இதுவரை கூறப்பட்டுள்ள தொடக்க வரலாற்றுப் பதிவுகளை மலையடிப்பட்டி வரலாற்றின் முதல் அத்தியாயமாகக் கொள்ளலாம். இந்த முதல் அத்தியாய காலங்களில் பணியாற்றிய அனைத்து குருக்களும், பழைய மதுரை மறைத்தளத்தைச் சார்ந்த போர்த்துக்கீசிய இயேசு சபைக் குருக்களாவர். இவர்கள் பதுரவாதோ அதிகாரத்தின் கீழ் செயல்பட்டு வந்தனர். (பதுரவாதோ குறித்து கீழே விளக்கமாக காண்போம்)
மலையடிப்பட்டி மறைத்தலத்தின் இரண்டாம் அத்தியாயத்தின் பிற்கால வரலாறு குறித்து அறிய வேண்டுமெனில், அதனை இங்கு அமைந்துள்ள கோவில்களின் வரலாற்றுப் பின்னனியாகவும், இந்திய கத்தோலிக்க திருச்சபையில் ஏற்பட்ட மாற்றங்களில் பின்னனியிலேயே தொகுக்க இயலும். இதனடிப்படையில் இந்திய மற்றும் தமிழக கத்தோலிக்க மறைபரப்பு வரலாற்று நகர்வுகளைக் குறிப்பிடுவது அவசியமாகிறது.
உலகெங்கும் சிறப்பாக மறைபரப்புப் பணிகளை செய்து வந்த இயேசு சபையானது, ஒரு சில காரணங்களால் பாப்பரசர் பதிநான்காம் கிளமென்ட் அவர்களின் ஆணையின் பேரில் ஜூலை 21-07-1773 முதல் உலகெங்கும் தடை செய்யப் பட்டு, 14-08-1814 வரை, 41 வருடங்கள் இருண்ட காலமாக நீடித்தது.
இந்தத் தடை ஏற்பட்ட காலத்தில், சற்றேறக்குறைய 65 ஆண்டுகள் மதுரை மறைமாநில மறைத்தளங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மலையடிப்பட்டியில் பணிபுரிந்து கொண்டிருந்த இயேசு சபைக் குருக்களும் தங்கள் சொந்த நாடுகளுக்கே திரும்பினர். இயேசு சபையினர் இல்லாத காலகட்டத்தில், கோவா மறைமாவட்டத்திலிருந்து வேறு சபை மறைப்பணியாளர்கள் பணி செய்துள்ளனர். இவர்களால் சிறப்பாக பணி புரிய இயலவில்லை. இவர்கள் மலையடிப்பட்டியில், தூய பனிமய மாதா ஆலயத்தை தங்களது ஆளுகைக்குக் கீழ் கொணர்ந்து, முழு அதிகாரத்தையும் உரிமையாக்கிக் கொண்டனர். இவ்வாறு ஆதிக்கம் செலுத்தியதற்குக் காரணம் “பதுரவாதோ” எனும் சிறப்பு உரிமையாகும்.
அதாவது போர்த்துக்கீசியர்கள் கண்டுபிடித்த எல்லா நாடுகளிலும், இனி கண்டு பிடிக்கும் நாடுகளிலும் கிறிஸ்தவ மறையை உருவாக்குவதற்கும், அதற்கு தேவையான மறைப்பணியாளர்களை அனுப்புவதற்கும் உரிய அதிகாரம் போர்த்துக்கீசிய மன்னருக்குத் தரப்பட்டது. மேலும் புதிய மறைமாவட்டங்களுக்கு நியமிக்கவும் மன்னருக்கு உரிமை வழங்கப்பட்டது. இவர்களின் இவ்வகையான உரிமைகளுக்கு பாப்பரசரின் அனுமதி தேவையில்லை. இத்தகைய மறைபரப்புப் பணி மற்றும் அருள்பணி சார்ந்த உரிமையும், அதிகாரமும் ‘பதுரவாதோ’ என்று எனப்பட்டது. இத்தகு உரிமைகள் 1514-ஆம் ஆண்டில் திருத்தந்தை 6-ஆம் அலெக்ஸாண்டர் போர்த்துக்கீசியருக்கு வழங்கினார். இதே போன்று ஸ்பனியர்களுக்கு வழங்கப்பட்ட உரிமை ‘பதுரநாதோ’ என்று அழைக்கப்பட்டது; ஆனால் ஸ்பானியர்கள் இந்தியாவிற்குள் பணி செய்யவில்லை.
கோவா மறைமாவட்டப் பேராயர் போர்த்துக்கீசிய மன்னரின் அதிகாரத்துக்கு உட்பட்டவர். அவரும் அவரது அதிகாரத்துக்கு உட்பட்டுப் பணியாற்றிய அனைத்து அருள்பணியாளர்களும் மேற்கூறிய சிறப்பு ஆன்மீகச் சலுகைகளைப் பெற்றிருப்பதாக எண்ணியதால், இயேசு சபையின் முந்தைய பணித்தளங்களை ஊடுருவி அவற்றை ஆக்கிரமித்துக் கொள்வதில் தீவிரம் காட்டினர்.
இதே சூழ்நிலைதான் மலையடிப்பட்டி மறைத்தளத்திலும் நடந்தேறியது. தூய பனிமய அன்னை பங்கின் அதிகாரத்தை, கோவாவிலிருந்து வந்த பதுரவாதோ மறைமாவட்ட குருக்கள் (இயேசு சபை சாராதவர்கள்) அதிகார வலிமையுடன் தங்கள் வசம் எடுத்துக் கொண்டனர். இக்கோவா குருக்களின் பணி அவ்வளவு சிறப்பானதாக இல்லை. மக்கள் மத்தியிலும் இவர்கள் குறித்த ஆதங்கமே நிலவி வந்தது. எப்போது விடிவு காலம் பிறக்குமோ என்று ஏங்கி, இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தனர். இந்த பத்ரவாதோ கோவா குருக்கள் சென்னை மைலாப்பூரைத் தலைமையாகக் (Diocese) கொண்டு, திருச்சியை மையமாகக் (Province) கொண்டு பணிபுரிந்தனர்.
Fr. சின்னப்பன்
இந்த இடைப்பட்ட இருண்ட காலத்தில், மலையடிப்பட்டி மறைத்தளத்தில் பணியாற்றிய குருக்கள் குறித்த தெளிவான வரலாறு இல்லை; எனினும் Fr. சின்னப்பன் எனும் குருவானவர் இங்கு பணியாற்றியிருக்கிறார். மேலும், இவர் இறுதி வரை எந்த விதமான சமாதான உடன்பாடிற்கும் ஒத்துழைக்கவில்லை. மலையடிப்பட்டியில் இறந்த இவரை வீரமாமுனிவர் கல்லறைக்கு வெளிப்புறமாக அடக்கம் செய்தனர்.
Fr. ஜோவன்னஸ் ஃபோர்டு (1849-1892)
இவருக்குப்பின், Fr. ஜோவன்னஸ் ஃபோர்டு (John Ford) எனும் அயர்லாந்து மறைப்பணியாளர் இங்கு பணியாற்றியிருகிறார். இவருக்கான வரலாற்றுக் குறிப்புகள் மிகத் துல்லியமாகவே கிடைத்துள்ளன: 09-11-1831 ல் பிறந்த இவர், அயர்லாந்து லுக்டுநென்சிஸ் இயேசு சபை மறைமாநிலத்தில் இணைந்து, குருமாணவராகப் பயிற்சி பெற்று, மறைப்பணியாற்றும் ஆவலில், குருப்பட்டம் பெரும் முன்னரே, 01-04-1849 அன்று இந்தியா வந்திறங்கினார்.
அருட்சகோதரராக இருந்த அவர் மலையடிப்பட்டி பனிமய அன்னை ஆலயத்தில் இறைப்பணி செய்து கொண்டே குருவானவருக்கான பயிற்சியும் பெற்று வந்தார். 1858-இல் நாகப்பட்டினத்தில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு, மீண்டும் மலையடிப்பட்டி பனிமய அன்னை பத்ரவாதோ பங்கின் பங்குத்தந்தையாக செயல்பட்டார். இந்நிலையில், 04-04-1864 அன்று தனது இறுதி வார்த்தைப்பாட்டினை அளித்தார். சரியாக 43 ஆண்டுகள் பணியாற்றிய பின்பு 04-04-1892 அன்று உயிர் துறந்தார்.
(சவேரியார் பங்கின் முன்னோடியான Fr. பெனடிக்ட் புர்தி அவர்களும் 43 ஆண்டுகள் இதே காலகட்டத்தில் தான் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது - இதே காலகட்டத்தில் தான் புதிய சவேரியார் ஆலயமும் கட்டப்பட்டது). இவரது உடல் வீரமாமுனிவர் கல்லறைக்கு வெளிப்புறமாக நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர், 21-ஆம் நூற்றாண்டில் இவரது கல்லறை சிலுவை மட்டும் கல்லறைக்கு உட்புறமாக மாற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவரின் இறப்பிற்குப் பிறகு, 1893-இல் ஒரு சில உடன்படிக்கைகள் மூலமாக மலைத்தாதம்பட்டியும் சவேரியார் பங்கின் கீழ் கொண்டுவரப்பட்டது.
தற்காலிக பதுரவாதோ மறைப்பணியாளர்கள்
இவருக்குப்பின் 1893-1922 வரை பணியாற்றிய மறைப்பணியாளர்கள் குறித்த பதிவுகள் கிடைக்கவில்லை. 1922-லிருந்து சில குருக்கள் திருப்பணிகளுக்காக தற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் இப்பங்கில் தங்கி பணியாற்றவில்லை. மாறாக அவ்வப்போது திருச்சியிலிருந்து இங்கு வந்து ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தனர். இதன்படி, 1922-1927 - வரை Fr. J.N.S.மெஸ்குவிட்டா; 1928-1929 - வரை Fr. M. மோத்தா வாஸ்; 1929-1932 - வரை Fr. Q. ரோட்ரிகஸ் ஆகியோர் இத்தகு தற்காலிக பணியாளர்களாக வந்து சென்றனர். இக்காலகட்டத்தில் இப்பங்கின் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக இருந்தது.
இதன் பின் இப்பனிமய அன்னை பங்கு தன் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது. 1932-ஆம் ஆண்டின் வரலாற்று ஆவணங்கள் படி இப்பங்கு பதுரவாதோ கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என்பது உறுதியாகிறது.
இது ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க, நாற்பது ஆண்டுகளுக்கு நீடித்த இயேசுசபைத்தடையானது, ஆகஸ்டு 7, 1814, பாப்பரசர் ஏழாம் பத்திநாதரால் விலக்கிக்கொள்ளப் பட்டு, இயேசு சபை மீண்டும் செயல்படத் தொடங்கிற்று. இந்தியாவிலும், இயேசு சபை புதிதாக 1838-இல் கட்டமைக்கப்பட்டது. இது ‘புதிய மதுரை மிஷன்’ (New Madura Mission) என்று அழைக்கப் படுகிறது. இப்புதிய மதுரை மறைத்தளத்தில் பணியாற்ற, பிரஞ்சு தேச இயேசு சபைத் துறவிகள் வருகை புரிந்தனர். தங்கள் முன்னாள் குருக்கள் ஏற்கனவே பணிபுரிந்து வந்த இடங்களில் மீண்டும் மறைபரப்புப் பணிகளைத் தொடர அவர்கள் விரும்பினர்.
ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் பணித்தளங்களை தங்கள் அதிகாரத்தின் வசம் கொண்டிருந்த கோவா பதுரவாதோ குருக்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக, புதிதாக வந்த இயேசு சபை மறைபணியாளர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகளும், தண்டனைகளும் மேற்கொண்டனர். வரலாற்றில் இவ்விருண்ட சம்பவங்கள் ‘கோவா மறைபரப்புப் பூசல்’ (Scandalous Goan Schism) என்று அறியப் படுகிறது. இத்துயர நிகழ்வுகள் சற்றேறக்குறைய, ஒரு நூற்றாண்டாக இந்திய திருச்சபையில் நடந்தேறிக் கொண்டிருந்தது. இதே சூழ்நிலைதான் மலையடிப்பட்டியிலும் தொடர்ந்தது.
மதுரை மறைமாநிலத்தின் ஆளுகையை முறைப்படி பெற்று வந்த, புதிய இயேசு சபை மறைப்பணியாளர்கள் தங்கள் முன்னாள் பணித்தளமான மலையடிப்பட்டிக்கு வந்தார்கள். தங்கள் மூதாதையர் குருக்கள் பணியாற்றிய அதே மறைப்பணித்தளத்தில், ஆயனில்லா ஆடுகளாய் தவித்துக் கொண்டிருந்த இறைமக்களுக்கு, ஆன்மீகப் பணிகளை மீண்டும் தொடர, இறைவாஞ்சையோடு 65 ஆண்டுகளுக்குப் பின் மலையடிப்பட்டி மண்ணில் காலடி வைத்தனர்.
ஆனால் அவர்களின் இந்த மறுவருகை மனமகிழ்வைக் கொணரவில்லை. இறைத்திட்டம் வேறாக இருந்தது. ஏனெனில், அவர்களைக் கோவா மறைமாவட்டத்தைச் சார்ந்த மறைபோதகர்கள் தடுத்து நிறுத்தினார்கள். தாங்கள் எடுத்துக் கொண்ட அதிகாரத்தை மீண்டும் இயேசு சபையிடம், அர்ப்பணிக்க அவர்கள் மனம் ஏற்கவில்லை. ஏற்கனவே கூறிய படி, பதுரவாதோ அதிகாரம் இவர்களை இவ்வாறு செய்வதற்கான துணிச்சலைக் கொடுத்தது.
ஏனென்றால், இவ்வதிகாரத்தின் படி, போர்த்துக்கீசிய மன்னருக்கு மட்டுமே இவர்கள் கட்டுப்பட்டவர்கள். ஏனைய ஆயர்களோ, கர்தினாலோ இவர்களை கேள்வி கேட்க இயலாது; இவர்களைக் குறித்து யாரிடமும் புகாரும் பதிய முடியாது. இவ்வாறு மறைப்பணியின் இரு தரப்பினருக்குமிடையே அதிகார வரம்பில் (Jurisdiction) போட்டி ஏற்பட்டது. இதனால் இறைமக்களிடையேயும் பிளவு ஏற்பட்டது. மலையடிப்பட்டியில் ஒரு பகுதியினர் கோவாவைச் சார்ந்த குருக்களுடன் இணைந்தனர். மற்றொரு சாரார் சேசு சபைக் குருக்களோடு இணைந்தனர்; பெரும்பான்மையானோர் இயேசு சபைக் குருக்களையே ஆதரித்தனர்.
இக்காலகட்டத்தில் (1873-1929), இறைமக்கள் இரு குழுக்களாக பிரிந்த பின்பு, பத்ரவாதோ கோவா குருக்கள் சென்னை மைலாப்பூரை மையமாகக் கொண்டு பணிபுரிந்தனர். இவர்களின் கீழ் 28 கிறிஸ்தவ குடும்பங்களும் மேலும் பல தன்னார்வ கிறிஸ்தவர்களும் இருந்ததாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. (இவர்களில் பெரும்பாலோனோர் மலைத்தாதம்பட்டி பகுதியில் வசித்து வந்த குடும்பங்கள் என அறிகிறோம்)
இது ஒருபுறமிருக்க, தங்கள் மூதாதையரின் விடுதலைப் பயணம் தொடங்கி, இவ்வூர் மக்களுக்காக, இரு நூற்றாண்டுகளாக, கடும் ஆன்மீகப் பணியாற்றிய இயேசு சபை பணியாளர்களின் மறுவருகை, மலையடிப்பட்டி மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பெரும்பான்மையான இறைமக்கள் கோவா பதுரவாதோ பங்கினை விடுத்து, புதிதாக வந்த இயேசு சபைக் குருக்களுக்கு தங்களின் ஆதரவை அளித்து சிறப்பான வரவேற்பினை அளித்தனர்.
இங்ஙனம் மக்கள் அளித்த பேராதரவை உணர்ந்த சேசு சபைக் குருக்கள், தங்களுக்கென ஒரு ஆலயம் தேவையென உணர்ந்து, மலையடிப்பட்டியின் பழைய சவேரியார் ஆலயத்தையும் (கூரையால் வேயப்பட்ட ஆலயம்), சுற்றுச்சுவரையும் ஒரே இரவில் எழுப்பினர். (இது குறித்து ஆலயங்களின் வரலாற்றில் விரிவாகக் காணலாம்). இவ்வாறாக, இப்பணித்தளம் இருவேறு பங்குகளாக செயல்பட ஆரம்பித்தது; அதாவது, (1) பதுரவாதோ - பனிமய அன்னை பங்கு & (2) இயேசு சபை மறைத்தளம் - தூய சவேரியார் பங்கு.
இங்ஙனம் இருவேறு பங்குகளாக செயல்படத் தொடங்கினாலும், பாரதமெங்கும் இருந்தது போலவே மறுமலர்ச்சி இயேசு சபை குருக்களுக்கும், கோவா பதுரவாதோ குருக்களுக்குமிடையே சொல்லொண்ணா சச்சரவுகளும், பிரச்சனைகளும் தொடர்ந்து வெடித்தன; இச்சச்சரவுகளும், பகைமையும் அடுத்து வரும் ஒரு நூற்றாண்டிற்கு நீடிக்கும் என்பதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.
புதிய மதுரை மிஷன் தளத்தின் முன்னோடியும், திருச்சி மரியன்னை பேராலயத்தைக் கட்டியவருமான Fr. கார்னியரும், அவருடன் பாரீஸ் மறைபணி குருவான Fr. M. மௌசெட் அவர்களும் மலையடிப்பட்டியின் நிலை குறித்து ஆராய வந்திருந்தனர். இந்த பங்கு விசாரணையின் போது, மலையடிப்பட்டியில் நிலவி வந்த இரு பங்குகள் ஆட்சி முறை குறித்து மனம் வெதும்பிய நிகழ்வு, வரலாற்றுப் பதிவுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இரு குழுக்களுக்கிடையே அவ்வப்போது ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பினும், மனதளவில் ஒரு நெருடலும் காழ்புணர்ச்சியும் எப்போதும் இருந்து கொண்டே தான் இருந்தது என்பது மறுக்க இயலா உண்மை.