய ஜோசப் வியேரா (Joseph Vieyra) ஜமீன்தாரார்களின் ஆதரவைப் பெற்றார். கடவூர் ஜமீன்தார் முட்டிநாயக்கன் ஓர் ஆலயம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார். மருங்காபுரி ஜமீன்தார் ரூச்சிநாயக்கன் (Ruccinayaken), தனது நிலத்தில் ஆலயம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்ட விரும்பியும் போர் நடைபெற்றதால் அது நடைபெறவில்லை. வீரப்பூர் ஜமீன்தார் கம்பைநாயக்கன் அல்லது அவரது முதன்மை அமைச்சர் தனது பகுதியில் இருந்த ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தவும், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தவும், திருமுழுக்குப் பெறத் தயாரிப்புச் செய்தோரின் காதுகளை அறுக்கவும் விழைந்தார்.
முதன்மை அமைச்சர், ஜோசப் வியேரா அடிகளாரைச் சந்தித்தபோது அவரது எளிமையையும் நல்லுள்ளத்தையும் புரிந்துகொண்டு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதோடு அவரிடம் மன்னிப்புக் கோரினார். கிறிஸ்தவர்களை இனியும் துன்புறுத்த மாட்டோம் என்று உறுதியளித்தார்.
1729-இல் கிறிஸ்தவர்கள் அம்மை நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அன்னை மரியாவிடம் உருக்கமாக வேண்டினர். அவர்களது வேண்டுதல் கேட்கப்பட்டது. நோயினின்று சுகம் பெற்றனர்.
பின் குறிப்பு : 1730-1773 வரை மலையடிப்பட்டியும், மதுரையும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே மறைபணியாளரின் கண்காணிப்பில் இயங்கி வந்தது. இச்சூழ்நிலையில், 1730-இல் பிரான்சிஸ் ஹோமெமும் (Francis Homem - ஆவூர் ஆலயம் கட்டியவர்), 1731-ல் ஜான் அலெக்சாண்டரும் (John Alexander) பணியாற்றினர்.
1732 முதல் 1746 வரை இம்மறைப்பணித்தளத்தில் உழைத்தவர் சால்வதோர் தோஸ் ரேஸ் (Salvator dos Reys). இவரது காலத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியது. 426 பேர் திருமுழுக்குப் பெற்றனர். அதேவேளையில் ஜமீன்தார்களிடையே ஏற்பட்ட பூசலாலும், சண்டை சச்சரவாலும் அப்பகுதியில் அமைதியில்லை. போர் மூண்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாயினர். ஜோசப் வியேரா, கிறிஸ்தவர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தொடர்ந்து இறைவனிடம் வேண்டினார்; இறைவனின் திருச்சபை பெரும் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டது.
இருப்பினும் அவ்வப்போது சில இடையூறுகள் ஏற்பட்டன. எடுத்துக்காட்டாக, தன்னை இந்து யோகி என்ற ஒருவன்- எப்போதும் நிர்வாணமாக இருப்பவன்-இப்பகுதிக்கு வந்தான். இந்துக்கள் அவனிடம், “மழை ஏன் இங்கு பெய்யவில்லை?” என்று கேட்க, அவன் “கிறிஸ்தவர்களும் வேதியரும் இங்கு இருப்பதால் தான் வானம் பொய்த்து விட்டது. எங்கெல்லாம் சிலுவை காணப்படுகிறதோ, அங்கெல்லாம் மழை பெய்யாது, ” என்றான். இதனால் கோபம் கொண்ட மக்கள், ஜமீன்தாரின் அனுமதியோடு வேதியரைக் கைது செய்து கொல்ல முயன்றனர். இந்நிலையில் ஜமீன்தாரின் மனைவி குறுக்கிட்டு, யோகி சொல்வது பொய் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தாள். மேலும் தன்னை யோகி என்று கூறிக் கொண்டவன் வேசிப்பெண் ஒருத்தியின் வீட்டில் தங்கியிருந்தது தெரிந்ததால், அவனைப் பிடித்துக் கழுதை மீது அமர்த்திச் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லஜமீன்தார் உத்தரவிட்டார். இவ்வாறு பிரச்சினை தீர்ந்தது.
மழைப்புதுமை
ஜமீன்தார்கள் எப்போதும் கிறிஸ்தவர்களின் பாதுகாவலர்களாக விளங்கினர். கடவூர் ஜமீனில் கிறிஸ்தவர்கள் கோயில் ஒன்றைக் கட்டினார். இது இந்துக்களிடம் பரபரப்பையும் கடும் கோபத்தையும் ஏற்படுத்தியது. அவர்கள் ஜமீன்தாரிடம் சென்று, “கிறிஸ்தவக் கோயிலால் எங்கள் தெய்வங்கள் எல்லாம் ஊரை விட்டே ஓடிவிட்டன,” என்று முறையிட்டனர். உடனே அவர், “கிறிஸ்தவர்கள் கட்டிய இச்சிறிய கோயிலால் எவ்வாறு உங்கள் எண்ணற்ற தெய்வங்கள் ஊரைவிட்டு ஓடிப் போக முடியும்?” என்று கேட்டார். மேலும் அவர், “உங்கள் தெய்வங்களிடம் மழை பெய்யுமாறு வேண்டுங்கள்; அவ்வாறு மூன்று நாள்களில் மழை பெய்தால் கிறிஸ்தவ ஆலயத்தை இடித்துவிடுங்கள்,” என்றார். ஆனால் அவர்கள் வேண்டுதல் செய்தும் மழை பெய்யவில்லை. மாறாக கிறிஸ்தவர்கள் இறைவனிடம் வேண்டிய பிறகு, ஐந்தாம் நாள் மழை பெய்தது. ஜமீன்தாரும் கிறிஸ்தவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்தார்.
ஜமீன்தார் துன்புறுத்தல் (1745)
ஏறத்தாழ 1745-இல் கடவூருக்குப் புதிதாக ஒரு ஜமீன்தார் பெறுப்பேற்றார். அவா் கிறிஸ்தவர்கள் மீது பரிவு காட்டவில்லை. அதனால் அவர்கள் இன்னல்கள் அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஜமீன்தார் ஒரு கிறிஸ்தவரிடம் சிலைகளை வழிபடுமாறு கூறினார். அதற்கு அவர் மறுத்ததால் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டார். வேறு இரு கிறிஸ்தவர்களைப் பிடித்துத் தாங்கள் திருடவில்லை என்பதை நிரூபிக்கக் கொதிக்கும் நெய்க்குள் கையை விடுமாறு வற்புறுத்தப்பட்டனர். தொடர்ந்து அவர்களை சிலைகளை வழிபடுமாறும், அவ்வாறு செய்யவில்லை எனில் கொலை செய்வோம் என்றும் மிரட்டப்பட்டனர். ஆனால் கிறிஸ்தவர்களோ, “நாங்கள் கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கைக்காக இறக்கவும் தயார்,” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். பின்னர் ஒரு சிறு தொகையை அவர் அபராதமாகக் கட்டச் செய்து அவர்களை விடுவித்தார்.
மராத்திய படையெடுப்பு (1745-1750)
1745-ஆம் ஆண்டு மராட்டியப் படைகள் (ஹைதர் அலி) இப்பகுதி வழியாகச் சென்றன. இதனால் அச்சமுற்ற கிறிஸ்தவர்கள் ஊரைவிட்டு வெளியேறிக் காடுகளில் தஞ்சம் புகுந்தனர். இதனால் கோபமுற்ற படைவீரர்கள் வீடுகளுக்குள் நுழைந்து பொருட்களைச் சூறையாடிவிட்டு, அவற்றை இடித்து விட்டுச் சென்றுவிட்டனர்.
ஜேம்ஸ் ஹார்ட்மேன் (1750 ~)
1750-ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஹார்ட்மேன் (James Hartman) மறைப்பணித்தளத்தின் பொறுப்பாளராக இருந்தபோது, கடவூரில் மீண்டும் சமயத் துன்புறுத்தல் நடைபெற்றது. அருளப்பன் என்ற கிறிஸ்தவரைப் பிடித்துச் சிலைகளை வழிபடுமாறு துன்புறுத்தினர். “விண்ணகத்திலுள்ள உண்மைக் கடவுளை அடைவதற்காக எத்துன்பத்தையும் தாங்கத் தயார்,” என்று உணர்ச்சி பொங்க அவர் கூறியதைக் கேட்டுப் பிற இந்துக்கள் அதிர்ச்சியுற்றனர்.
மேலும், 1750-இல் கிறிஸ்து பிறப்புத் திருவிழா அன்று திருப்பலியின்போது புதிய ஜமீன்தாரின் படைவீரர்கள் முள்ளிப்பாடி (பழைய கூரை) ஆலயத்திற்குள் நுழைந்து கிறிஸ்தவர்களைப் பணத்திற்காகக் கைது செய்து சிறையிலடைத்தனர். பல நாள்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட அவர்கள் களைப்புற்று நடைபிணமாக மெலிந்து ஊர்களுக்குத் திரும்பினர்.
இதற்கு பின்பாக கிடைத்த வரலாற்று சான்றுகள் அனைத்தும், ஜமீன்தார்களுக்கு இடையே நிகழ்ந்த சண்டைகளையும், 1765-1858 வரை, இந்தியா முழுமையும் பரவிய பஞ்சத்தை பற்றி மட்டுமே கூறுகின்றன. தொடர்ச்சியாக 12 பஞ்சங்களை இந்தியா எதிர்கொண்டது. பருவ மழைகள் பொய்த்ததால், மக்கள் உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டது.
இச்சூழ்நிலையில், மக்களின் அல்லல் தீர்க்கும் பணிகள் குறித்த முன்னெடுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், மறைபரப்பு பணிகள் குறித்த எந்த ஆவணங்களும் தெளிவாக ஆவணப்படுத்தப்படவில்லை; கிடைக்கவில்லை. இந்த பஞ்சத்தின் போது, உணவுப் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு, அப்போதைய மறைபணியாளர்களால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டதாக அறிகிறோம்; மக்களின் ஆழ்துயர் வேளையிலும், இம்மறைபணியாளர்கள் அவர்களின் கண்ணீர் துடைக்க மேற்கொண்ட அளப்பரிய பணிகளை எண்ணும் போது உள்ளம் உணர்ச்சியால் பொங்குகிறது.
ஆசிரியர்: Fr. S. தேவராஜ்,
புத்தகம் : காலச்சுவடுகள், (பக்கங்கள்: 62-74),
திருச்சி: சிகரம் பதிப்பகம், மே - 2015.
(இதுவரை கொடுக்கப்பட்டுள்ள வரலாற்றுத் தகவல்களில் பெரும்பகுதி இந்நூலிலிருந்து எடுக்கப்பட்டது)