இவ்வாறு உருவான புனித சவேரியார் பங்கின் தொடக்க காலத்தில், முதல் முதலாக மூன்று ஃபிரஞ்சு தேச இயேசு சபை மறைபோதகர்கள் அடுத்தடுத்து (1838-1843), பல்வேறுபட்ட நிலையிலும், வகையிலும் சிறந்த அரும் பெரும் பணியாற்றியுள்ளனர். இம்மறைத்தளத்தின் இரண்டாம் அத்தியாத்தின் தொடக்கப் புள்ளிகள் இவர்களே என்பது ஆணித்தரமான உண்மை. பதுரவாதோ குருக்களின் அதிகார எதிர்ப்பிற்கு மத்தியிலும், மனம் தளராது இவர்கள் ஆற்றிய இப்பணிகளின்றி, இந்த இரண்டாம் கட்ட மறைப்பணிகள் மீண்டும் துளிர்த்திருக்க வாய்ப்பில்லை. எனினும், துரதிஸ்டவசமாக, இந்த மூன்று இறைப்பணியாளர்களின் பெயர்களும், எந்த வரலாற்று ஆவணத்திலும் காணக் கிடைக்கவில்லை.
இக்குருக்களின் பணிக்காலத்தின் போது தான் முக்கியமான வரலாற்று முன்னெடுப்புகள் ஏற்பட்டுள்ளன: தூய சவேரியார் ஆலயத்தின் முதல் கூரை ஆலயமும், சுற்றுச் சுவரும் ஒரே இரவில் கட்டப்பட்டது. (இது குறித்து ஆலயங்கள் வரலாற்றில் விரிவாகக் காண்க). மேலும், 1840-இல் மலைமேல் இதற்கு முன்பு இருந்த கூரை சிற்றாலயம் (1714 - இல் கட்டப்பட்டது) இடிக்கப்பட்டு, கற்களாலான ஒரு சிற்றாலயம் எழுப்பப்பட்டு, புனித தோமையார் சிற்றாலயமாக மறுஅர்ப்பணம் செய்யப்பட்டது.
இவர்களுக்குப் பின், 1843-இல் Fr. விக்டர் கேரிங்கோன் ஒரு வருடம் பணியாற்றியதற்கான ஆவணங்கள் உள்ளன. தந்தையவர்கள், இச்சிற்றாலயத்தை சற்று விரிவுபடுத்தி, செபிப்பதற்கும், திருப்பலி நிறைவேற்றுவதற்கும் உகந்த ஆழகிய சிற்றாலயமாக்கினார். தற்போது வரை இந்த சிற்றாலயமானது, ஆலயத்தின் மையப்பகுதியாக பாதுகாக்கப்பட்டு, ஆலய பீடம் இதன் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
பெரின்
(1843-1945)1843 -1845 இல் Fr. பெரின் அடிகளார் பங்கு குருவாக பணியாற்றினார். இவரின் காலகட்டத்தில் தந்தையவர்கள், பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது.
முதலாவதாக, கோவா குருக்களின் தவறான போக்குகளால் பல கத்தோலிக்கர்கள், பிற சபைகளுக்குச் செல்லத் தொடங்கியிருந்தனர்; இச்சபைகளின் அனைத்து தலைமையகங்களிலும் புதிதாக பள்ளிகள் தொடங்கப்பட்டிருந்ததன் காரணமாக, கத்தோலிக்கர்கள் எளிதில் அவர்கள் பால் ஈர்க்கப்பட்டனர். இந்த சவாலானது எளிதில் தீர்க்கப்பட்டது.
இரண்டாவதாக, ‘கோவா பூசல்’ - பதுரவாதோ மற்றும் இயேசு சபைப் பங்குகளுக்கிடையே சார்ந்த சச்சரவுகள். இந்த இரண்டாவது சவால் மிகக் கடினமானது; எளிதில் தீர்வு எட்டப்படவில்லை. மனக்கசப்புகளும், சச்சரவுகளும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.
மேலும் இதே காலகட்டத்தில், பனிமய அன்னை பங்கின் குருவாக தந்தை சின்னப்பன் அவர்கள் பணியாற்றி வந்திருக்கிறார். சிறிது காலத்தில், கோவா குரு Fr. சின்னப்பன் அவர்கள் உயிர் துறந்தார்; இறுதி வரை சவேரியார் பங்கின் எத்தகு உடன்பாட்டிற்கும் அவர் பணியவில்லை; அமைதியும் ஏற்படவில்லை. இவரின் இறப்பிற்கு பின், சில கத்தோலிக்கர்களும், வேறு சிலரும் இணைந்து போராடி, தூய பனிமய அன்னை ஆலயத்தைக் கைப்பற்றி அதனை Fr. பெரின் அடிகளாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சச்சரவானது, அப்போதைய ஆங்கிலேய உயர் நீதிபதியின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குழப்பங்களை ஆரய்ந்த நீதிபதி, பெரும்பான்மை கத்தோலிக்கர்களைக் கொண்ட இயேசு சபைப் பங்கிற்கே இவ்வாலயம் சொந்தம் என தீர்ப்பு வழங்கினார். எனினும் இவ்வழக்கு, மேல் நீதிமன்றத்திற்கு சென்றபோது, அந்நீதிபதி கத்தோலிக்கர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதால், ஆலயமானது மீண்டும் கோவா குருக்கள் வசம் சென்றது.
இக்கசப்பான வரலாறு ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருப்பினும், சவேரியார் பங்கின் இறைமக்கள் ஆன்மிகத்திலும், பக்தியிலும் செழித்து வளரத் தொடங்கியிருந்தனர். தந்தையவர்கள் தனது மறையுரையிலும், மறைக்கல்வியிலும் தனது இறைமக்கள் ஒவ்வொருவரின் பெயர் சொல்லி விளித்து, அவர்களின் தவறான வழிகளை செம்மையாக்கியதன் விளைவாக இத்தகு ஆன்மிக மாற்றங்கள் துளிர்விடத் தொடங்கின.
அதுவரை மலைத்தாதம்பட்டியானது, பத்ரவாதோ பங்கின் கீழ் இயங்கி வந்தது. அப்போது இருந்த ஒரு கோவா குருவின் பெரு முயற்சியால் 1886-இல் ஓர் ஒப்பந்தமானது இரு ஆயர்களுக்குமிடையே குழுக்களுக்குமிடையே ஏற்பட்டது. அதன் படி, 1893-இல் மலைத்தாதம்பட்டியும் சவேரியார் பங்கின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த கோவா குருவிற்கு அவரது ஆயரும், போர்த்துக்கல் அரசும் துணையாயிருந்தன, மேலும் இது ஒரு மிகச் சவாலான பணியென எண்ணி, போர்த்துக்கல் அரசின் மாநில தலைமை செயலரை இதற்கென பணியமர்த்தினர்.
இது குறித்து மேதகு பார்த் தனது கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறர்: “இந்த சச்சரவுகள் அனைத்தும் ஒன்பது சிறு குடிசைப்பகுதிக்காக என்பதை அறிந்த எங்கள் ஆயர் மிகவும் ஆச்சரியமடைந்தார். எனினும், இந்த மலைத்தாதம்பட்டி கிறிஸ்தவ மக்கள் ஒருபோதும் எங்களுக்குச் சாதகமாக இருந்ததில்லை. இக்கூற்றினை அவர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். மெய்யாகவே, இத்தகு கிறிஸ்தவ உட்பூசல்கள் கிறிஸ்துவ விழுமியங்களுக்கும், பிற மதத்தினருக்கும் தவறான எடுத்துக்காட்டாகவே விளங்குகின்றன என்பது வருத்தத்திற்குறிய உண்மை.”
சிறிது காலம் கழித்து, தந்தை பெரின் அவர்கள் மலையின் மீது அமைந்துள்ள ஒரு கிராமத்தில் ஒரு நோயாளிக்கு இறுதி அருட்சாதனம் அளிக்க சென்றிருந்தார். செல்லும் வழியில், 50 இந்து மத கயவர்கள் ஆயுதங்களைக் கொண்டு தந்தையவர்களைத் தாக்கினார்கள். எனினும் அவர் குருவானவருக்குரிய தகுதியுடன் அவர்களைத் திருப்பித் தாக்க எத்தனிக்கவில்லை. இந்த கோர சம்பவமானது நீதிபதியின் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, அக்கயவர்கள் அனைவருக்கும் மூன்று மாதம் சிறை தண்டனையும் 20 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிகழ்சிக்குப் பின், இந்துக்கள் கத்தோலிக்கர்களைக் கண்டு அச்சமுறத்தொடங்கினர்.
இவருக்குப் பின் 1845-1849 ஆண்டுகள் குறித்த வரலாற்று ஆவணங்கள் கிடைக்கவைல்லை. 1849-1853 வரை Fr. ரிச்சர்டு அடிகளார் சிறப்பான ஆன்மீகப் பணிகளை ஆற்றி வந்துள்ளார். ஆனால், இக்காலகட்டத்தில் எவ்விதமான குறிப்பிடத்தகுந்த வரலாற்று முன்னெடுப்புகளும் பதிவு செய்யப்படவில்லை.
சவேரியார் ஆலயம்
இந்நிலையில், 1853-ஆம் ஆண்டு முதல் 1895-ஆம் ஆண்டு வரை பெனடிக்ட் புர்தி (பத்திநாதர்) மலையடிப்பட்டியில் பணியாற்றினார். மலையடிப்பட்டி என்ற மறைத்தலம் இன்று வரை நிலைத்து நிற்பதன் ஆணிவேர் இவரே என்று மொழிவது சாலச்சிறந்தது. நாற்பது ஆண்டுக்கால அவரது பணியில் பல்வேறு எதிர்ப்புகளும் இடையூறுகளும் தொடர்ந்து கொண்டேயிருந்தன. இருப்பினும் அவர் மனம் தளராது, சோர்வடையாது பணியாற்றினார். தம் அர்ப்பண வாழ்வினாலும், தன்னலமற்ற பணியாலும், பாசமிக்க அணுகுமுறையாலும் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவர். கோவா அருள்பணியாளர்கள் பனிமய மாதா ஆலயத்தைத் தங்கள் வசம் வைத்திருந்ததால், தமது மறைப்பணிக்காக ஒரு தனிப்பட்ட ஆலயம் தேவை என்பதை தந்தை பெனடிக்ட் புர்தி உணர்ந்தார். 1885-ஆம் ஆண்டு இறைமக்களின் உதவியுடன், அந்த பழைய (கூரையாலான) சவேரியார் ஆலயத்தை தரைமட்டமாக்கி, தற்போதுள்ள புதிய சவேரியார் ஆலயத்தை அழகுற, கம்பீரமாக கட்டியெழுப்பினார் (இது குறித்து ஆலயங்கள் வரலாற்றில் விரிவாகக் காணலாம்.
அரைவீடு & பாடசாலை
மேலும், ஆலயத்திற்கு அருகிலேயே பங்குத்தந்தை இல்லம் (அரை வீடு) ஒன்றையும் கட்டி எழுப்பினார். (மிகவும் சிதிலமடைந்ததால், 2004-ல் இந்த பழைய பங்குத்தந்தை இல்லம் இடிக்கப்பட்டு Fr. யூஜின் அவர்களால் புதிதாகக் கட்டப்பட்டது). ஆலயத்திற்கு வலது புறத்தில் (தற்போது லூர்து அன்னை கெபி அமைந்துள்ள இடம்) புனித சவேரியார் தொடக்கப்பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. இந்த மூன்று பெரிய கட்டுமானப் பணிகளும் ஒரே நாளில் அர்ச்சிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன. இந்த தினம் மலையடிப்பட்டி மறைத்தளத்தின் திருவிழா போன்று நடைபெற்றிருக்கிறது. எனினும் 1885-ஆம் ஆண்டு என்பதைத் தவிர சரியான தேதி தெரியவில்லை.
பின் குறிப்பு : சரியாக 120 ஆண்டுகள் கழித்து 2005-இல் இதே போன்ற திருவிழாக் கோலம் மீண்டும் நிகழ்ந்தது: Fr. T. யூஜின் அடிகளாரின் பணிக்காலத்தின் போது 10-03-2005 அன்று புதிதாக கட்டப்பட்ட பங்குத்தந்தை இல்லம், லூர்து அன்னை கெபி, சவேரியார் பள்ளி, தோமையார் சமூகக் கூடம் என நான்கு பெரும் கட்டமைப்புகள் ஒரே நாளில் அர்ச்சிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்ததை வரலாற்று மீள்நீட்சியாகக் கருதலாம் - The History Repeats; இவற்றின் விரிவான வரலாற்றினை பின்வரும் பகுதிகளில் காணலாம்
பிற ஆலயங்கள்
தந்தை பெனடிக்ட் புர்தி அடிகளார் மேலும் ஐந்து ஆலயங்களைத் தமது மறைப்பணித்தளத்தில் கட்டியுள்ளார். 1880-ஆம் ஆண்டு கட்டப்பட்டதுதான் கருங்குளத்தில் உள்ள தூய இஞ்ஞாசியார் ஆலயம். அதைத் தொடர்ந்து பண்ணைப்பட்டி, பேரூர், சின்னாண்டிப்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி ஆகிய ஊர்களிலும் ஆலயங்கள் எழுப்பப்பட்டன. அவரது இறப்புக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் பொத்தமேட்டுப்பட்டி ஆலயத்தின் கட்டுமானப்பணி நிறைவு பெற்றது. அவரே குளித்தலையில் கோயில் கட்டுவதற்காக நிலம் வாங்கினார்.
குடும்ப உதவி
இத்தனை கோயில்களை எழுப்பி அவர் மகத்தான சாதனை படைத்ததற்குக் காரணம் அவர் இறைப்பராமரிப்பின்மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும், பிரான்ஸ் நாட்டிலிருந்து அவரது சகோதரியின் பிள்ளைகள் அளித்த தாராள நன்கொடையும் ஆகும். இவ்வாலயங்கள் அனைத்தும் இன்று வரை எந்த சேதமுமின்றி தந்தையின் புகழ் சாற்றி நிற்கின்றன. (இயேசு சபை பணித்தளங்கள் அனைத்திலும் இதுபோன்ற ஃபிரஞ்சு கட்டட அமைப்பினாலான (கோதிக்) ஆலயங்களைக் காண முடியும்; உதாரணமாக, லூர்து மாதா ஆலயம்-St. Joseph’s College, திருச்சி.)
ஆன்மீகப் பணி
தந்தை புர்தி அடிகளார் தனது தன்னலமற்ற மறைபரப்பினால், எண்ணிலடங்கா ஆன்மாக்களை கிறிஸ்துவின் பால் ஈர்த்தார். ஊராளிக் கவுண்டர்கள் எனப்படும் சாதியில் மூன்று குடும்பங்கள் முழுமையாக மனமாற்றம் பெற்று திருமுழுக்கு பெற்றனர். ரெட்டியார்களில் ஒரு குடும்பம் மனமாற்றம் பெற்று, சாதிய கட்டுப்பாடுகளால் மீண்டும் இந்து சமயத்திற்கே திரும்பினர். எனினும் கிறிஸ்தவத்தை ஏற்க முடியா ஏக்கம் அக்குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் இருந்து வந்தது.
இறப்பு
1895-இல், தந்தையவர்கள் தனது மறைப்பணி நிமித்தமாக தூத்துக்குடி சென்ற போது, இறைவனிடம் தன் ஆவியை ஒப்படைத்தார்; அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். எனினும், இறைமக்களின் ஏகோபித்த வேண்டுதலின் பேரில், அவரது எலும்புகள் தோண்டியெடுக்கப்பட்டு, மலையடிப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.
மறுஅடக்கம்
1909 ம் ஆண்டு நவம்பர் திங்கள், தான் எழுப்பிய இந்த சவேரியார் ஆலயத்தின் பீடத்தின் முன்பாக, அவரின் எலும்புகள் மறு அடக்கம் செய்யப் பட்டது. இத்துயர நிகழ்வின் போது மக்கள் கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்ந்தனர். இம்மறைதலத்திற்காக 40 ஆண்டுகள் தம் வாழ்நாள் முழுவதையும் கரைத்து, மாபெரும் இறைபணியாற்றிய இவ்வொப்பிலா குருவிற்கு, மக்கள் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர். மலையடிப்பட்டி மறைத்தல வரலாற்றில் தந்தை ஆற்றிய பணிகள் சாலச்சிறந்தது; போற்றுதற்குரியது. அவரின் பணிகளை, அவரின் இந்த வரலாற்றுச் சின்னங்கள் மேலும் பல நூற்றாண்டுகள் எதிரொலிக்கும் என்பதில் ஐயமில்லை.
பின் குறிப்பு : தந்தையவர்கள் பணியாற்றிய நாட்களின் போது, 01-09-1886 அன்று திருச்சி மறைத்தளமானது, சுயாட்சி பெற்று, கண்காணிப்பின் கீழ் இயங்கும் மறைமாவட்டமாக (Apostolic Vicariate) அறிவிக்கப்பட்டது.
1895 - 1904 வரை வடக்கன்குளத்தைச் சார்ந்த தந்தை A. ஞானபிரகாசம் அடிகளார் இப்பங்கினை நிர்வகித்து வந்துள்ளார். இந்திய மறைபரப்பில், முதல் தமிழ் மறைப்பணியாளர் இவரே என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர் காலகட்டத்தில், 2000 பத்ரவாதோ பங்கு இறைமக்களும் சவேரியார் பங்கோடு இணைக்கப்பட்டதால், பங்கு மக்களின் எண்ணிக்கை மிகக் கணிசமாக உயர்ந்தது.
தந்தையவர்கள் தன் பணிக்காலத்தில், இப்பங்கில் ஆற்றிய ஆன்மீகப் பணிகள் அளப்பரியது; இவர் காலத்தில் இவர் கொடுத்த திருமுழுக்கு அருட்சாதனங்களின் எண்ணிக்கையே இதற்கு சான்று : 1899 - 491; 1900 - 526 ;1901 - 501; 1902 - 503; 1903 - 609; 1904 - 603.
இந்நிலையில், 1908-இல் பண்ணப்பட்டியானது புதிய பங்காக பிரிக்கப்பட்டது. 1910-இல் பாலக்குறிச்சி புதிய பங்காக பிரிக்கப்பட்டது. இச்சூழ்நிலையில் மலையடிப்பட்டி பங்கானது, இரயில் தண்டவாளத்தை மையமாகக் கொண்டு 7 மைல்கள் தொலைவில் விரிந்து இரு புறங்களையும் உள்ளடக்கியதாக 10,554 கத்தோலிக்க கிறிஸ்தவர்களை தன் இறைச் சமூகமாகக் கொண்டிருந்தது.
மேற்கண்ட இம்மக்கள் தொகையில் ஒவ்வொரு இனத்தின் அடிப்படையிலான புள்ளிவிவர ஆவணங்களும் கிடைத்துள்ளன. அதன்படி வன்னியர் இனத்தில் 7027 பேரும் (66.6%), கம்மாளர் 1218 பேரும் (11.5%), உடையார் 1003 பேரும் (90.5%), ஆதிதிராவிடர் 709 பேரும் (607%), இதர வெள்ளாளர் உட்பட 597 பேரும் (5.7%) உள்ளடக்கிய திருச்சபையாக இம்மறைப்பணித்தளம் இயங்கியது.
இக்காலகட்டத்தில் இறைமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், நிர்வாக வசதிக்காக மறைத்தளமானது நான்கு பெரும் பிரிவுகளாக (Regional Zones) பிரிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வரலாற்று ஆசிரியர் அருட்பணி.லியோன் பெசெ தன் நூலில் மிகத் துள்ளியமாக ஆவணப்படுத்தியுள்ளார்.
1. மலையடிப்பட்டி மையம் (30 ஊர்கள் - மக்கள் தொகை : 4,224)
மலையடிப்பட்டி, ஆவாரம்பட்டி, மலைத்தாதம்பட்டி, புதுப்பட்டி, நல்லியம்பட்டி/ராயம்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, மஞ்சம்பட்டி, திர்காம்பட்டி/புரசன்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மணப்பாறை, விடத்திலாம்பட்டி, கருமகவண்டன்பட்டி, வெள்ளை பூலாம்பட்டி, அருணாம்பட்டி, ஆலத்தூர், பொன்னக்கோன்பட்டி, பிச்சைமணியாரன்பட்டி, அஞ்சல்காரன்பட்டி, ஊத்துப்பட்டி, ஈச்சம்பட்டி, அனியாபுரம் (தெற்கு), பொய்கைப்பட்டி, மொட்டைப்பெருமாம்பட்டி, வளையபட்டி, கோட்டப்பட்டி, கழனிவாசல்பட்டி, ஆத்துப்பட்டி, கருப்பூர்.
2. உடையாபட்டி மையம் (26 ஊர்கள் - மக்கள் தொகை : 1,543)
உடையாபட்டி, மேட்டு அல்லிப்பட்டி, முத்தப்புடையான்பட்டி, திருக்காவலூர், செம்மங்கலம், களத்துப்பட்டி, நரியம்பட்டி, சொக்காம்பட்டி, பதரப்பட்டி, கதரம்பட்டி, சமுத்திரம், சரவணம்பட்டி, தென்னம்பாடி, பாலப்பட்டி, புருசம்பட்டி, இடையபட்டி, விராலிமலை, மதரப்பட்டி, தேங்காதின்னிப்பட்டி, கவரப்பட்டி, ராசாலிப்பட்டி, கட்டிக்காரன்பட்டி, முட்டாகவண்டம்பட்டி, சத்திரப்பட்டி, பச்சையுடையாம்பட்டி, பெரியபட்டி.
3. கருங்குளம் மையம் (12 ஊர்கள் - மக்கள் தொகை : 2,627)
கருங்குளம், அணைக்கரைப்பட்டி, மலப்பட்டி/போராட்டக்குடி, சந்தியாகுபுரம், வயக்காட்டுபள்ளி, முக்குருத்திபட்டி, சடையம்பட்டி, புதுக்கோட்டை, ரெட்டியபட்டி, அனங்கொரப்பட்டி, குமாரவாடி, கடவூர்/பிள்ளைமுழுங்கி
4. கருங்குளம் மையம் (12 ஊர்கள் - மக்கள் தொகை : 2,164)
பூலாம்பட்டி, தோப்புப்பட்டி, பெரியகுளத்துப்பட்டி, குளத்தூரான்பட்டி, தாதம்பட்டி, மைலாப்பூர், கூடத்திபட்டி, சவேரியார்பாளையம், வையாபுரிபட்டி, அனியாப்பூர், வீரப்பூர், தலைவாசல்.
பின் குறிப்பு : இந்த தரவுகளைக் கொண்டும், புவியமைப்புக் கூறுகளின் படியும் ஆழமாக ஆராய்ந்தால், இம்மையங்களின் அடிப்படையிலேயே பிற்காலத்தில் பங்குகள் பிரிக்கப்பட்டுள்ளதென்பது தெளிவாகப் புலப்படும். மேலும், அன்றைய சூழலில் நிலவி வந்த, பல்வேறு சமுதாய இனப்பிரிவுகளின் அடிப்படையிலும் இம்மையங்கள் பிரிக்கப்பட்டுள்ளதை தெளிவாகக் காணலாம். இங்ஙனம், இப்பரந்து விரிந்த பங்கை நிர்வகிப்பது எளிமையாக்கப்பட்டது.
இவருக்குப் பின் 1905-1911 வரை Fr. லபோரே (Labore) அவர்கள் சிறந்த ஆன்மீகப் பணியாற்றினார்கள். இவருடைய பணிக்காலத்தின் போது, 1908-இல் ப.உடையாபட்டி பங்கும், 1909-இல் பாலக்குறிச்சி பங்கும் மலையடிப்பட்டி மறைப்பணித்தளத்திலிருந்து தனிப்பங்குகளாக பிரிந்தன. மேலும், 1908-இல் ந.பூலாம்பட்டி ஆலயத்திற்கு மக்களின் நிதியுதவியாக ரூபாய் 300 செலவில் ஒரு கோவில் மணியும் வாங்கப் பட்டது.
1911-1922 வரை பணியாற்றிய குருக்கள் குறித்து வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கவில்லை. 1922-1929 வரை Fr. சேரே (Fr. Cere) அவர்கள் 7 ஆண்டுகள் பணியாற்றியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இதே நாட்களில், Fr. மாசில்லாமணி (1927-1928) & Fr. A.R.சூசை (1928) ஆகியோர் துணைப் பங்குத்தந்தையர்களாகப் பணிபுரிந்துள்ளனர்.
இவருடைய பணிக்காலத்தின் போது வாழ்ந்த கிறிஸ்தவ மக்களின் கணக்கெடுப்பு எண்ணிக்கை : 1922-1926 = 6451 பேர்; 1927-1929 = 7196 பேர். இப்பணிக்காலத்தின் போது 54 கிராமங்களை உள்ளடக்கிய பங்காக செயல்பட்டு வந்தது. இதில் 7 கற்களால் கட்டப்பட்ட பெரிய ஆலயங்களும், 7 களிமண்ணால் கட்டப்பட்ட கூரை ஆலயங்களும், 3 ஆடவர் பள்ளிகளும், ஒரு மகளிர் (தெரசாள்) பள்ளியும் செயல்பட்டுவந்ததற்கான ஆதாரப்பூர்வமான வரலாற்றுப் பதிவுகள் கிட்டியுள்ளன.
1929-இல் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு நடந்தேறியது. 29-06-1929-இல் திருத்தந்தை 13-ஆம் சிங்கராயர், போர்த்துக்கீசிய மன்னருடன் ஏற்படுத்திய புதிய உடன்பாட்டின்படி, அதுவரை நிலவி வந்த பதுரவாதோ இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது. இதனடிப்படையில் ஆவூர், மலையடிப்பட்டி, பழைய கோயில் ஆகிய பங்குகளில் நிலவிய இரட்டை ஆட்சி முறை முடிவுக்கு வந்தது. அதுவரை இந்த பனிமய அன்னை ஆலயமானது, ஒரு தனிப்பங்காகவே செயல்பட்டு வந்தது.(https://bit.ly/3fT530G) இக்காலகட்டத்தில் (1929-1932 : 3 ஆண்டுகள்) பணியாற்றிய மறைப்பணியாளர் குறித்த தெளிவான சான்று இல்லை. Fr. சேரே அல்லது அதற்குப் பின் பணியாற்றிய Fr. திவ்யநாதன் ஆகியோரில் ஒருவர் தான் பணியாற்றியிருக்கக் கூடும் என கணிக்கிறோம்.
1929 லிருந்து பணியாற்றியவர் Fr. திவ்யநாதன். இவர் பணிமுடித்த வருடம் குறித்து தெளிவான பதிவுகள் இல்லை. எனினும், 1938-இல் புதிய திருச்சி மறைமாவட்டம் உருவாக்கம் வரை இவர் பணியாற்றியிருக்கக் கூடும் எனக் கணிக்கிறோம். இவரது பணிக்காலத்தின் போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 67 கிராமங்களை உள்ளடக்கிய இப்பங்கில் 6935 கிறிஸ்தவரகள் வாழ்ந்தனர்.
இயேசு சபையின் தொண்டு
(1659-1938)இங்கனம், 1659-இல் மலையடிப்பட்டியின் மோயீசன்-தந்தை அந்தோனி புரொவென்சா அடிகளாரில் தொடங்கிய இயேசு சபையின் மகத்தான மறைப்பணியானது, 280 ஆண்டுகளுக்குப்பின் 1938-இல் தந்தை திவ்யநாதருடன் நிறைவுற்றது. இதன் பின் உள்ளுர் இறையழைத்தல்கள் பெருகி, புதிய திருச்சி மறைமாட்டம் செயல்படத் தொடங்கிற்று. தடைகள் பல வந்திடினும், இயேசு சபைக்குருக்கள் இம்மண்ணிற்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது; போற்றுதற்குறியது. விண்ணகத்திலுள்ள இம்மறைப்பணியாளர்கள் அனைவரும் இப்பங்கின் இத்தகு வளர்ச்சியையும், விசுவாசத்தையும் கண்டு இன்றும் புலங்காகிதம் அடைவர் என்பதில் ஐயமேதுமில்லை.
புதிய மதுரை மறைபரப்பு தளத்தின் கீழ் 1838-இல் உருவாக்கப்பட்ட சவேரியார் பங்கானது, பல்வேறு தடங்கள்களையும், சச்சரவுகளையும், மாற்றங்களையும், இணைப்புகளையும், வரலாற்று முன்னெடுப்புகளையும் கடந்து, சரியாக ஒரு நூற்றாண்டை முடித்து, 1938-இல் ஒரு புதிய அத்தியாயத்திற்குள் காலடி எடுத்து வைத்தது - அதுவே புதிய திருச்சி மறைமாவட்டம்.
08-01-1938-இல் திருச்சி புதிய மறைமாவட்டமாக மறுகட்டமைப்பு செய்யப்பட்ட போது (மதுரை தனி மறைமாவட்டமாக பிரிக்கப்பட்டது), இவ்விரு ஆலயங்களும்,மேலும் தோமையார் ஆலயமும் ஒரு குடையின் கீழ் கொணரப்பட்டு, 28-01-1934 இல் புதிய மலையடிப்பட்டி பங்காக செயல்படுவதற்கான ஆணை அப்போதைய ஆயர் அகஸ்டின் ஃபெய்சாண்டியர் (Augustine Faisandier) ஆண்டகையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, புதிய திருச்சி மறைமாவட்டத்தின் அங்கமாக இப்பழம்பெரும் பங்கு இன்று வரை செயல்பட்டு வருகிறது.
பின் குறிப்பு : திருச்சி மறைமாவட்டத்தின் கீழ் வந்த மலையடிப்பட்டி பங்கின், கடந்த 82-ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகள் தெளிவாகவும், மிகத்துள்ளியமாகவும் கிடைத்துள்ளன. இப்பதிவுகள் தனி அத்தியாயமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.