முன்வரலாற்றில் குறிப்பிட்டது போல, மக்கள் ஜமீன் தாரின் அறிவுரையை ஏற்றுக்கொண்டு, முள்ளிப்பாடியில் குடியேறினர். இதற்காக, 1661-இல் அங்கு ஒரு நிலையான சிற்றாலயமும், பங்குத்தந்தை இல்லமும் கட்டும் பணி தொடங்கியது. அதுமுதல் தொடர்ந்த அடுத்த 108 ஆண்டுகள் (1661-1708), இது முள்ளிப்பாடி மறைத்தளமாகவே அறியப்பட்டது.
இந்த மறைத்தளத்தின் தற்போதைய, சரியான இடத்தைக் குறித்து ஆராயும் போது, தற்போது ஆவாரம்பட்டிக்கு அருகில் அமைந்துள்ள முள்ளிப்பாடி கிராமமாக இருக்கக் கூடும் என்ற ஐயம் எழலாம். ஆனால் வரலாற்றின் படி, இந்த முள்ளிப்பாடி கிராமமானது மிகப்பிற்கால குடியேற்றமாகும். எனவே இந்த முள்ளிப்பாடியாக இருக்க வாய்ப்பில்லை.
புவிதகவமைப்பு மற்றும் வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டும் ஆராய்ந்தால், “விடத்திலாம்பூண்டியிலிருந்து 12 மைல்களுக்கு அப்பால் மலையடிவாரதில் அமைந்துள்ள பகுதி” என கூறும் வரலாற்று ஏடுகளின் அடிப்படையில், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ‘முள்ளிப்பாடி’ என்பது ‘சறுக்குப் பாறைக்கு நேர் கீழாக உள்ள சமவெளிப்பகுதி’யாக இருந்திருக்க வேண்டும். மக்களின் முதல் குடியிருப்பும் இப்பகுதியில் தான் இருந்திருக்க வேண்டும்.
மேலும், வரலாற்றின் பிற்காலத்தில் (~1700), பாறைகள் உருளும் அச்சம் காரணமாக, அங்கிருந்து 300 மீட்டர்கள் உட்புறமாக இடம்பெயர்ந்து, தற்போது கிராமம் அமைந்துள்ள பகுதிகளின் குடியேறியதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன; இது இக்கூற்றிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக உள்ளது.
பெயர் விளக்கம்
முள்ளி + பாடி = முள்ளிப்பாடி;
இதில் ‘முள்ளி’ என்பது முற்களைக் குறிக்கிறது; எனவே இது முற்செடிகள் நிறைந்த பகுதியாக இருந்திருக்க வேண்டும். ‘பாடி’ என்பது முல்லை நிலத்து ஊர்களைக் குறிக்க சங்ககாலம் தொட்டு பயன்படுத்தப்படும் சொல். [எ.கா: பாடி விழாக்கோள்பன்முறை யெடுப்ப (சிலப். உரைபெறு); முல்லைநிலத்தூர். (திவா.)]
எனவே, இப்புணர்வை முள்ளி(ல்)+பாடி என்று கொண்டால் முற்கள் நிறைந்த பகுதியில் உள்ள ஊர் என்று பொருள்படும்; அல்லது, முள்(இல்)+பாடி என்று புணர்ந்தால், முற்கள் இல்லாத, அதாவது முற்செடிகளை நீக்கி விட்டு உருவான ஊர் என்று பொருள்படும். எங்கனமாகினும், இப்பகுதி முற்கள் நிறைந்த கரட்டு நிலமாக இருந்தது தெளிவாகிறது.
இக்கூற்றிற்கு வலு சேற்கும் விதமாக, 1676-இல் எழுதப்பட்ட ஒரு மடலில், “இது ஒரு பாலைவனம்; தபசு செய்வதற்கு ஏற்ற இடம்,” என்று ஒரு மறைப்பணியாளா் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இப்பகுதியில் வேளாண்மை செய்வதற்கு நல்ல விளைநிலங்களும், அதோடு குமாரவாடி ஜமீன்தாரின் அன்பும் ஆதரவும் இருந்ததால் கிறிஸ்தவர்கள் முழு விருப்பத்தோடு இங்கு குடியேறினர். மேலும், முள்ளிப்பாடி ஒரு குன்றின் அடிவாரத்தில் இருந்ததால் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பான இடமாகத் திகழ்ந்தது.
புவியமைப்பு
முள்ளிப்பாடி கிராமத்திற்கு நேர் மேலே, ஒரு பெரிய பாறை எந்த நேரத்திலும் உருண்டு குடியிருப்புப் பகுதியில் விழலாம் என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில் ஒரு மறைப்பணியாளர் ஒரு சிறு கல்லை மந்திரித்து, இப்பெரிய பாறை உருளாத வண்ணம் முட்டுக் கொடுத்ததாக செவி வழிச் செய்தியாக நம்பப்பட்டு வருகிறது. ‘பேய்ப் பாறை அல்லது சறுக்குப் பாறை’ என்றழைக்கப்படும் இதனை இப்பொழுதும் காணலாம். இதனை தாங்கியுள்ள இச்சிறு பாறை நகர்ந்தால், இந்த பெரிய பாறை மட்டுமின்றி, அதற்கு பின்பாக உள்ள அனைத்து கற்களும் உருண்டு வந்து கிராமத்தையே அழித்து விடும் என்ற கூற்று தற்போதும் தெளிவாகப் புலப்படுகிறது.
மறைப்பணி ஓய்வுத்தளம்
இம்மமறைத்தளமானது, உட்புறமாக மலையடிவாரத்தில் இருந்ததால் இப்படி ஒரு குடியிருப்பு இருந்ததையே பலரும் வெளியுலகில் அறிந்திருக்கவில்லை. இதன் காரணமாக, பிற மறைப்பணியாளர்களின் பாதுகாப்பிடமாகவும் இது திகழ்ந்திருக்கின்றது. அதாவது, பிற மறைத்தளங்களின் பணியாற்றிவந்த குருக்கள், தங்கள் பகுதிகளில் பிரச்சனைகள் மற்றும் பிற சமய எதிர்ப்புகள் ஏற்படும் போதெல்லாம், அவர்கள் முள்ளிப்பாடிக்கு வந்து சிறிது காலம் பாதுகாப்பாக இருந்ததாக, வரலாற்று ஏடுகளின் பல பகுதிகளிலும் காண முடியும். இங்ஙனம், இப்பாதுகாப்பான மறைத்தளமானது, அக்கால மறைப்பணியாளர்களின் ஓய்விடமாகவும் (Guest House) திகழ்ந்ததை அறிய முடிகிறது.
இக்கூற்றின் அடிப்படையில், புனித அருளானந்தர், வீரமாமுனிவர், ராபர்ட் டி நொபிலி, பண்டாரசுவாமிகள், சஞ்சீவி நாதர் போன்ற அனைத்து மறைப்பணியாளர்களுமே இங்கு ஒருமுறையாவது இம்மண்ணில் நிச்சயமாக காலடி வைத்திருக்கக் கூடும். ஆனால் இதற்கான குறிப்பிடத்தகுந்த வரலாற்று ஆதாரங்கள் இல்லை.
மூதாதையர்
சறுக்குப்பாறைக்கு நேர் கீழாக உள்ள இந்த நிலப்பகுதிகள் அனைத்தும் முள்ளிப்பாடியார் குடும்பவாரிசுகளின் பரம்பரைச் சொத்தாக இன்றுவரை இருந்து வருகிறது; இக்கூற்றுகளின் படி, முள்ளிப்பாடியார் பரம்பரையின் மூதாதையர்களே இப்பழைய குடியேற்றத்தின் பூர்வகுடிகளாக இருந்திருக்க வேண்டும், என்னும் ஒரு கருத்துப் பூர்வமான முடிவை எட்டலாம் - வரலாற்றுச் சான்று ஏதும் இல்லை.
வாழ்க்கை சூழல்
முள்ளிப்பாடி பாதுகாப்பான இடமாகக் கருதப்பட்டாலும், போர்களுக்கும் சண்டை சச்சரவுகளுக்கும் குறைவில்லை. இவ்வாறு ஒரு முறை ஏற்பட்ட சண்டையின் காரணமாக அங்கிருந்து பன்னிரு மைல்களுக்குத் தெற்கே அருள்பணியாளர் இல்லம் தற்காலிகமாக மாற்றப்பட்டது. அது எப்போது நிகழ்ந்தது என்பது வரலாற்றுச் சுவடுகளில் குறிக்கப்படவில்லை. விடத்திலாம்பூண்டியில் தொடர்ந்து இந்துக்கள் வாழ்ந்து வந்தனர். அங்கே எல்லையம்மன் கோயிலும் இருந்தது. ஆனால் இங்கு இருகிறிஸ்தவக் குடும்பங்கள் மட்டுமே இருந்தன.
இந்நிலையில், இம்மறைப்பணித்தளத்தைத் தோற்றுவித்த அந்தோனி ஃப்ரொவென்சா 1666-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் நாள் தொட்டியத்தில் இறந்தார். ஃப்ரொவென்சா தொட்டியத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென நோயுற்றார். அவரைக் கவனிப்பார் யாருமில்லா நிலையில், நோயினின்று மீள முடியவில்லை . ஒரு உபதேசியார் வழியாக திருச்சிராப்பள்ளியில் இருந்த பல்தசார் டி கோஸ்டாவுக்கு செய்தி அனுப்பப்பட்டது. அவர் நோயில்பூசுதல் அருளடையாளத்தை வழங்க, தம் 42-ஆம் அகவையில் பன்னிரு ஆண்டுகள் ஆற்றிய நற்செய்திப்பணியின் நிறைவோடு உயிர் நீத்தார்.
அவர் பிராமணர்கள் வாழ்ந்த பகுதியில் இறந்ததால் அவரது உடலை அங்கிருந்த ஆலயத்தில் புதைக்க முடியவில்லை . ஆதலால் காவிரி ஆற்றங்கரையில் அடக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவ்வூர்க் கிறிஸ்தவர்கள் அடிகளாரின் உடலைத் தோண்டி எடுத்து அவர் கட்டிய ஆலயத்தில் புதைத்தனர். உடலைத் தோண்டி எடுத்தபோது அவரது உடல் அழியாமல் இருந்தது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவரது கல்லறை அவரது தமிழ்ப் பெயரான பரமானந்த சுவாமி என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
பின் குறிப்பு : இதே பெயரில் அவரது கல்லறை இன்றும் தொட்டியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வருடம் தோறும், இந்த நினைவு நாளில், சிறப்புத்திருப்பலி மக்களால் அழ்ந்த பக்தியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிறிஸ்தவர்கள் முள்ளிப்பாடியில், முதன் முதலாக குடியேறிய போது, 1661-ஆம் ஆண்டு முள்ளிப்பாடியில் தொடங்கப்பட்ட சிற்றாலயக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்திருந்தது; அப்போதைய பங்கு குரு அருட்பணி. இம்மானுவேல் ரோட்ரிகசு (Emmanuel Rodriguez) அவர்களால் 1662-இல் இச்சிற்றாலயம் அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப் பட்டது. மேலும், மலை உச்சியில் ஒரு மரச்சிலுவையும் நடப்பட்டது; (இன்று வரை இச்சிலுவை அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது).
பின் குறிப்பு : 2010-களில் அரசாங்கத்தால் மலையடிவாரத்தில் ஒரு சிமெண்ட் சாலை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி அமைத்த நாள் வரை, இந்த முதல் சிற்றாலயத்தின் தகர்ந்த எஞ்சிய பகுதிகள் இடிபாடுகளாக இருந்து வந்தது. எனினும், சாலையிடும் நோக்கில் இப்பழம்பெரும் வரலாற்று எச்சங்கள் முழுமையாக அழிக்கப்பட்டது வேதனைக்குறியது - வரலாற்று அறியாமையின் காரணமாக இத்தகு அரிய புராதன வரலாற்று அடையாளத்தை பாதுகாக்கத் தவறி விட்டோம்.
பிற்காலத்தில் பாறைகள் உருளும் அச்சத்தினால் மக்களின் குடியிருப்புகள் தற்போது கிராமம் அமைந்துள்ள பகுதிகளுக்கு இடம் மாறிய நாட்களில் இச்சிற்றாலயம் கைவிடப்பட்டு, தற்போது சகாயமாதா குருசடி உள்ள இடத்திற்கு இடம் மாற்றப்பட்டிருக்க வேண்டும். இம்மாற்றம் நிகழ்ந்த காலம் வரலாற்றில் பதியப்படவில்லை.
இம்மானுவேல் ரொட்ரிகசு
(1662-1674)1662 முதல் 1674 வரை இம்மானுவேல் ரொட்ரிகசு (Emmanuel Rodriguez) இப்பணித்தளத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றினார். அடிகளாரின் கடின உழைப்பாலும், நற்செய்திப்பணியில் காட்டிய தீராத ஆர்வத்தாலும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகியது. பின்னர் அவர் மதுரை மறைப் பணித்தளத்தின் பார்வையாளராக நியமிக்கப்பட்டதால் மற்ற மறைப்பணித்தளங்களைச் சந்திப்பதற்காக நெடுந்தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் முள்ளிப்பாடியில் பல மாதங்கள் அவரால் பணியாற்ற இயலவில்லை. திருமுழுக்குப் பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்தது.
கொலை முயற்சி
ஒருமுறை இம்மானுவேல் ரொட்ரிகசு ஒரு மறைபரப்புத்தளத்தைச் சந்தித்துவிட்டு முள்ளிப்பாடிக்குத் திரும்பும்போது, காவிரி ஆற்றுக்கு வடக்கே ஒரு பேரிடர் நிகழவிருந்தது. சத்தியமங்கலத்திலிருந்து அடிகளார் தமது பயணத்தைத் தொடங்கி வரும்போது வழியில் மதுரை நாயக்க மன்னருக்கும், எலம நாயக்கர் என்ற ஜமீன்தாருக்கும் இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. போர் புரியப் பணம் தேவைப்பட்டதால் எலம நாயக்கர் அவ்வழியே பயணம் செய்வோரைக் கொள்ளையடிக்கவும், கொலை செய்யவும் உத்தரவிட்டார்.
அப்பாதகர்கள், இம்மானுவேல் ரொட்ரிகசை ஒரு காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அவர் பையைச்சோதித்தபோது விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லை. அப்பையிலிருந்து வெள்ளியிலான பூசைப்பாத்திரத்தைப் படைவீரர்கள் சரியாகக் கவனிக்கவில்லை. ஜமீன்தாரின் உத்தரவின்படி. அவரைக் கொலை செய்ய முயன்ற போது, அவரும் அவரது பணியாளர்களும் வீரர்களின் காலடிகளில் விழுந்து தங்கள் கழுத்தைக் காட்டினார். இதைக் கண்டு வியப்புற்ற வீரர்கள் அவா்களை உடனே விடுவித்தனர். இது 1666-ஜூன் 29-ஆம் நாள் நடைபெற்றது. பின்னர் ஊர் திரும்பிய அடிகளார், தமது பணியை முழுவீச்சில் தொடர்ந்தார். அந்த ஆண்டின் இறுதியில் திருமுழுக்குப் பெற்றோரின் எண்ணிக்கை 140.
சாதியப் பூசல்
முள்ளிப்பாடியில் வன்னியக் கிறிஸ்தவர்களைத் தவிர கம்மாளக் கிறிஸ்தவர்களும் இருந்தனர். இவர்கள் கைவினைஞர்கள். அதாவது தச்சர்கள், கொல்லர்கள், பொன் வேலை செய்பவர்கள். இவர்கள் ஆங்காங்கே பரவிக் கிடந்ததாலும், தங்கள் வேலைக்காகப் பிற ஊர்களுக்குப் பயணம் செய்ததாலும் இவர்களைக் கிறிஸ்தவ நெறியில் வளர்த்தெடுப்பது சற்றுக் கடினமாகவே இருந்தது. கிறிஸ்தவத்தைத் தழுவிய பிறகும் இந்து சமயச் சடங்கையும் சம்பிரதாயங்களையும் அவர்கள் கைவிடவில்லை. அடிக்கடி தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இவர்களைப் பற்றி ஆந்திரே ஃப்ரையார் தமது மடலில், “இங்குச் சில கம்மாளக் குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களிடையே உள்ள கிறிஸ்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றால் மறைப்பணியாளர்கள் எவ்வளவு முயன்றாலும் அவை அனைத்தும் கடினப்பட்டு இரும்பை வளைப்பது போல்தான் உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பின் குறிப்பு : மலையடிப்பட்டியில் மறைப்பணிக்குப்பின் 1682-இல் ஆவூர் மறைத்தளத்தை முதல் முதலாக இவரே உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின் 1682-இல் மதுரை மறைதளத்தின் அதிபரகவும், 1683-இல் மலபார் மறைத்தளத்தின் அதிபராகவும், 28-08-1694 இல் இறக்கும் போது கோவா மறைத்தளத்தின் அதிபராகவும் பதவி உயர்வுகள் பல ஏற்று, அரிய பல பணிகளாற்றி இறையடி சேர்ந்தார்.
முன் குறிப்பு : 1674-ஆம் ஆண்டு ரொட்ரிகோ தாப்ரேயு (Rodrigo d’Abreu) ஓர் ஆண்டுக்காலம் இப்பணித்தளத்தில் பணியாற்றினார்; இப்பணிகாலம் குறித்த ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை; மீண்டும் ஓராண்டுகள் கழித்து மறைப்பணியைத் தொடர்ந்ததாக அறிகிறோம்.
கிளாடு தாமே (Claude Damey) என்ற புர்கிண்டியைச் சார்ந்த பிரான்ஸ் நாட்டு மறைப்பணியாளர், இந்த இடைப்பட்ட ஓராண்டில், அதாவது 1675-இல் இங்குப் பணியாற்றினார். அவர் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது நாயக்கர் ஒருவரை திருமுழுக்குப் பெறத் தயாரிப்புக்காக அனுமதியளித்தார். இந்த நாயக்கர் மணப்பாறையில் வசித்த பெரும் வணிகரும், லிங்கயாத் சமூகத்தைச் சோர்ந்த ஒருவரின் மருமகனும் ஆவார். இதை அறிந்தவுடன் முள்ளிப்பாடிக்கு வந்து கிளாடு தாமேயைச் சந்தித்து அவருடைய மருமகனுக்குத் திருமுழுக்கு அளித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டினார்.
இந்நிலையில் மணப்பாறைக்கு வருகை தந்தார் மதுரை நாயக்கரின் முதன்மை அமைச்சா், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவரிடம் மறைப்பணியாளரைப் பற்றிப் பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறினார். படைவீரர்கள் விடியற்காலையில் முள்ளிப்பாடிக்குச் சென்று ஆலயத்தையும் அருள்பணியாளர் இல்லத்தையும் சுற்றி வளைத்தனர். ஆனால் யாரைக் கைது செய்து துன்புறுத்த நினைத்தார்களோ அவர் ஒப்புரவு அருளடையாளம் வழங்கக் காந்தலூருக்குச் சென்று விட்டார். ஆனால் அவர் அப்போது முள்ளிப்பாடியில் நிலவிய பதற்றமான குழலினால் அங்குத் திரும்பாமல் முத்துக்குளித்துறைக்குச் சென்றுவிட்டார்.
முதன்மை அமைச்சர் மணப்பாறையை விட்டுச் சென்ற பிறகே இம்மானுவேல் ரொட்ரிகசு முள்ளிப்பாடிக்குத் திரும்பினார். பிறகு அவர் மதுரை மறைப்பணித்தளத்தில் தலைவராக நியமிக்கப்பட்டதால் தொடர்ந்து இங்குப் பணியாற்ற இயலவில்லை.
கிளாடு தாமே அடிகளாருக்குப் பின், ரொட்ரிகோ தாப்ரேயு (Rodrigo d’Abreu) முள்ளிப்பாடியில் மீண்டுமாக பொருப்பேற்று, 1678 முதல் 1688 வரை பத்தாண்டுகள் பணியாற்றினார். இவரது மறைப்பணித்தளம் பரந்து விரிந்தது. மதுரை, மறவ நாடு, உத்தமபாளையம், கயத்தாறு போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. 1681-இல் இந்த மறைப்பணித்தளத்தில் 80,000 கிறிஸ்தவர்கள் இருந்தனர்.
இத்தகு பெரிய பகுதியைச் சந்திப்பதும், கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுவதும், அவர்களைக் கிறிஸ்தவ நம்பிக்கையில் வளர்த்தெடுப்பதும் இமாலயப் பணியாகவே விளங்கியது. இதைப்பற்றிக் குறிப்பிடும்போது, “போதுமான பணியாளர்கள் இல்லாததால் கிறிஸ்தவர்கள் இறைநம்பிக்கையில் இன்னும் மந்த நிலையிலேயே இருக்கின்றனர். அவர்கள் பிற சமயத்தாரைப் போல் வாழ்கின்றனர். மற்ற இடங்களை விட இந்நிலை முள்ளிப்பாடியில் இன்னும் வெளிப்படையாகவே உள்ளது.”
“ஒரு மறைப் பணியாளரும், ஒரு வேதியரும் இங்கே நிரந்தரமாகத் தங்கிப் பணியாற்ற வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை... இந்த மக்கள் தங்களது சாதியைப் பற்றிய தற்பெருமையாலும், இறுகிய மனநிலையாலும் கிறிஸ்தவ நெறிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுகின்றனர்,” என்று கூறியுள்ளார்.
1681 முதல் 1688 வரை: உள்ள ஆண்டுகளில் மறைப்பணியாளர்களின் கடின உழைப்புக்கும், அவர்கள் அனுபவித்த இன்னல்களுக்கும் நல்ல பலன் கிடைத்தது. 1682-இல் 265 பேரும், 1683-இல் 1136 பேரும் திருமுழுக்குப் பெற்றனர். ஏறத்தாழ 500 பேர் உத்தமபாளையத்தில் (திண்டுக்கல்) திருமுழுக்குப் பெறத் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் ராட்ரிகோ தாப்ரேயுவால் அங்கு செல்ல முடியவில்லை. கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முள்ளிப்பாடியிலேயே இருந்தார். உடல்நலம் பெற்ற பின் தமது பணியை மீண்டும் அவர் தொடர்ந்தார்.
மறைப்பணியாளர்கள் இல்லாத காரணத்தால் தொலைதூரங்களில் உள்ள ஊர்களில் இருந்து கிறிஸ்தவர்கள் அருள்பணித் தேவைகளுக்காக முள்ளிப்பாடிக்கு வந்தனர். மறவ நாட்டுக் கிறிஸ்தவர்களும் இங்கு வருகை தந்தனர். மறவ நாட்டில் 4,000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இருந்தும் அவர்களுக்காக பணியாற்ற அருள்பணியாளர்கள் யாருமிலர். அங்கு மறைப்பணி தடை செய்யப்பட்டதால் எப்பணியாளரும் அங்கு செல்ல முடியாத சூழல் நிலவியது.
முள்ளிப்பாடியில் பேய் பிடித்த, நோயுற்ற சில இந்துக்கள் குணமடைந்தனர். இவர்கள் திருமுழுக்குப் பெற்றுக் கிறிஸ்தவ மறையில் சேர ஆவல் கொண்டனர். இச்செய்தி சுற்றுப்புறங்களில் எந்த அளவுக்குப் பரவியது என்றால், பேயின் பிடியிலிருந்து விடுபெற வேண்டுமாயின் திருமுழுக்குப் பெற்றால் போதும் என்று மக்கள் பலர் எண்ணினர்.
பார்வை புதுமை
எடுத்துக்காட்டாக, பார்வையற்ற நாயக்கா் ஒருவர் தன் மகள் வழிகாட்டப் பிச்சையெடுத்துக் கொண்டே ரொட்ரிகோ தாப்ரேயுவிடம் வந்தார். தன்னுடைய கண்களை அவரிடம் காட்டினார். ஏனெனில் அவருக்குத் தாங்க முடியாத கண் வலி இருந்தது. ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்த இவர் தாம் பார்வை பெற வேண்டும் என்பதற்காகப் பல கடவுள்களுக்கும் காணிக்கை தந்தே வறியவரானார்.
ஆனால் பார்வை மட்டும் கிடைக்கவில்லை. தலித் கிறிஸ்தவர் ஒருவர் அவரை மறைக்கல்வி பயின்று திருமுழுக்குப் பெறுமாறு கூறினார். உடனே அவர், “நான் ஒருபோதும் கம்மாளர்களுடைய சமயத்தைத் தழுவ மாட்டேன்,” என்று மறுமொழி கூறினாராம். அக்காலத்தில் அப்பகுதியில் கிறிஸ்தவ சமயம் கம்மாளர்களின் சமயமாகக் கருதப்பட்டது. ஆனால் கண் வலி மேலும் அதிகரிக்கவே தன் மனைவியோடு மீண்டும் அவர் வந்தார். அவர் மற்றவர்களோடு அமர்ந்து மறைக்கல்வி கற்கத் தொடங்கியவுடனே பார்வை பெற்றார். அவரும் அவருடைய மனைவியும் திருமுழுக்குப் பெற்றுக் கிறிஸ்தவ மறையில் சேர்ந்தனர்.
சில கிறிஸ்தவர்கள் நம்பிக்கையில் ஆழமும், பணியில் ஆர்வமும் கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக, திருச்சிராப்பள்ளியிலிருந்து குடியேறிய ஒரு பக்தியுள்ள மூதாட்டி திருமுழுக்குப் பெறத் தயாரிப்பு நிலையில் இருப்போரைக் கவனித்துக் கொண்டதோடு, இறக்கும் நிலையில் இருந்த பிற சமயக் குழந்தைகளுக்கு அவ்வப்போது திருமுழுக்கு அளித்தார்.
ஜமீன்தார் கைது (1688)
இந்நிலையில் 1688-ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இருந்த ஜமீன்தார், மதுரை நாயக்க மன்னரைக் காண்பதற்காகச் சென்றார். அவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடைமைகள் பறிக்கப்பட்டன. மனைவியர் துன்புறுத்தப்பட்டனர். ஜமீன்தாரும் சிறையிலேயே இறந்தார். அவருக்கு நேர்ந்த இந்தப் பரிதாப முடிவைக் கேள்வியுற்றுக் கிறிஸ்தவர்கள் மிகவும் வருந்தினர். நாயக்கரின் படைகள் விரைந்து வருவதையும் கேள்வியுற்றனா்.
அச்சமுற்ற முள்ளிப்பாடி இறைமக்கள், ஊரைக் காலி செய்து, பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தனர். அச்சூழ்நிலையில், ரொட்ரிகோ தாப்ரேயுவுக்குப் பின் அந்தோனி ஃப்ரோவேன்சா அடிகளார் மறைத்தளத்தின் பணியாளராக மீண்டும் பொருப்பேற்றிருந்தார்.
விடுதலைப்பயணம்
அப்போது இரவு வேளை; திருக்காட்சி விழாவுக்கு முந்தின நாள் (05-01-1688). தங்களின் குரல் அறிந்த ஒரே ஆயனாம், அந்தோனி ஃப்ரோவேன்சாவின் தலைமையில் எல்லாக் கிறிஸ்தவர்களும் ஊரை விட்டுப் புறப்பட்டுக் கல்லும் முள்ளும் புதர்களும் நிறைந்த பாலைநிலம் வழியே பயணம் செய்தனர். மோசேயின் தலைமையில் இஸ்ரயேலர் பாலை நிலத்தில் பயணம் செய்தது போல, மூன்று ஞானிகள் நெடும் பயணம் மேற்கொண்டது போல முள்ளிப்பாடிக் கிறிஸ்தவர்களும் சென்றனர்.
மறைவிடத் தஞ்சம்
புயலுக்குப் பின் அமைதி என்பது போலச் சொந்த ஊரில் அமைதி தெளிவாகத் தெரியவில்லை. அடுத்த இருபது ஆண்டுகள் இப்பணித்தளத்தைப் பற்றிய வரலாற்றுத் தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால், இவர்கள் எங்கே பயணம் மேற்கொண்டார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது. கணிப்பின் படி, இந்த 20 ஆண்டுகளும் எதோ ஒரு இடத்தில் இவர்கள் தஞ்சமடைந்து, மறைந்து வாழ்ந்திருக்க வேண்டும்.
இந்நிகழ்வில் ஒரு ஆச்சரியமான வரலாற்று ஒற்றுமை புலப்படுகிறது. தொடக்கத்தில் 1662-இல் மக்கள் திருச்சியிலிருந்து இப்பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்த போது அவர்களை வழிநடத்தி கொணர்ந்தவர் தந்தை அந்தோணி ஃப்ரொவென்சா; கால் நூற்றாண்டிற்குப் பின்னர் மீண்டும் புலம் பெயர்ந்த போதும், இதே தந்தை தான் மக்களை வழிநடத்துகிறார். இவ்வாறு இம்மறைத்தளத்தில் நிகழ்ந்த இரு விடுதலைப்பயணத்திலும், பழைய ஏற்பாட்டு மோசே போல, இஸ்ரேயல் இனம் போன்ற இம்மக்களை, ஆண்டவரின் சொல்படி பாதுகாப்பாக வழிநடத்திச் சென்று காப்பாற்றிய இத்தந்தந்தைக்கு, ‘மலையடிப்பட்டியின் மோயீசன்’ எனும் புனைப்பட்டம் வழங்குதல் தகும்.
இந்த இருபது ஆண்டுகால வரலாற்றைப் பொருத்தவரை, கிடைத்த சில வரலாற்றுக் குறிப்புகளின் படி, 1689 முதல் சிலவருடங்கள் வரை, Fr. கார்வால்ஹோ (Carvalho) அடிகளார், தெற்கில் கயத்தாறு முதல் வடக்கில் மலையடிப்பட்டி வரையிலான மிகப் பரந்து விரிந்த மறைத்தளப்பகுதியின் பொருப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இக்காலகட்டத்தின் போது, 1691-ஆம் ஆண்டு புனித அருளானந்தர் மலையடிப்பட்டிக்கு பங்கு விசாரணைக்காக (As a delegate of Provincial) வருகை புரிந்த நிகழ்வு வரலாற்று பதிவுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
1661-1708 வரையுள்ள 47 ஆண்டுகள் இக்குறிப்பிட்ட பகுதியில், மிகச்சிறப்பாக செயல்பட்டு இம்மறைத்தளத்தின் ஆன்மீகப் பணிகள் குறிப்பிடத்தகுந்தவை; இம்மறைத்தளத்தில் சுற்றுப்புரங்களில் வாழ்ந்து வந்த எராளமான இந்து கம்மாளர்கள் (Smiths - கொள்ளர்கள்) கத்தோலிக்க கிறிஸ்தவ மறையை இக்காலகட்டத்தில் ஏற்றனர். வரலாற்று புள்ளியியல் சான்றுகளின் படி, 1666 : 266, 1674-1676 : 207, 1677 : 247, 1678 : 297, 1679-1681 : 375, 1682 : 165, 1683 : 1136, 1684-1686 : 75, 1686-1708 : No Records, என்ற எண்ணிக்கையில் புதிதாக கிறிஸ்தவ மறையில் மக்கள் இணைந்திருக்கின்றனர்.
இங்கனம், இறையாட்சிக்காக இயேசு சபையினர் முள்ளிப்பாடி மறைத்தளத்தில் அயராது ஆற்றிய உழைப்பு, ஆழமாக மேற்கொண்ட கடின முயற்சி, அனுபவித்த மாளாத் துயர்களின் நினைவாக மூன்று மறைப்பணியாளர்களின் கல்லறைகள் முள்ளிப்பாடியில் இருந்தன.