1998-2003 வரை ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர் கோம்பையான்பட்டி மண்ணின் மைந்தர் தந்தை S. திருத்துவதாஸ்; இவருக்கு முன் பணிபுரிந்த தந்தை V. மரிய அற்புதம் அவர்களும் இதே ஊரைச் சார்ந்தவர் என்பதும்,இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதும் கூடுதல் தகவல்.
இளம் குருவாக, மலையடிப்பட்டியின் பங்குப்பொறுப்பை ஏற்ற தந்தை அவர்களுக்கு, தன் குருத்துவ வாழ்வில் இது தான் முதல் பங்கு மற்றும் பணி புரிந்த ஒரே பங்கு - இதற்கு பின் மேல் படிப்பிற்காகச் வெளிநாடு சென்று, பின்னர் இறையியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இளம் குருவாக இருப்பினும், அரிய பல பணிகளை தைரியமாக முன்னெடுத்து, அனைத்திலும் வெற்றி கண்டார். அதில் முதன்மையானது சவேரியார் ஆலய புதுப்பித்தல் பணி.
அகில உலகத் திருச்சபையின் 2000-ஆம் ஆண்டு ஜூபிலி கொண்டாட்டத்தின் நினைவாக, ஆலயத்திற்கு வர்ணம் பூசும் பணியினை மேற்கொண்டார். ஆறு மாத காலமாக உள்ளூர் கலைஞர்களைக் கொண்டே வர்ணம் பூசப்பட்டு, சில புணரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, அப்போதைய ஆயர் மேதகு அந்தோணி டிவோட்டா அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு மறு அர்ப்பணிப்பு செய்யப்பட்டது.
மலைத்திருத்தலத்தைப் பொருத்தவரை, மண்ணின் மைந்தர் Fr. I. ஆரோக்கியம் அவர்களின் நிதியுதவியுடன், கோவிலுக்கு முன்பாக உள்ள மைதானத்தில் ஒரு நீண்ட திறந்தவெளி அரங்க அமைப்பை (Annexure Hall) ஏற்படுத்தி கான்கிரீட் கூரை அமைத்தார். இது கோவிலின் முன்புறத்திலிருந்து நீண்டு திருப்பலி நிறைவேற்றும் சிறிய மேடை வரை அமைக்கப்பட்டது. மேலும் இதே காலகட்டத்தில், பழைய கோவிலுக்கு பின்புறமாக ஒரு புதிய கோபுரம் அமைக்கும் பணி நடந்தது. எனினும் இக்கோபுர வேலை முழுமை பெறவில்லை.
தந்தையவர்களின் பணிக்காலத்தின் போது இளையோரின் வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். போஸ்கோ இளையோர் இயக்கம் தொடங்கப்பட்டு, ஆக்கப்பூர்வமான பல பணிகளை மேற்கொள்ள தந்தையவர்கள் உறுதுணையாக இருந்தார்கள்.
19-ஆம் நூற்றாண்டில் பெனடிக்ட் புர்தி மற்றும் 20-ஆம் நூற்றாண்டில் பத்திநாதர் அடிகளாரும் வரலாற்று ஆளுமைகளாக அடையாளப்படுத்திது போலவே, மலையடிப்பட்டி மறைத்தள வரலாற்றில் 21-ஆம் நூற்றாண்டின் தவிற்க்க இயலா ஆளுமையாக தந்தை யூஜின் அடிகளாரை மொழிவது, மறுக்க இயலா உண்மை. நான்கு (2003-2007) ஆண்டு காலம் மட்டுமே பணிபுரிந்தாலும், தந்தையவர்களால் முன்னெடுக்கப்பட்ட அரிய பல பணிகளைக் குறித்து தனி அத்தியாயம் எழுதப் பட வேண்டும்.
முதல் வருடம்: மலையடிப்பட்டிக்குத் தேவையான நலத்திட்டப்பணிகள் குறித்து முதல் வருடம் ஆழ்ந்து ஆய்வு செய்த தந்தையவர்கள், அதற்கான முன்வரைவுகளை அவ்வாண்டின் இறுதியில் வரையாக்கம் செய்து, இரண்டாம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இப்பணிகள் அனைத்தும் அதிவிரைவாக முடிக்கப்பட்டன.
இரண்டாம் வருடம் : இதன்படி, லூர்து அன்னை கெபி, தூய சவேரியார் தொடக்கப்பள்ளி, சிறுமலர் பங்குத்தந்தை இல்லம் மற்றும் தூய தோமையார் சமூகப்பணிக்கூடம் ஆகிய புதியகட்டுமானப்பணிகளுக்கான அடிக்கற்கள் (07-06-2004) அன்று நடப்பட்டு, ஒரே ஆண்டில் அனைத்துப்பணிகளும் முடிக்கப்பட்டு, 10-03-2005 அன்று ஆயர் அந்தோணி டிவோட்டா அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு ஒரே நாளில் திறந்து வைக்கப்பட்டது. இதே போன்ற ஒரு வரலாறு 120 ஆண்டுகளுக்கு முன்பாக தந்தை பெனடிக்ட் புர்தி அடிகளாரின் பணிக்காலத்தின் போதும் நிகழ்ந்ததை ஒரு வரலாற்று மீள்நீட்சியாகக் கருதலாம் - The History Repeats.
மூன்றாம் ஆண்டு : இக்கட்டுமானப் பணிகளுக்குப் பின், தந்தையவர்களின் பார்வை தூய தோமையார் திருத்தலத்தின் மீது படிந்தது. தந்தையவர்களின் பணிக்காலத்தின் இறுதி இரண்டு ஆண்டுகளில், திருத்தல சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. திறந்த வெளி அரங்கம், சிலுவைப்பதை நிலைகள், புதிய மேடை, அழியா சிலுவை மாடம், கழிவறை, குடிநீர் வசதி, படிக்கட்டு கைப்பிடி, திருப்பணி அறைகள், பின்புற கோபுரம் என நாம் இப்போது காணும் அனைத்து வசதிகளும் தந்தையவர்களால் ஏற்படுத்தப்பட்டவை. (ஆலய வரலாற்றில் விரிவாகக் காண்க)
இவ்வாறாக, திருத்தல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஜூலைத் திங்கள் 2005 தொடங்கி மே திங்கள் 2006 வரை செய்திட்ட பணிகள் அனைத்தையும் 25-05-2006 அன்று, மேதகு ஆயர் அந்தோணி டிவோட்டா அவர்கள் திருத்தலத்தின் 39ஆம் வார நவநாள் தினத்தன்று திருத்தல பக்தர்களின் ஆன்மீக நலனுக்காக அர்ப்பணம் செய்தார்.
கட்டுமானப் பணிகள் மட்டுமல்லாது, தந்தை அவர்களின் சீரிய முயற்சியினால் தோமையார் நவநாள் பக்தி முயற்சிகள் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெற தொடங்கியது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் 10.30 மணிக்கு நவநாள் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதமும், குணமளிக்கும் வழிபாடும் நடைபெற்றது. மாலையிலும் ஒரு திருப்பலி நிறைவேற்றப் பட்டது. ஞாயிற்றுக் கிழமைகளிலும் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. மக்களின் உதவியுடன் தோமையார் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வந்தது. அந்த காலகட்டத்தில் தோமையார் பக்தர்கள் நூற்றுக்கணக்கில் சுற்றுப்புற ஊர்களில் இருந்து வரத்தொடங்கினர். தந்தையவர்களின் இப்பணிகள் அனைத்தும், இத்திருத்தலத்தின் பொன்னான நாட்கள் என்று மொழிந்தால் அது மிகையாகாது.
நான்காம் ஆண்டு : இப்பங்கின் முதன்மையான பழம்பெரும் அடையாளமான பனிமய அன்னை ஆலயமும் (1714) தந்தையவர்களின் முயற்சியால் புத்துரு பெற்றது. மக்களின் தாராள உதவியுடன், 293 வயதான, இப்பழம்பெரும் ஆலயம் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொழிவு பெற்றது. மறுசீரமைக்கப்பட்ட இவ்வழகிய ஆலயமானது, 28 மார்ச், 2007 அன்று, அப்போதைய திருச்சி ஆயர் மேதகு அந்தோணி டிவோட்டா அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு, இறைமக்களின் ஆன்மீக நலனுக்காக மீண்டும் பனிமய அன்னைக்கு மறு அர்ப்பணம் செய்யப்பட்டது. (இவ்வேளையில், சவேரியார் தொடக்கப் பள்ளி புதிய கட்டடத்தில் செயல்படத் தொடங்கியிருந்ததால், பழைய பள்ளிக்கட்டிடம் தகர்க்கப்பட்டு, ஆலய வளாகம் விசாலமாக்கப்பட்டது). பல ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருந்த ஆலயத்தை தொடர்ந்து பயன்படுத்தும் தொலைநோக்குப் பார்வையோடு, அனைத்து மாலைத்திருப்பலிகளும் இவ்வாலயத்திலேயே நிறைவேற்றும் வழக்கம் தந்தையவர்களால் அறிமுகப்படுத்தப் பட்டது.
வரலாற்று ஒற்றுமை : புர்தி அடிகளாரின் பணிக்கலத்திற்கும், 120 ஆண்டுகளுக்குப் பின் யூஜின் அடிகளாரின் பணிக்காலத்திற்கும் இடையே எண்ணற்ற ஒற்றுமைகளைக் காணலாம்; எனினும், 40 ஆண்டுகள் புர்தி செய்த பணிகளை, நான்கே ஆண்டுகளில் அருட்தந்தை யூஜின் அடியகளார் வெற்றிகரமாக நிகழ்த்தி முடித்தார் என்பது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய உண்மை.
பிற்காலப் பணிகள் : இதன் பின் இரண்டாண்டு காலம் அம்பிகாபுரத்தில் பணியாற்றிய பின், மரியன்னை பேராலயத்தின் பங்குத்தந்தையாக பொருப்பேற்ற தந்தையவர்கள், புதிய மரியன்னைப் பேராலயத்தைக் கட்டி முடித்தார். பின்னாட்களில், திருச்சி மறைமாவட்டத்தின் முதன்மைகுருவாகப் பணியாற்றினார் என்பது, இப்பங்கின் முன்னாள் பங்குத்தந்தை என்ற வகையில் இப்பங்கிற்கு கிடைத்த பெருமையாகவே கருதலாம்.
திருச்சி துரைசாமிபுரம் மண்ணின் மைந்தரான அருட்தந்தை S. லூயிஸ் பிரிட்டோ அவர்கள் 2007-2009 களில் பணியாற்றினார்கள். தந்தையவர்கள் மக்களின் ஆன்மீக வாழ்வு மற்றும் இறைமக்களின் ஒற்றுமை ஆகிய கண்ணோட்டங்களுடன் சிறந்த பணிகளை மேற்கொண்டார்கள்; இளைஞர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அவர்களை ஆக்கப்பூர்வமான பணிகளின் ஈடுபடுத்தினார்கள். விடுமுறை விவிலிய வகுப்புகள் (VBS) எப்பொழுதுமில்லாத அளவில் அதிக ஈடுபாட்டுடன் நடத்தப்பட்டது.
மேம்பாட்டுப் பணிகளைப் பொருத்தவரை, தோமையார் திருத்தலத்தில், அரங்கத்தின் கீழாக மேற்குபுறம், சறுக்கு தளத்திற்கு அருகிலுள்ள காலியான பகுதியை (தந்தை யூஜின் அவர்களால் ஆழ்துளைக் கிணறு இடப்பட்ட இடம்) சமன்செய்து, ஒரு திருப்பண்ட அறையை அமைத்து புனித பொருட்கள் விற்கும் அங்காடியாக்கினார். அதற்கு முன்புறத்தில் ஒரு தோமையார் சுரூபத்தையும் நிறுவினார்.
திருத்தல மேடையின் இரு புறங்களிலும் தோமையார் சாட்சி சொரூபங்களை அழகான கண்ணாடி மாடங்களில் நிறுவினார். மேலும், மலையின் மேற்குப் புறமாக செல்லும், ஒற்றையடிப் பாதையின் ஒரு பாறையில் மிகச்சிறிய திருக்குடும்ப கெபியானது தொன்றுதொட்டு இருந்து வந்தது. அது சிதிலமடைந்ததால், அப்பாறையின் தொன்றுதொட்ட புனிதத்தை பாதுகாக்கும் நோக்கில், அது விண்ணேற்பு ஆண்டவர் கெபியாக மாற்றப்பட்டது.
தந்தையவர்கள் இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால் பங்கின் பாடகற்குழு இவரின் பணிக்காலத்தின் போது புத்துயிர் பெற்றது. புதிதாக இசைக்கருவிப் பெட்டி (Keyboard), அதற்கென தனியான ஒலி பெருக்கிப் பெட்டி மற்றும் (Speaker), ஒலிவாங்கிகள் (Microphone) பாடகற்குழுவிற்கென வாங்கப்பட்டது. பாடகற்குழு பயிற்சியின் போது தானும் கலந்து கொண்டு, சிறப்பாக பயிற்சி அளித்தார். பாடகர்குழுவிற்கான போட்டி மற்றும் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. பனிமய அன்னை திருவிழாவின் போது, பாட்டுக்கச்சேரி ஒன்று நடத்தப்பட்டது.
19. Fr. S. ஜேம்ஸ் செல்வநாதன்
(2009-2012)அமைதியே அருவான தந்தை ஜேம்ஸ் செல்வநாதன் அவர்கள் கொசவபட்டியின் மண்ணின் மைந்தர். 2009-2012 இல் மலையடிப்பட்டியின் பங்குத்தந்தையாக பணியாற்றிய போது, இவர் ஆற்றிய ஆன்மீகப் பணிகள் போற்றத்தகுந்தவை. போதனையோடு நில்லாது, தன் வாழ்விலும் வாழ்ந்து காட்டிய இவரது போக்கு மக்கள் பலரை நல்வழிக்கு ஈர்த்தது.
இந்நிலையில், 2011-ஆம் ஆண்டில், இவ்வாலயத்தின் 125 ஆண்டு ஜூபிலி நினைவாக (1885-2011), ஆலய புதுப்பிக்கும் பணியானது, தந்தையவர்களால் முன்னெடுக்கப்பட்டது. ஆலய புதுப்பிக்கும் பணியானது, 04-12-2010 அன்று முன்னாள் பங்குத் தந்தை Fr. T. யூஜின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆலயத்தின் வெளிப்புறம் முழுவதும் உள்ள சுண்ணாம்பு பூச்சு முழுவதுமாக சுரண்டி எடுக்கப் பட்டு, சிமெண்ட்டால் பூசப்பட்டது. மேலும், பல்வேறு புணரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, ஒருவருட கடின உழைப்பினால், புதுப்பொழிவு பெற்ற ஆலயமானது, 08-04-2012 அன்று மேதகு ஆயர் அந்தோணி டிவோட்டா அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, மறு அர்ப்பணிப்பு செய்யப்பட்டது.
இப்பணிக்காக சுமார் 40 லட்சங்களுக்கு மேல் செலவு செய்யப்பட்டது. மக்களின் நன்கொடையானது பற்றாக்குறையானதால், தந்தை ஜேம்ஸ் செல்வநாதன் தன் குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தை கொசவபட்டியில் விற்று, இதற்கான கடனை அடைத்தார் என்பது வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய உண்மை.
மேலும், இதே காலகட்டத்தில் தோமையார் மலையின் மத்தியப்பகுதியின் உச்சியில் ஒரு உயர்ந்த இரும்புச் சிலுவை நிறுவப்பட்டது. இதற்கான நிதி Fr. I. ஆரோக்கியம் அவர்களால் வழங்கப்பட்டது.
இளம் வயதிலேயே, இத்தகு பழம்பெரும் பங்கின் பொறுப்பை ஏற்றாலும், தந்தை ஜோசப் அடிகளார், இளமைக்கேற்ற துடிப்புடனும், ஆர்வத்துடனும் பல்வேறு பணிகளை மேற்கொண்டார். சிறிது தொய்வு கண்ட திருத்தல ஆன்மீகப் பணிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினார். ஒவ்வொரு மாதமும், பௌர்ணமி தின திருவிழிப்பு செபக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. மக்களிடமும் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
2014 ம் ஆண்டில், ஆலயத்தின் 300ம் ஆண்டு விழாவைச் சிறப்பிக்கும் விதமாக, தந்தையவர்களின் முயற்சியால், இவ்வாலயம் மீண்டும் மறுசீரமைக்கப் பட்டு, ஆலயத்தின் முன்பாக அன்னைக்கு நினைவு கெபி ஒன்று நிறுவப்பட்டது. மேலும், 27-09-2014 அன்று, அன்னைக்கு தங்கத் தேரோட்டமும் நடைபெற்றது. இவ்விழாவின் பெரிய தேரோட்டம் நடைபெற்ற போது, அதிசயமாக பெருமழை பொழிந்த நிகழ்வு, அன்னையின் புதுமையாகவே நம்பப்படுகிறது.
2016 ஆம் ஆண்டிலிருந்து, நான்கு ஆண்டுகளாக இன்று வரை இப்பங்கினை நிர்வகித்து வருபவர், திருச்சி மரியன்னைப் பேராலய பங்கின் மண்ணின் மைந்தரான் அருட்தந்தை. அம்புரோஸ் அவர்கள். சிறந்த மறையுரைகளுக்கு சொந்தக்காரரான தந்தையவர்கள், தன் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல், முழு ஆர்வத்துடனும், கடவுளின் கருணையாலும், அரிய பல ஆன்மீகப் பணிகளை இன்று வரை ஆற்றி வருகிறார்கள். இளையோரை மத்தியில் தந்தையவர்கள் மிகப்பிடித்தமானவராக இருக்கிறார். தந்தையவர்களின் ஈடுபாட்டினால், போஸ்கோ இளையோர் இயக்கமானது புத்துயிர் பெற்று ‘சிறகுகள்’ இளையோர் இயக்கமாக செயல்பட்டு வருகிறது.
தந்தையவர்களின் இப்பணிக்காலத்தின் போது, சவேரியார் ஆலயத்தின் ஒலிபெருக்கி கருவிகள் மேம்படுத்தப்பட்டன. மேலும் அன்றாட வாழ்வில் தேவைப்படும் புணரமைப்புப் பணிகள் தக்ககாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், 01-07-2020 அன்று ஒரு இறை இரக்க ஆண்டவர் சொரூபம், தூய தோமையார் திருத்தலத்தின் முன்புற அரங்கத்தின் மேல் பகுதியில், கிராமத்தை நோக்கி ஆசீர்வதிக்கும் வகையில் நிறுவப்பட்டது. மேலும் இதன் தொடர்ச்சியாகபுனித வீரமாமுனிவர், புனித அருளானந்தர், புனித சவேரியார் ஆகிய புனிதர்களின் சொரூபங்களும் நிறுவப்பட்டு, 15-08-2020 அன்று அன்னை மரியாளின் விண்ணேற்பு திருநாளன்று ஆசிர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.