"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்"
(யோவான் 2:5)
புனித சகாய மாதா குருசடியானது தோமையார் மலை அடிவாரத்தில் நூற்றாண்டு நினைவு வளைவிற்கு அருகில் அமைந்துள்ளது. மலையடிப்பட்டியிலிருந்து வெளியே செல்லும் பொழுது இந்த குருசடியின் தரிசனம் தான் நமக்கு முதலில் கிடைக்கும்.
இந்த குருசடியின் வரலாற்று பின்னணி குறித்து நோக்கினால், இது பங்கு மறைத்தல உருவாக்க காலத்திலிருந்து தொடங்க வேண்டும். கிறிஸ்தவர்கள் முள்ளிப்பாடியிலிருந்து, மலையடிப்பட்டிக்குள் முதன் முதலாக குடியேறிய போது, அப்போதைய பங்கு குரு அருட்பணி. இம்மானுவேல் ரோட்ரிகஸ் அவர்களால் 1662-இல் ஓர் சிற்றாலயம் மலையடிவாரத்தில் கட்டப்பட்டு, அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப் பட்டது. இச்சிற்றாலயம் அமைந்திருந்த இடம் சறுக்குப் பாறைக்கு நேர் கீழாக உள்ள பகுதி. மக்களின் முதல் குடியிருப்பும் இப்பகுதியில் தான் இருந்தது.
(2010-களில் அரசாங்கத்தால் மலையடிவாரத்தில் சிமென்ட் சாலை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி அமைத்த போது, இந்த முதல் சிற்றாலயத்தின் தகர்ந்த எஞ்சிய பகுதிகள் இருந்தது. எனினும், சாலையிடும் நோக்கில் இப்பழம்பெரும் வரலாற்று எச்சங்கள் முழுமையாக அழிக்கப்பட்டது வேதனைக்குறியது - வரலாற்று அறியாமையின் காரணமாக இதனை நாம் பாதுகாக்கத் தவறி விட்டோம்)
பிற்காலத்தில் பாறைகள் உருளும் அச்சத்தினால் மக்களின் குடியிருப்புகள் தற்போது கிராமம் அமைந்துள்ள பகுதிகளுக்கு இடம் மாறியது. இச்சூழ்நிலையில், அச்சிற்றாலயம் கைவிடப்பட்டு, தற்போது குருசடி உள்ள இடத்திற்கு பின்னாட்களில் இடம் மாற்றப்பட்டிருக்க வேண்டும். இம்மாற்றம் நிகழ்ந்த காலம் வரலாற்றில் பதியப்படவில்லை. மாற்றப்பட்ட இச்சிற்றாலயம், ஒரு வளைவு கூடாரம் (Half Global Roof - Portugese Roof Type) போன்ற அமைப்பிலான குருசடியாக வெகுகாலம் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
19-ஆம் நூற்றாண்டின் பாதி வரை, தோமையார் திருத்தலத்திற்கு செல்வதற்கு படிக்கட்டு அமைப்போ, அல்லது சாலை வசதியோ எதுவும் இல்லை. மக்கள் பாறைகளையும் திண்டுகளையும் பயன்படுத்தி மேலே ஏறி ஜெபித்து வந்துள்ளனர். (தற்போது கேரளாவில் அமைந்துள்ள குருசு மலையில் இதுபோன்ற ஓர் அமைப்பை நாம் காணமுடியும்). அதுவரையில், வயதானவர்கள் மற்றும் மலை மேலே ஏற முடியாதவர்கள், கீழேயே இருந்து இக்குருசடியின் முன்பாக ஜெபித்து வந்துள்ளனர்.
இச்சூழ்நிலையில், 1938-இல் கரடு முரடான படிக்கட்டுகளும் (உபயம் - அருளாந்து உடையார்), பின்னர் 1972-இல் அருட்தந்தை மரியானந்தம் அவர்களால் தற்போதுள்ள படிக்கட்டு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. இதே காலகட்டத்தில், மலையடிவாரத்தில் புனித தோமையாரின் இந்திய வருகையின், 19-ஆம் நூற்றாண்டின் நினைவாக ஓர் அலங்கார நினைவு வளைவு, இக்குருசடிக்கு அருகாமையில் கட்டப்பட்டது.
இத்தோடு, இக்குருசடியும் புணரமைக்கப்பட்டு தற்போதுள்ள வடிவத்தில் கட்டப்பட்டது (கூடார அமைப்பிலான மேற்கூரை மாற்றப்பட்டது). மேலும் கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஓரு தோமையார் திருச்சிலுவை இக்குருசடியில் பதிக்கப்பட்டது. இச்சிலுவையின் காரணமாக இதனை தோமையார் குருசடி என்றும் சிலர் அழைப்பர்.
(தோமையார் சிலுவையியின் அமைப்பு சற்று மாறுதலாக இருக்கும் - துருவங்களின் பூக்கள் போன்ற அமைப்பு இருக்கும்; பொதுவாக கேரளப் பகுதிகளிலுள்ள சிரிய-மலபார் கோவில்களில் மட்டுமே இச்சிலுவைகளைக் காண இயலும்; தமிழகத்தில் பரங்கி மலையில் மட்டும் இதே போன்ற சிலுவையைக் காணலாம்)
எனினும் பின்னாட்களில் இது ஒரு வழிபோக்கர்களுக்கான சிற்றாலயமாக மாறிப்போனது. இக்குருசடியானது மக்களின் வாழ்வோடு ஒன்றாகிப் போயுள்ளதை, இன்றைய அன்றாட வாழ்வில் காண முடியும். எவ்வாறெனில் இந்த குருசடி மாதா 'பயணிகளின் பாதுகாவலி’யாக நம்பப்படுகிறார். இவ்வழியே செல்லும் அனைத்து வழிப்போக்கர்களும் இந்த குருசடிக்கு வணக்கம் செய்யாமல் செல்வதில்லை-ஊருக்குள் வருவதுமில்லை; இதில் இந்து மக்களும் அடங்குவர்.
சகாய மாதாவே பயணத்தின்போது அனைத்து மக்களையும் பாதுகாத்து வருகிறார் என்பதுவே மக்களின் ஆழ்ந்த விசுவாசம். 'சகாய மாதா மலையடிப்பட்டியின் எல்லை காவலியாக விளங்குகிறார்' என்று மொழிந்தால் அது மிகையாகாது.
மூன்று நூற்றாண்டுகளாக இக்குருசடியானது பல்வேறு மாற்றங்களை அடைந்திருந்தாலும், மலையடிப்பட்டி எனும் ஊரின் வரலாற்றுத் தொடக்கப்புள்ளி இதுவேயாகும்.
மேற்குத் தெருவில், மலை அடிவாரத்தில் இரு பழைய கல்லறைகள் போர்த்துக்கீசிய கட்டிட அமைப்பின் படி 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டுள்ளது. “வீரமாமுனிவர் கல்லறை” என்று அழைக்கப்படும் இக்கல்லறைக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்று தெரியவில்லை. இயேசுசபை மறைபோதகர் வீரமாமுனிவர் இங்கே அடக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் என மக்கள் செவி வழிச் செய்தியாக நம்புகின்றனர். ஆனால் வரலாற்றின்படி இதற்கு எந்த சான்றும் இல்லை - வீரமாமுனிவர் 04-02-1747 அன்று இறந்து அம்பலகட்டு எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது தான் சரியான வரலாறு. மலையடிப்பட்டி வரலாற்றுக் குறிப்புகளின் படி, இம்மறைத்தளத்தில் பணி செய்த குருக்கள் சிலர் இங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அருட்தந்தை ஜோகன்னஸ் ஃபோர்டு, 1892 ல் அடக்கம் செய்யப்பட்டார். அவருக்கு அருகில் கோவா குரு ஒருவர் அடக்கம் செய்யபட்டுள்ளார். இவருக்கு முன்பாக இரு ஐரோப்பிய குருக்கள் இரு தனித்தனி அறைகளில் இக்கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கல்லறைக்கு வெளியே ஒரு கோவா குரு (கோவா பதுரவாதோ பிரிவினையின் போது) அடக்கம் செய்யப்பட்டு, ஒரு சிலுவை நடப்பட்டிருந்தது. தந்தை யூஜின் அவர்கள் அச்சிலுவையை கல்லறையின் உட்பகுதியில் நிறுவினார்கள். அச்சிலுவை இருந்த இடத்தில், மண்ணின் மைந்தரான Fr. I. ஆரோக்கியம் அவர்கள் 2015-இல், அடக்கம் செய்யப்பட்டு, மற்றொரு சிறிய புதிய கல்லறை அமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.
பழைய மறைத்தளமான இருங்கலூர்-புறத்தாக்குடியிலும் இதேபோன்ற கல்லறைகள் அமைப்பை நாம் காண முடியும். அங்கும் இதுபோன்றே மறைபணியாளர்களை அடக்கம் செய்துள்ளனர். வணக்க மாதா திருவிழாவான, மே 31 ம் தேதி சிறப்பு அன்னதானம், இக்கல்லறையில் மேற்குத்தெரு மக்களால் வழங்கப்படுகிறது.
"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே" (யோவான் 11:25)
முற்காலத்தில் பாஸ்கா விழா கொண்டாடும் போது, அச்சூழலில் ஒலிப்பெருக்கிக் கருவிகள் ஏதும் இல்லை. எனவே நாடகத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு காட்சி முடிந்த பின்பும், குருவானவர் அக்காட்சியைக் குறித்து மக்களுக்கு விளக்கிக் கூறுவார். இது கூட்டத்தின் நடுவில் ஒரு மேடையில் நடக்கும்.
பின்னர் ஒரு கட்டத்தில் ஒரு நிரந்தர மேடை இதற்காக கட்டி எழுப்பப் பட்டது. இதற்கு வாசாப்பு மேடை என்று பெயர். இந்த வாசாப்பு மேடை 1880-இல், (Fr. பெனடிக்ட் புர்தி சவேரியார் பங்கின் குருவாக பணியாற்றிய காலத்தில்) கோவா பதுரவாதோ குருக்களால் பனிமய அன்னை ஆலயத்திற்கு அருகில் அமைக்கப் பட்டது. இதுவே பின்னாட்களில் 'பிரசங்கத் தொட்டி' என்று அழைக்கப் பட்டது. (இந்தப் பாரம்பரியத்தின் அடிப்படையில் தான், இன்றளவும் 'கல்தூண் பிரசங்கம்' என்கிற ஓர் மறையுரை இன்றளவும் பாஸ்காவின் ஓர் அங்கமாக கடைபிடிக்கப் பட்டு வருகிறது)
பிற்காலத்தில் அறிவியல் வளர்ச்சி காரணமாக, இம்மேடையின் தேவை அற்றுப் போகவே, அது எந்த பயனும் இன்றி, சிதிலமடையத் தொடங்கிற்று. இப்பாரம்பரிய சின்னத்தினை பாதுகாக்கும் எண்ணத்தில், அருட்தந்தை. மரிய அற்புதம் அவர்கள் பங்கு குருவாக இருக்கும் போது, இதனை 1996-ல் 'உயிர்த்த ஆண்டவர் கெபி'யாக புணரமைப்பு செய்தார்.
இக்கெபி நடுத்தெருவில் அமைந்திருப்பதால், நடுத்தெரு மக்கள் ஈஸ்டர் ஞாயிறு மாலையில், சிறப்பு செப வழிபாட்டை செய்ய தொடங்கினர். தற்போது இது ஒரு சிறப்பு நிகழ்வாக மாறி, நடுத்தெரு மக்கள் அனைவரும் கூடி வந்து செபம் செய்து, பொங்கலிட்டு, அனைவருக்கும் பகிர்ந்து - இதை ஒரு பெருவிழாவாக இன்றும் கொண்டாடி வருகிறார்கள்.
"இவரே உம் தாய்" (யோவான் 19:27)
மலையடிப்பட்டியின் நுழைவு வாயிலாய் இருக்கும் மலையடிவாரத்தின் இடது புறத்தில் இச்சிற்றாலயம் அமைந்துள்ளது.
இச்சிற்றாலயம் இங்கு கட்டப்பட்டதன் வரலாற்றை ஆராய்ந்தால், 1980-களில், வேளாங்கண்ணி பாதயாத்திரை பக்தி முயற்சி உருவாக தொடங்கியிருந்தது. இதன் விளைவாக இந்த ஆலயமானது கூரையால் வேயப்பட்ட ஒரு சிற்றாலயம் ஆக கட்டப்பட்டது. தொடக்க நாட்களில் பாதயாத்திரை செல்வோர் மாலையிட்டு, 40 நாளும் இவ்வாலய வளாகத்திலேயே இரவு நேரங்களில் தங்கியிருந்து அதன் பின்னர் பாதயாத்திரையாக வேளாங்கன்னிக்குச் சென்று வந்தனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவில் ஒரு ஓட்டு கட்டடமாக மாற்றப்பட்டது. 1995ஆம் ஆண்டு வாக்கில் தற்போது உள்ள இந்த அழகிய ஆலயமானது மேற்கூரையோடு கட்டப்பட்டது;
அந்நாட்களில்,மலையடிப்பட்டிக்கும்,மலைத்தாதம்பட்டிக்கும் இடையே இருந்த திருவிழா தொடர்பான சச்சரவுகள் உச்சத்தில் நீடித்ததால், தோமையார் சப்பரம் மலைமேல் செல்லமுடியாத படி தடை நீடித்தது. இதன் காரணமாக, இச்சிற்றாலயத்திலிருந்து தோமையார் சுரூபத்தை மூன்றாம் நாள் திருவிழாவன்று சப்பரத்தில் எடுத்து வரும் வழக்கம் சிறிது நாட்கள் நீடித்து வந்தது.
இவ்வாலயத்திற்கும், மக்களுக்கும் ஓர் உணர்வுப் பூர்வமான தொடர்பு இருப்பதை அறிய முடிகிறது. தற்போதைய மரபின் படி, வேளாங்கன்னி திருத்தலத்திற்கு பாதயாத்திரையாச் செல்லும் பக்தர்கள் அனைவரும் 40 நாட்கள் நோன்பிருந்து, பின்னர் 9 நாட்கள் நவ நாளை இச்சிற்றாலயத்தில் சிறப்பு செபமாலையாக செபிக்கின்றனர். இறுதி நாளில், இவ்வாலயத்தில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப் பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டு, இங்கிருந்து குழுக்களாக வேளாங்கன்னி நோக்கி பயணத்தைத் தொடங்குகின்றனர்.
தற்போது ஒரு கொடிமரம் நிறுவப்பட்டு, ஆலயம் செப்பனிடப்பட்டு காண்பதற்கு மிகப் பொலிவுடன் விளங்குகிறது.
"நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 1:38)
புனித சவேரியார் பங்கு ஆலயத்தின் வலது புறத்தில் மிக நேர்த்தியாகவும், பேரழகுடனும் புனித லூர்து அன்னை கெபி எழுப்பப்பட்டுள்ளது. வற்றாத நீரூற்றாய் வழி காட்டும் அருட்பெருஞ் சுடராய் ஆனந்த கடலாய், அன்பின் அரசியாய், நாடிவருவோரைத் தேடிச்சென்று நலமளித்திடும் விண்ணக அரசியாய் லூர்து அன்னை வீற்றிருக்கும் கெபி. அன்னையின் திருப்பாதத்தில் இருந்து வரும் நீரூற்று பக்தர்களின் பாவங்களைப் போக்கும் உடலையும், உள்ளத்தையும் பரிசுத்தமாக்கும்.
1885-இல் பெனடிக்ட் புர்தி அடிகளார் பங்குத்தந்தையாக பணியாற்றிய காலத்தில், அப்போதைய பழைய சவேரியார் (கூரை) ஆலயத்தை தகர்த்து, புதிதாக கட்டினார்; இதன் பின்புறமாக ஒரு பங்குத்தந்தை இல்லத்தையும், ஆலயத்தின் வலதுபுறமாக (தற்போது லூர்தன்னை கெபி அமைந்துள்ள இடம்) ஒரு பள்ளியையும் நிறுவினார். இது ‘புனித சவேரியார் பாடசாலை’யாகும். 120 ஆண்டுகளாக அமைந்திருந்த இக்கட்டடம், கல்விநிலையமாக மட்டுமல்லாது, காலஓட்டத்தில் பல்வேறுபட்ட பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
பிற்காலத்தில், இப்பள்ளியானது நடுநிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்ட நிலையில், இடப்பற்றாக்குறை காரணமாக, பனிமயமாதா கோவில் வளாகத்தில் 1959-இல் கட்டப்பட்ட புதிய ஓட்டுப் பள்ளிக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் 1885-இல் கட்டப்பட்ட முதல் பாடசாலைக் கட்டடமானது, தமிழக அரசினால் இயக்கப்பட்டு வந்த ‘காதிகிராஃப்ட்’ நெய்வுத் தரியின் அலுவலகமாக செயல்பட ஆரம்பித்தது. 1960-இல் தமிழக அரசால் கிராமப்புற தொழில்வாய்ப்புகளை உயர்த்தும் வண்ணமாக ‘காதி கிராஃப்ட் கிராமச் சட்டம் இயற்றப் பட்டு, இதனடிப்படையில், ஒரு நெசவுத் தொழிற்சாலை மலையடிப்பட்டியிலும் 1998-வரை செயல்படுத்தப்பட்டு வந்தது. மலையடிப்பட்டியைச் சார்ந்த பெரும்பான்மையான பெண்கள் இதன் மூலம் வருவாய் ஈட்டி வந்தனர். சவேரியார் கோவிலின் இடது புறத்தில், சாலைக்கு அடுத்து உள்ள கோவிலுக்குச் சொந்தமான இடம் இதற்காக ஒதுக்கப்பட்டு, தொழிற்சாலை இயங்கி வந்தது. பிற்காலத்தில் இதன் செயல்பாடு நின்றதால், அக்கட்டடமும் தகர்க்கப்பட்டு தற்போது, வெற்றிடமாகவே உள்ளது.
நெசவுத்தொழிற்சாலை முடங்கிய பிறகு, இந்த முதல் பாடசாலைக்கட்டிடம் எதற்கும் பயன்படாமல் இருந்து வந்தது. திருச்சி மறைமாவட்ட பல்நோக்கு சமூகப் பணி மையத்தின் சார்பாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், இதன் ஒரு புறத்தில் சில காலம் செயல்பட்டு வந்தது (Fr.யூஜின் அவர்கள் TMSSS - இன் இயக்குநராக பணியாற்றிய காலம்). 2005-க்கு பின்பாக அரசு சுகாதார நிலையம் ஒன்று ஆலமரத்தடிக்கு அருகில் கட்டப்பட்டதால், இதன் செயல்பாடும் அத்தோடு நின்று போனது.
இந்நிலையில், இவ்விடத்தில் ஒரு புதிய கெபியை நிறுவ அப்போதைய பங்குத்தந்தை T. யூஜின் அவர்கள் முடிவு செய்தார். எனவே இப்பழைய கட்டடம் முற்றிலுமாக தகர்க்கப்பட்டது. புதிய கெபி கட்டும் பணியை அருட்தந்தை ஸ்டீபன் கஸ்பார் அவர்கள் (மண்ணின் மைந்தர்) 09-01-2005 அன்று அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
மக்களின் முழு நிதி உதவியினால், இவ்வழகிய லூர்து அன்னை கெபியானது அவ்விடத்தில் மிகப்பொலிவுடன் கட்டி எழுப்பப்பட்டு, 10-03-2005 அன்று, அப்போதைய ஆயர் மேதகு அந்தோணி டிவோட்டா அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு, முன்னாள் பங்கு தந்தை பத்திநாதர் அவர்களால் திறந்து வைக்கப் பட்டு, அன்னைக்கு அர்ப்பணிக்கப் பட்டது. (லூர்து அன்னை கெபி, பங்குத்தந்தை இல்லம், தோமையார் சமூகப் பணிக்கூடம், சவேரியார் பள்ளி ஆகிய நான்கு கட்டடங்களுக்கும் ஒரே நாளில் அடிக்கல் நாட்டப்பட்டு, ஒரு வருடங்களுக்குப் பின் ஒரே நாளில் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.)
நன்கொடை வழங்கிய அனைவரது பெயர்களும் அச்சடிக்கப்பட்டு, ஒரு கண்ணாடிக் குப்பியில் அடைக்கப் பட்டு, கெபியின் மேலுள்ள கல்வெட்டின் உட்புறத்தில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ளது. (ஆர்ஸ் நகரில், புனித வியான்னி அவர்களால் ஒரு மரியன்னை கெபி எழுப்பப்பட்ட போதும், இதே போன்று அப்பங்கு மக்கள் அனைவரது பெயர்களும் மரியன்னையின் பாதங்களுக்குக் கீழ் புதைக்கப்பட்டதை இது நினைவுறுத்துகிறது)
சனிக்கிழமைகள் தோறும் ஜெபமாலை, பிரார்த்தனை. திருப்பலி, குணமளிக்கும் வழிபாடுகள். மாதத்தின் முதல் சனி அன்று நற்கருணை ஆசீர் நடைபெறுகின்றன.
மேலும், மே மாதம் முழுவதும் அன்னையின் வணக்க மாதமாக அனுசரிக்கப்பட்டு, தினமும் செபமாலை இக்கெபியின் முன்பாக நடைபெறும். மே மாதம் 31 ம் தேதி வணக்க மாதா திருநாளாக சிறப்பிக்கப்பட்டு, அன்னையின் திரு உருவம் தாங்கிய அலங்கார ரத பவனி இரவில் தெருக்களில் எடுத்து வரப்படும்.
"கிறிஸ்துவுக்கு சொந்தமான ஆத்மாக்களைப் பறிக்க பிசாசு ஒவ்வொரு நரம்பையும் திணறடிக்கிறது" - புனித செபஸ்தியார்
இதற்கு முன்பாக, தொடக்கிலிருந்து கிழக்குத் தெரு மக்களால், பெரிய தேரின் அருகில், கூரை வேயப்படாத ஒரு செபஸ்தியார் சிலுவைத்திண்ணை கட்டப்பட்டிருந்தது. பின்னர் செங்கல் கட்டிடமாக, பூச்சு பூசாமல், பல ஆண்டுகள் இருந்தது.
பல நல் உள்ளங்களின் நன்கொடைகளால், புதிய சிற்றாலயமாக உருவெடுத்தது. புனித செபஸ்தியாருக்கு கிழக்குத் தெரு மக்களால் அர்ப்பணிக்கப்பட்ட சிற்றாலயமாக திகழ்கிறது.
இக்கோவிலின் மேல் அமைக்கப்பட்டுள்ள சிலுவைக்கு ஒரு சிறப்பு உண்டு. இச்சிலுவை, புனித சவேரியார் ஆலயத்தின் கோபுரத்தில் அமைந்திருந்த நூற்றாண்டு பழமையுடைய மரச்சிலுவையாகும். தந்தை யூஜின் அவர்கள், புனித சவேரியார் கோவிலின் கோபுரத்தில் புதிதாக ஒரு நியான் விளக்கு சிலுவையை நிறுவிய போது, இந்த பழைய சிலுவையை பாதுகாக்கும் நோக்கில், புனித செபஸ்தியார் சிற்றாலயத்தில் நிறுவுவதற்காக, மக்களின் வேண்டுதலின் பேரில் வழங்கினார்கள்.
இச்சிற்றாலயத் திருவிழா ஜனவரி 20 ஆம் தேதி புனித செபஸ்தியார் திருவிழாவாக, 9 நாள் நவநாள் அனுசரிக்கப் பட்டு 10 ம் நாள் விழா எடுக்கப் படுகிறது. கிழக்குத்தெரு மக்களின் கண்காணிப்பில் இவ்விழாவானது சிறப்பாக வெகு விமரிசையாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோவிலானது 2012 ல் புணரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டது.