"அனைவரும் ஆரவாரத் தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்"
(2 சாமுவேல் 6:15)
மலையடிப்பட்டி பாரம்பரியத்தின் அடையாளங்களில் மற்றும் பெருமைகளில் முதன்மையானது 'பெரிய தேர்'. ஏறக்குறைய பங்கு உருவாக்க நிலையிலிருந்தே இந்த தேரானது, பங்கின் பெருமையாக அறியப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் தற்போதுள்ள தேர் சற்றேறக்குறைய இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக, புதிதாக செய்யப்பட்டதாகும்.
மலையடிப்பட்டி பெரிய தேர்த் திருவிழா வரலாறு 100 வருடங்களாக அறியப்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில், ஜமீன்தார் ஆட்சி வழக்கத்தில் இருந்த நாட்களில், அப்போதைய மருங்காபுரி ஜமீன் விஜய பூச்சைய நாயக்கர் அவர்கள், தன்னுடைய வாழ்வில் பனிமய அன்னை வழியாக நிகழ்ந்த ஒரு புதுமைக்கு நன்றிக்கடனாக, மலையடிப்பட்டி திருவிழாவிற்காக ஒரு தேரினை செய்து, அதனை 1882-இல் இறைமக்களுக்கு நேர்த்திக் கடனாக வழங்கினார். இந்தத் தேர் 1995-ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய ஒரு நூற்றாண்டாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
எனினும் ஒரு கட்டத்தில் அந்தத் தேர் முற்றிலும் சிதிலமடைந்து தேரை இழுத்தால் விபத்து நேரிடும் என்ற கட்டத்திற்கு வந்தபோது, அரசாங்கம் அந்த தேரை இழுக்க, 1995-இல் அனுமதி மறுத்து, புதிய தேர் செய்ய அரசுப் பொறியாளர்களால் அறிவுறுத்தப் பட்டது.
இந்நிலையில், அப்போது பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. மரிய அற்புதம் அவர்களுடைய பெரு முயற்சியால் 4.5 லட்சம் நன்கொடைசேகரிக்கப்பட்டு, ஒரு புதிய தேர், பத்தே மாதங்களில் உருவாக்கப்பட்டது. (இந்த நன்கொடையில் பெருந்தொகை அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த க. பொன்னுச்சாமி அவர்களால் வழங்கப்பட்டது; இதற்கான பட்டயம் தேரில் பொறிக்கப் பட்டுள்ளது)
புதிய தேர் செய்வதற்கு புதிதாக மரங்கள் அறுக்கப்பட்டு முழு வீச்சுடன், இந்த தேரானது அழகுடனும் கம்பீரமாகவும் செய்யப்பட்டது. 1996 ல் தேரின் வெள்ளோட்டம் நடைபெற்று, அந்த வருடமே புதிய தேர் பயன்பாட்டிற்கு வந்தது. எனினும் தேரின் சக்கரங்கள் மரத்தாலே செய்யப்பட்டிருந்தன. பிற்காலத்தில் 8 ஆண்டுகள் கழித்து, 2004 ம் ஆண்டில் அருட்தந்தை யூஜின் அவர்கள் பங்குத்தந்தையாக இருந்த பொழுது, மக்களின் நிதி உதவியுடன் புதிதாக இரும்பு சக்கரங்கள் நான்கு பொருத்தப்பட்டன.
பங்கின் பெருவிழாவான, பாஸ்கா திருவிழா நாட்களின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4 மணிக்கு, இந்த பெரிய தேரானது அலங்கரிக்கப்பட்டு ஊரை சுற்றி பவனியாக இழுத்து வரப்படும். அதிலே, உயிர்த்த ஆண்டவரின் சொரூபமானது, பாஸ்கா மேடையிலிருந்து பவனியாக எடுத்து வரப்பட்டு இத்தேரின் மீது வைக்கப்பட்டு, உயிர்த்த ஆண்டவர் ஊரை சுற்றி வந்து மக்களுக்கு ஆசிர்வாதம் அளிப்பார். இத்துடன், புனித பனிமய அன்னை சொரூபம் மற்றும் புனித தோமையார் சொரூபம் தனித்தனி சப்பரங்களில், தேருக்கு முன்பாக பவனி செல்லும்.
இந்நிகழ்வில் பங்குபெற்று இறையாசி பெற, சுற்றியுள்ள 18 கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு பெறுவது இதன் தனிச் சிறப்பு. பொதுவாக, சமயப்பாகுபாடின்றி அனைத்து மக்களும், தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டியும், பெற்ற நன்மைகளுக்கு நன்றியாகவும், இத்தேரின் வடம் பிடித்து இழுப்பர். இதன் மூலம் உயிர்த்த ஆண்டவரின் அருள் அவர்களுக்கு கிடைப்பது, மக்களின் அசைக்க முடியாத விசுவாசம்.
திருவிழாக்கு வரும் மக்கள், தேரோட்டம் முடிந்த பின்,திருவிழா ஞாபகமாக, கடைகளில் இனிப்பு, திண்பண்டங்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் புனிதப் பொருட்களை வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே" (யோவான் 11:25)
மலையடிப்பட்டி சிறப்புகளில் அடுத்தபடியாக திகழ்வது 'பாஸ்கு பெருவிழா'. இவ்விழாவானது ஒவ்வொரு ஆண்டும், தவக்கால எட்டாம் வாரம் அல்லது ஈஸ்டர் இரண்டாம் வாரத்தின் வியாழன் முதல் ஞாயிறு வரை நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
இதில் முதல் இரண்டு நாட்கள், பாஸ்கா நாடகமானது மலையடிப்பட்டி இறைமக்களால் நடித்துக் காட்டப்படும். இதற்காக, தவக்காலத்தின் 40 நாட்களும் பயிற்சி தயாரிப்புகள் நடைபெறும். இந்த பயிற்சியானது 'பாஸ்கா சடுதி' என்று அழைக்கப்படுகிறது. (சடுதி என்றால் - குறுகிய நேர நாடகப் பயிற்சி என்று பொருள்)
இந்நாடகத்தின் முதல் நாள், இயேசுவின் பாடுகள் தத்ரூபமாக நடித்துக் காட்டப்படும்; இதனிடையே வழங்கப்படும் கல் தூண் மறையுரையானாது, வரலாற்று பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பாஸ்கா முடிந்த பின் மரித்த ஆண்டவரின் உடலானது, தூம்பா பவனியாக ஊரைச் சுற்றி எடுத்து வரப்பட்டு, பனிமயஅன்னை ஆலயத்தில் நிலைநாட்டப்படுவது பாரம்பரியமாக நடைபெறுகிறது.
இரண்டாம் நாள் இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வுகள் நடித்துக் காட்டப்படும்; இரண்டாம் நாள் பாஸ்கா முடிந்த பின் மின் அலங்காரம் செய்யப்பட்ட சப்பரங்களில் உயிர்த்த ஆண்டவர், புனித தோமையார், மற்றும் புனித பனிமயஅன்னை ஆகியோரின் சொரூபங்கள் பவனியாக, அதிகாலையில் தெருக்களில் எடுத்து வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிகழ்வுகள் அனைத்தும், இந்த பாஸ்கா மேடையின் முன்பாக அமைந்துள்ள மைதானத்தில் அரங்கேறும்.
சிக்கலும், மாற்றங்களும்
பல்வேறு பழைய மறைத்தலங்களிலும், ஓரளவுக்குப் பல ஆலயங்கள் எழுப்பப்பட்டுப் பங்குத் தளங்கள் வளர்ச்சி பெற்று வந்த காலக்கட்டத்தில், பாஸ்கா நிகழ்ச்சிகள் புனித வாரத்திலேயே நடைபெற்று வந்தது.
மக்கள் பாஸ்கா நாடக நிகழ்வுகளில் அதிகக் கவனம் செலுத்தி ஆலயத்தில் குருவின் தலைமையில் நடந்து வந்த புனித வார நிகழ்வுகளான, இயேசுவின் பாடுகள் இறப்பு, உயிர்ப்பு அடங்கிய திருவழிபாட்டில் அவர்களின் கவனம் குறைந்தது; சிதறியது. சிலர் முற்றிலும் வழிபாட்டினைத் தவிர்த்து வந்தனர். இதனால் பாஸ்கா பொறுப்பாளர்களுக்கும், பங்குத் தந்தையர்களுக்கும் கருத்து வேறுபாடும் மனக்கசப்பும் ஏற்பட்டு, பாஸ்கா நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மறைமாவட்ட ஆயரிடம் விண்ணப்பிக்கப்பட்டது.
அப்போது தூத்துக்குடி ஆயர், மேதகு ரோச் ஆண்டகை அவர்களும், திருச்சி ஆயர் லெயோனார்டு ஆண்டகை அவர்களும் சேர்ந்து மக்களுடன் கலந்து பேசி ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அந்த முடிவின்படி, பாஸ்கா நாடகமானது புனித வாரத்தை அடுத்த வாரத்தில் அதாவது தவக்காலத்தின் எட்டாம் வாரம் அல்லது உயிர்த்த ஞாயிறுக்குப் பிறகு வரும் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. எனவே மக்கள் அனைவரும் புனித வாரத் திருசடங்குகளில் முழுமையாகப் பங்கு பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மலையடிப்பட்டி பாஸ்காவைப் பொறுத்த அளவில் இந்த மாற்றம் மக்களுக்கும் திருப்தி அளித்தது. காரணம் புனித தோமையார்மேல் அவர்கள் கொண்டிருந்த, கொண்டிருக்கும் பக்தி - இயேசு உயிர்த்தபின் 8 நாட்களுக்குப் பிறகுதான் புனித தோமையாருக்கு காட்சி தந்தார். இதே விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு, பாஸ்கா விழாவோடு சேர்ந்து புனித தோமையார் விழாவும் (ஈஸ்டர் விழாவின் 8 ஆம் நாள்) இங்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இரண்டு பாஸ்கா சச்சரவு
மலையடிப்பட்டி பாஸ்கா விழாவின் வரலாற்றுப் பின்னணி குறித்து அறிய வேண்டுமெனில் மலையடிப்பட்டியின் முழு வரலாற்றையும் அதன் பின்புலமாக தமிழக திருச்சபை வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டே விவரிக்க இயலும்.
பாஸ்கா விழாவானது பங்கு உருவாக்கத்தின் தொடக்கத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது. 17ம் நூற்றாண்டின் தொடக்காலத்தில் மலையடிப்பட்டியில் இரு பங்குத் தளங்களாகச் (பத்ரவாதோ & இயேசு சபை) செயல்பட்டு வந்த காலக்கட்டத்தில், இரு பங்குகளிலும் தனித்தனியாக, இருவேறு பாஸ்கா நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன.
இதில் விசித்ரமான செய்தி என்னவெனில், தற்போது அமைந்துள்ள உயிர்த்த ஆண்டவர் கெபியின் முன்பாக, இரு மேடைகள் இடப்பட்டு பனிமய அன்னை பங்கின் பாஸ்காவானது கிழக்கு நோக்கி அமைந்துள்ள மேடையிலும், சவேரியார் ஆலய பாஸ்காவானது சவேரியார் ஆலயத்திற்கு முன்பாக தெற்கு நோக்கி (சவேரியார் வளாகம்) அமைந்துள்ள மேடையிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வந்திருக்கின்றது. அன்றைய காலங்களில், நிலையான மேடை அமைப்புகள் எதுவும் இல்லை. மாறாக தற்காலிக மேடைகள் கீற்றுகளால் வேயப்பட்டு, அதிலே பாஸ்கு நாடகமானது நிகழ்த்தப்பட்டு வந்தது.
நிகழும் முறைகளும், வளர்ச்சியும்
அக்காலக்கட்டத்தில் சுருபங்களைக் கொண்டும் மரக்கட்டைகளைக் கொண்டும், இயேசுவின் பாடுகளின் வரலாற்றை நிகழ்த்திக் காண்பித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் முன்னுரை அதாவது ‘வாசாப்பு’ என்ற கதைச் சுருக்கம் ஒவ்வொரு காட்சிக்கு முன்பாக வாசிக்கப்படும். இந்த வாசிக்கும் இடம் மேடைக்கு அருகாமையில் அமைந்திருக்கும். அதில் நின்று கொண்டு தான் பாஸ்கா நிகழ்வுகளின் முழுக்கதை வரலாற்றையும் வேதியர் அல்லது உபதேசியார் வாசிப்பார்.
இந்த வாசாப்பு மேடை 1880-இல், கோவா பதுரவாதோ குருக்களால் பனிமய அன்னை ஆலயத்திற்கு அருகில் அமைக்கப் பட்டது. பிற்காலத்தில் அறிவியல் வளர்ச்சி காரணமாக, இம்மேடையின் தேவை அற்றுப் போகவே, அது எந்த பயனும் இன்றி, சிதிலமடையத் தொடங்கிற்று. இப்பாரம்பரிய சின்னத்தினை பாதுகாக்கும் எண்ணத்தில், அருட்தந்தை. மரிய அற்புதம் அவர்கள் பங்கு குருவாக இருக்கும் போது, இதனை 1997-ல் 'உயிர்த்த ஆண்டவர் கெபி'யாக புணரமைப்பு செய்தார். தற்பொழுதுவரை இது உயிர்த்த ஆண்டவர் கெபியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த வாசாப்பு நிகழ்வுக்குத் தக்கவாறு பாஸ்கா நடிக்கும் மேடையானது ஒரு வித்தியாசமாக இருக்கும். அதாவது நடிக்கக்கூடிய தரைத் தளமானது, தரைப் பகுதியாக இருக்காது. மண் தரையோ அல்லது சிமெண்ட் தளமோ கிடையாது. அதற்குப் பதிலாக இரயில் தண்டவாளங்கள் பொருத்தப்பட்ட ஓடுதளமாகவும் அந்தத் தண்டவாளத்தின் மேல் ‘ட்ராலி’ என்று சொல்லப்படும் வண்டியில் தான் முக்கியமான கதாப்பாத்திரங்களான இயேசுநாதர், மாதா சந்திப்பு காட்சியானது மிகவும் தத்ரூபமாக காண்பிக்கப்படும்.
இந்த ட்ராலி வண்டியில் தான் சுரூபங்களையும் மரக்கட்டைகளையும் பயன்படுத்தி அவைகளை நிகழ்வுக்குத் தக்கவாறு கை, கால், உடம்பு தலை முதலியவற்றை அசைத்துக் காட்ட, மூங்கில் பட்டை சிம்புகளைப் பயன்படுத்தி அந்த பொம்மைகளையும் இயக்குவார்கள். இந்தப் பொம்மைகளை இயக்குவதற்கு ட்ராலி தண்டவாளங்களுக்கு அடியில் சுமார் ஒரு ஆள் உயரத்திற்குக் குழிகள் இருக்கும். இந்தக் குழிகளில் அமர்ந்துதான் இந்தப் பொம்மைகளை இயக்குவார்கள். குழிக்குள் இருக்கும் ஆட்கள் மக்களுக்குத் தெரியாவண்ணம் மறைக்கப் பட்டிருக்கும்.
இதே போல யூதாஸ் புலம்பல், ராயப்பர் புலம்பல் போன்ற தனிநபர் நடிக்கக் கூடிய பொம்மைகளையும் அதற்குரிய ஒத்த பலகை மேடைகளும் பயன்படுத்திப் பாஸ்கா நிகழ்வுகளை நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இந்தப் பொம்மை கட்டைகளைப் பயன்படுத்திப் பாஸ்கா நிகழ்வுகளை நடத்தி அன்றைய நற்செய்திப் பணியை வெகு நுட்பமாக மக்களுக்கு அறிவித்திருக்கிறார்கள். அப்பொழுது இருந்த மக்களின் விசுவாச வாழ்வு மிகவும் போற்றத்தக்கது. இவ்வாறு பொம்மைகளைக் கொண்டு நடத்தி வந்த பாஸ்கா நிகழ்வுகள் நாளடைவில் மாறி ஆட்களைக் கொண்டு நடிக்கும் முறை பின்பற்றப்பட்டு, தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அக்காலக் கட்டத்தில் அலங்காரம் செய்ய தென்னை ஓலை, வாழை மரம் மற்றும் இயற்கைக் காட்சிகளைத் தரும் பலவகை மரம் செடி கொடிகளை பயன்படுத்தினார்கள்.
இரவில் வெளிச்சம் தேவை. இவற்றைப் பூர்த்தி செய்ய எண்ணையைப் பயன்படுத்தி துணி பந்தங்கள் செய்து மேடைக்கு இருபக்கங்களிலும் நின்று மேடைக்கு வெளிச்சத்தைக் கொடுப்பார்கள். அதன்பிறகு நாகரீக காலம் பெருகி வர, துணிப்பந்தங்களுக்குப் பதிலாக கேஸ் விளக்கு பயன்படுத்தப்பட்டன. நாளடைவில் இதுவும் மாறி மின்சார விளக்குகள், ஒலி பெருக்கி போன்றவை நமது பயன் பாட்டுக்கு வந்து தற்சமயம் எல்லாம் எதிலும் எவற்றிலும் மின்சாரம் பயன்பாட்டுக்கு வந்து, அதை நாம் பயன்படுத்துகிறோம்.
இப்படியாக நாளடைவில் மாற்றங்கள் ஏற்பட்டு தற்பொழுது ஆட்களைக் கொண்டும் மேக்கப்செய்து. நடிக்கும் முறை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் பாஸ்கா நிகழ்வில் நடிக்கும் வாய்ப்பு பங்கு மக்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிடையாது. அன்று முதல் இன்று வரை மலையடிப்பட்டி ஆண்கள் மட்டும்தான் நடிக்க முடியும். மற்ற ஊர் மக்கள் நடிக்க அனுமதி கிடையாது. இந்தப் பாஸ்கா நிகழ்வில் நடிப்பவர்கள் அந்தந்த கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருக்க வேண்டும் கதாபாத்திற்க்கு பொருத்தமற்றவர் ஒருக்காலும் நடிக்க முடியாது நடிப்பவர்களுக்குத் தேவையான அனைத்து உடை, மேக்கப் தடவாளசாமான்கள் போன்ற அனைத்துப் பொருட்களும் மலையடிப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் வழங்கப்படும்.
முக்கிய கதாபாத்திரங்கள்
அந்நாட்களில், பாஸ்கா கதாபாத்திரங்களில் சில குறிப்பிடத்தக்க நபர்கள் தொடர்ச்சியாக ஒரே கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். அவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவது சாலச்சிறந்தது: திரு. கட். சூசை (Fr. நிக்கோதேமுஸ் தந்தை) - இயேசு, பட்டையதார் இருதயம் ஆசிரியர் - அன்னைமரியாள், முள்ளிப்பாடி அருளானந்தம் ஆசிரியர் - கைப்பாஸ், பட்டையதார் பங்கிராஜ் (Br. ஜோசப் அற்புத ராஜ் க.ச. அவர்களின் அய்யா) - வெரோனிகா, பட்டையதார் சூசை மாணிக்கம் (Fr. ஸ்டீபன் கஸ்பார் அவர்களின் தந்தை) - லூசிபர், கவண்ட நீதிநாதன் - தலைமைப்படைவீரர், உப்பிலிய தோமாஸ் - படைவீரர், மணியார் மரியசூசை (மில்) - யூதாஸ், முள். ஆரோக்கியசாமி ஆசிரியர் - வெரோனிக்கா.
இவர்களுக்கு பின், ஒருசிலர் கடந்த 40 ஆண்டுகளாக ஒரே கதாபாத்திரத்தில் இன்றுவரை நடித்து வருகிறார்கள்: உபதேசியார் தாமஸ் (தலைவர்) - இயேசு, ஆட். சுந்தரம் - மாதா, ஜான் பீட்டர் - யூதாஸ், ராபர்ட் - ஏரோது, பாலடிக்கி ஜோசப் - கைப்பாஸ், கவண்ட ஆரோக்கியதாஸ் - பிலாத்து.
அலங்காரம்
அந்நாட்களில் பாஸ்கா மற்றும் சப்பர, தூம்பா அலங்காரமானது கட். பிலிப்பு அவர்களால் செய்யப்பட்டு வந்தது. பின்னாட்களில் அவருடைய மகன் சிறிது காலம் இந்தப் பணியை தொடர்ந்தார். பிறகு, திரு தார்சியூஸ் அவர்கள் இன்றுவரை இந்த பணியினை செவ்வனே செய்து வருகிறார்.
பொறுப்பு
இந்தப் பாஸ்கா நிகழ்வுக்குத் தேவையான பாஸ்கா மேடை பங்குத் தந்தையின் பொறுப்பில் உள்ளது. பாஸ்கா நிகழ்வு நடக்கக்கூடிய நாட்கள் மட்டும் ஊர்ப் பொதுவில் இருக்கும். அந்த நாட்களில் மேடையில் நடிக்க, மேடையை அலங்காரம் செய்ய, மற்றும் அந்த நாட்களில் வரும் மக்கள் செலுத்தும் காணிக்கைப் பொருள் மற்றும் உண்டியல் அனைத்தும் ஊரைச் சேர்ந்தது. நடிக்கும் நடிகர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் ஊரைச் சார்ந்தது. அவை அனைத்தும் சொந்தமாக ஊரில் உள்ளது. காட்சிகளுக்குத் தேவையான சீன்ஸ் ஏற்பாடுகள் ஊரில் சொந்தமாக உள்ளது. ஒலி, ஒளி அமைப்பைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களும் ஊரில் சொந்தமாக உள்ளது. வாடகைக்கு எடுக்கத் தேவையில்லை.
மேடையின் வரலாறு
1929-இல் இரு பங்குகளும் ஒருங்கிணைக்கப்பட்ட பின்னர், பாஸ்கா விழாவினையும் ஒரே பாஸ்காவாக கொண்டாட தொடங்கினர். இந்த ஒருங்கிணைக்கப்பட்ட பாஸ்காவானது, தற்பொழுது பாஸ்கா மேடை அமைந்துள்ள இடத்தில் நடத்தப்பட்டு வந்தது. அக்காலத்திலும் நிலையான மேடை அமைப்பு எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. பாஸ்காவிற்கு முன்பதாக, மண் கொட்டி, மேடை போன்ற அமைப்பு ஏற்படுத்தி, கூரை வேயப்பட்டு, பாஸ்கா நாடகமானது அரங்கேற்றம் செய்யப்பட்டு வந்தது. தேவையான பொருட்கள் அனைத்தும் வாடகைக்கு எடுத்து வரப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தன. அதன்பின் கற்களால் ஆன ஒரு சிறிய கல் மேடை போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. சிறிது நாட்கள் கழித்து செங்கல்லால் சுற்றுச்சுவர் அமைத்து மேடை போன்ற அமைப்பை ஏற்படுத்தினர். எனினும் மேற்கூரை எதுவும் அமைக்கவில்லை. இவ்வாறாக பல ஆண்டுகள் இது தொடர்ந்து கொண்டிருந்தது.
இச்சூழலில் அருட்தந்தை S. R. ஆண்டனிசாமி அவர்கள் 1977 முதல் 1980 வரை பங்கு தந்தையாக பணியாற்றிய பொழுது, சில முன்னெடுப்புகள் நடந்தேறின. தந்தை அவர்களுக்கு கலை சார்ந்த துறைகளில் நாட்டம் அதிகம். எனவே அவரது பெரு முயற்சியினால் பங்கு மக்களின் நிதி உதவியோடு, தற்போதுள்ள பாஸ்கா மேடையானது பிரம்மாண்டமான அமைப்பாக ஏற்படுத்தப்பட்டது. மேலும் பழைய தமிழில் நடிக்கப்பட்டு வந்த பாஸ்கா நாடக வரிகளானது தந்தை அவர்களின் வேண்டுதலின் படி, மண்ணின் மைந்தர் சகோ. ஸ்டீபன் கஸ்பார் அவர்களால் புதுத் தமிழாக்கம் செய்யப்பட்டது.
பின்புறம் உள்ள பொருட்கள் வைக்கும் அறையானது, மண்ணின் மைந்தர் Fr. I. ஆரோக்கியம் அவர்களின் நிதியுதவியுடன், அருட்தந்தை திருத்துவ தாஸ் அவர்களால் 2002-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மேலும் முன்புறமுள்ள அலங்கார கம்பி தடுப்பும் அமைக்கப்பட்டது. திருவிழா நாட்களில் இந்த மேடை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிகப் பொலிவுடன் காட்சிதரும்.
மேடையின் சிறப்பு
மலையடிப்பட்டியைப் போன்ற மிகப் பழைமை வாய்ந்த பங்குகளான புறத்தாக்குடி, ஆவூர், மேட்டுப்பட்டி,பஞ்சம்பட்டி போன்ற மறைப்பணித்தளங்களிலும் இதே போன்ற பாஸ்கா மேடைகளை நாம் காண முடியும். எனினும் பாஸ்கா மேடைக்கு முன்பாக உள்ள மிக அகலமான, மிக நீண்ட தெரு அமைப்பினை வேறு எங்கும் காண முடியாது என்பது இதன் தனிச்சிறப்பு. இதன் காரணமாக ஆயிரக்கணகான மக்கள் ஒரே நேரத்தில் இங்கு அமர்ந்து பாஸ்கா நிகழ்வினை கண்டு அனுபவிக்க முடிகிறது.
பாஸ்காவின் சிறப்பு
இந்தப் பாஸ்கா நிகழ்வுக்குத் தகுந்த தக்க கதை வசனம் தேவை. நமது நற்செய்தி விவிலிய புத்தகத்திலிருக்கும் அடிப்படை விதிமுறைகள் மாறாமலும், மக்களுக்கு இலகுவாகப் புரியும் படியும், எளிய நடைமுறையில் உள்ள பாடல்கள் நிறைந்த கதை வசனம் மலையடிப்பட்டியில் இருக்கிறது. அதற்கு நிகர் வேறு எதுவும் கிடையாது. எனென்றால் அவ்வளவு துல்லியமாகவும் கருத்து நிறைந்து மக்களுக்கு விசுவாசம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அமைந்ததுள்ளது.
"தோப்பில் வளரும் மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காகக் குளங்களை வெட்டினேன்" (சபை உரை 2:6)
மலையடிப்பட்டி மூதாதையர் இவ்வூருக்கு வந்து நிலைகொண்ட காலங்களில், அப்போதைய குடிநீர் தேவைக்காக, இந்த குளத்தை கைகளாலேயே தோண்டியிருக்கிறார்கள். பின்னாட்களில் குளத்தின் மையத்தில் ஒரு குடிநீர் கிணறு தோண்டப்பட்டது. இக்கிணறு கோடைகாலத்திலும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தது.
எனினும் குளம் முழுவதுமாக நீர் நிரம்பிய வேளைகளில் மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட முடியவில்லை. எனவே குளத்திற்கு வெளியே, சாலைக்கு அருகாமையில், ஒரு உறை கிணறு தோண்டப்பட்டது. இக்கிணற்றில் மக்கள் கயிறு கொண்டு தண்ணீர் இறைத்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். பின்னர் இந்த 16 அடி விட்டத்திலான உறைகிணற்றிற்கு 1973-இல் அரசு உதவியுடன் மின் மோட்டார் பொருத்தப்பட்டு, உயர்நிலை நீர்த்தொட்டி கட்டப்பட்டது. இந்நிலை தொடர்ந்து வந்தது. தொட்டிக்கு அருகிலேயே நீண்ட வரிசையில் தண்ணீர் குழாய்களும் அமைக்கப்பட்டன. இக்குடிநீர் தொட்டியானது, அப்போதைய தமிழக கவர்னர் K.K.ஷா அவர்களால் 21-09-1973 அன்று திறந்துவைக்கப்பட்டது என்பது இதன் கூடுதல் சிறப்பு. (இதே காலகட்டத்தில், கிழக்குத்தெரு மூலையிலும், மேற்குத்தெருவிலும் இரு உறை கிணருகள் புனரமைக்கப்பட்டன)
இந்த தொட்டி சற்றேறக்குறைய 35 வருடங்களாக மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆண்டவர் என்றழைக்கப்பட்ட கட். சூசை (Fr. நிக்கோதேமுவின் தந்தை) அவர்கள் இத்தொட்டிக்கு நீரேற்றும் பணியை இறுதிவரை செவ்வனே செய்து வந்தார். அவருக்குப் பின் இப்பணி, கவண்ட கருத்தகாளை அவர்களால் செய்யப் பட்டு வருகிறது.
இதேபோன்று ஊரின் நான்கு மூலைகளிலும் சிறுசிறு தொட்டிகள் கட்டப்பட்டன. திருவிழா சமயத்தில், இந்த தொட்டிகளில் குடிநீர் ஆனது மணப்பாறை நகராட்சி நிர்வாகத்தினால் நிரப்பப்பட்டு, திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இதேபோன்று, முதன் முதலாக Fr. S. தேவராஜ் காலத்தில், ஊர்முழுவதும் குடிநீர் வழங்கும் நோக்கில், மலையடிவாரத்தில் சகாய மாதா குருசடிக்கு மேல் ஒரு குடிநீர் தொட்டி வெளிநாட்டு நிதி உதவியுடன் அமைத்தார். இது மேல்நிலை நீர் தேக்க தொட்டியாக அமைத்தார். இதற்கான நீர் ஊரின் தென் கிழக்கு மூலையில் உள்ள (இராயன்பட்டி செல்லும் வழி) பொதுக் கிணற்றில் இருந்து நீரேற்றம் செய்யப்பட்டு இத்தொட்டிக்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஊர் முழுவதும், தெருக் குடிநீர் குழாய்கள் முதல் முதலில் அமைக்கப்பட்டது. மேலும், இத்தொட்டியிலிருந்து மலைத் திருத்தலத்திற்கும் திருவிழா நாட்களில், மின் மோட்டார் மூலம் குடிநீரேற்றம் செய்யப்பட்டது.
மேலும் பின்னாட்களில், புனித தெரசாள் பள்ளிக்கு முன்பாக ஒரு பெரிய நீர்த்தேக்க தொட்டி அரசாங்கத்தால் அமைக்கப்பட்டு, இங்கிருந்து குழாய்கள் பதிக்கப்பட்டு, ஊரின் ஒவ்வொரு மூலையிலும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன.
தற்போதைய சூழ்நிலையில், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமைந்த பொழுது, மலையின் பின்புறத்தில் ஒரு பெரிய நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, ஊரின் தேவைக்காக புனித தோமையார் விடுதியின் முன் புறமாக ஒரு பெரிய குடிநீர் தேக்க மேல்தொட்டி அரசாங்கத்தல் அமைக்கப்பட்டு, ஊர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சுவாமிகுளத்தைப் பொருத்த வரை, 2015 ம் ஆண்டில், மத்திய அரசின் ‘100 நாள் வேலைத் திட்டத்தின்’ மூலம், இந்த குளத்தின் சுற்றுச்சுவர்கள் மறுசீரமைக்கப் பட்டு, கற்களால் மதில் அமைக்கப்பட்டது. மேலும், குளமும் ஆழமாக தூர்வாரப்பட்டு, மத்தியில் உள்ள கிணறும் மறுசீரமைக்கப் பட்டது. தற்போது குளம் பார்ப்பதற்கு புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது.
"பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்" (மத்தேயு நற்செய்தி 27:60)
மலையடிப்பட்டியின் தென்மேற்கு மூலையில் ஊரின் கல்லறைத் தோட்டம் அமைந்துள்ளது. தொடக்கம் முதலே இது இந்த இடத்தில் அமைந்திருந்ததாக அறியப்படுகிறது.
பின்னாட்களில், அருட்தந்தை பத்திநாதர் இரண்டாம் முறையாக பங்குத்தந்தையாக பணியாற்றிய காலத்தில், அவரின் வழிகாட்டுதலுடனும்,அப்போதைய ஊர் தலைவராகவும், பஞ்சாயத்து கவுன்சிலரகவும் இருந்த கவண்ட தாமஸ் அவர்களின் முயற்சியாலும், ஊர் நிர்வாகத்தினர் மற்றும் மக்களின் ஒத்துழைப்புடனும், பஞ்சாயத்து நிதி மற்றும் மக்களின் பொருளுதவிகளைக் கொண்டு, கல்லறைத்தோட்ட புனரமைக்கும் பணி மேற்கொள்ளப் பட்டது. கல்லறையைச் சுற்றிலும் இடுப்பளவிற்கு, கருங்கற்களால் மதில் அமைக்கப்பட்டு, சுற்றிலும் முள்வேலி இடப்பட்டது. இவ்வாறு சீரமைக்கப்பட்ட கல்லறையானது 30-12-1984 இல் பங்குத்தந்தை பத்திநாதர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பிற்காலத்தில் இந்த முள் வேலிகள் சிதிலம் அடைந்தன. 2000-ம் ஆண்டில், பட்டையதார் இருதயம் & லூர்துமேரி ஆகியோரின் இறப்பின் நினைவாக மகள்கள் - பிலோமினாள் & லில்லி அவர்களால் நிதியுதவி வழங்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்போடு புதிய கம்பி வேலி உறுதியானதாக இடப்பட்டது. கல்லறைக்கு அருகில் இருந்த அடிகுழாயில் மின் மோட்டார் பொருத்தி, அடக்கச் சடங்குகளுக்கு பயன்படுமாறு அமைக்கப்பட்டது. கல்லறை சுற்றுச்சுவர் முழுவதும் மறுசீரமைக்கப் பட்டு, 02-01-2003 முதல் பயன்பாட்டிற்கு வந்து, இன்று வரை அழகுற பராமரிக்கப்பட்டு வருகிறது.
கல்லறையின் உட்புறத்தில் ஒரு ‘உயிர்த்த ஆண்டவர் சிற்றாலயம்’ கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அனைத்து ஆன்மாக்கள் தினத்தில், இச்சிற்றாலயத்தில் திருப்பலி மாலை 4.00 மணிக்கு நிறைவேற்றப்பட்டு, அனைத்து கல்லறைகளும் மந்திரிக்கப்படும்.
இந்த தினத்தில், வெளியூரில் வாழும் மண்ணின் மைந்தர்கள், மேலும் இவ்வூரிலிருந்து திருமணமாகி வெளியூர்களில் இருப்பவர்கள் கூட, இக்கல்லறைக்கு வந்து, தங்களோடு வாழ்ந்து மரித்த தங்கள் மூதாதையர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனிடம் உருக்கமாக செபிக்க வருவது வழக்கம்.
"விண்ணகத்தின் நுழைவாயிலை அடைக்கிறீர்கள்" (மத் 23: 13b)
புனித தோமையார் மலைத்திருத்தலத்தின் நுழைவு வாயிலாக இந்த நினைவு வளைவு அமைந்துள்ளது. புனித தோமையாரின் இந்திய வருகையின் 19-ஆம் நூற்றாண்டு விழா நினைவாக இந்த நுழைவுவாயிலானது, Fr. மரியானந்தம் அடிகளார் பங்குத்தந்தையாக இருந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது. (இதே காலகட்டத்தில் தான் மலைப்படிக்கட்டுகளும் கட்டப்பட்டு, சகாய மாதா குருசடியும் புணரமைக்கப்பட்டது).
எனினும் காலப்போக்கில், இந்த நுழைவு வாயில் தற்போதைய மலையடிப்பட்டியின் முதன்மை அடையாளச் சின்னமாக மாறிப்போனதே இதன் சிறப்பு. 'மலையடிப்பட்டி' என்ற சொல்லைக் கேட்டாலே ஒருவருக்கு முதலில் இந்த வாயில்தான் நினைவுக்கு வரும் - அந்த அளவிற்கு இவ்வூரின் முக்கிய நினைவுச் சின்னமாக இது விளங்குகின்றது.
2018-இல் ஏற்பட்ட சிறு விபத்தில், இதன் இடது புறத்தூண் சேதமடைந்ததது. இதனால் இவ்வளைவு முழுமையாக மீண்டும் கட்டப்பட்டு ஒரு நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
"நேர்மையாளர் பேரீச்சை (ஆல) மரமெனச் செழித்தோங்குவர்"
(திருப்பாடல்கள் 92:12)
தமிழர் வாழ்வில் ஆலமரத்தடி இன்றியமையாத ஒன்று; தமிழரின் பாரம்பரியத்தோடு ஒன்றிப்போன ஒன்று. மலையடிப்பட்டியும் அதற்கு விதிவிலக்கல்ல.
பாஸ்கா மேடையின் இடது புறத்தில், இரு பெரிய ஆல மரங்கள் உண்டு. பொதுவாக ஆலமரம் என்றாலே பழமை தான் அதன் அடையாளம். ஊர்மக்களின் எல்லா வகையான கூட்டங்களும் இந்த மரத்தடியில் தான் நடக்கும்; ஊர் நிர்வாக கூட்டங்களும் இதில் அடங்கும். இது தவிர, ஊரில் நடக்கும் எந்தவிதமான அன்றாட பிரச்சனைகளும் இந்த ஆலமரத்தடியில் தான் நிர்வாக குழுவினரால் விசாரிக்கப்படும்.
இந்த மரங்களின் வரலாறு குறித்து நோக்கினால், தந்தை பத்திநாதர் அவர்கள் பங்குத்தந்தையாக இருந்த காலகட்டத்தில் (1973 - 1977) தெற்குப் புறம் உள்ள ஆலமரம் கோட். நாட்டாமை இஞ்ஞாசி அவர்களால் நிழலுக்காக நடப்பட்டு வளர்க்கப்பட்டது.
வடக்குப் பகுதியில் உள்ள மரம் 2000-ஆம் ஆண்டுகளில் நடப்பட்டது. பின்னாட்களில் கொட். இ. தனிஸ்லாஸ் ஆசிரியர் அவர்களின் பணி நிறைவு விழாவின் நினைவாக, இம்மரங்களைச் சுற்றி திண்ணை போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, 23-09-2001 அன்று அருட்தந்தை பிலோமின்ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த மரத்தின் சிறப்பு யாதெனில், இது 'அருளானந்தர் ஆலமரத்தடி' யாக அறியப்படுகிறது. பழைய மரத்தின் அடியில் ஒரு சிலுவை தெற்குத்தெரு மக்களால் நடப்பட்டு, புனித அருளானந்தர் பக்தி முயற்சியாக காலப்போக்கில் உருவெடுத்தது. குறிப்பாக, புனித அருளானந்தர் திருவிழாவை பிப்ரவரி 4 அன்று இந்த மரத்தடியில்தான், வெகுவிமரிசையாக கொண்டாடுவர். விழாவின்போது சிறப்பு அன்னதான நிகழ்வு தெற்கு தெரு மக்களால் முன்னெடுக்கப்படுகிறது. இது தவிர வேறெந்த குறிப்பிடத்தகுந்த வரலாறும் இதற்கு இல்லை.
தற்கால நிகழ்வாக, 16, நவம்பர் 2018-இல் (வெள்ளி) முழுதும் ஏற்பட்ட கஜா புயலின் கோரதாண்டவத்தில், முதலில் நடப்பட்ட ஆல மரம் வேருடன் சாய்ந்தது. (அருளானந்தர் சிற்றாலயம் ஒன்று இவ்விடத்தில் எழுப்பும் எண்ணத்தில் இது வரை புதிய மரம் ஏதும் நடப்படவில்லை). மற்றொரு மரம் எவ்வித சேதமுமின்றி செழித்தோங்கி நிற்கின்றது.
"மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்" (எண்ணிக்கை 21:9)
1993 வரை மலையடிப்பட்டியில், ஒரே ஒரு கொடிமரம் மட்டுமே மலையின் மீது அமைந்திருந்தது. திருவிழாவிற்கு முன்பதாக, பாஸ்கா மேடையில் ஊசிக்கால் ஊன்றிய பின், மக்கள் அனைவரும் கூடி சென்று, மலையின் மீது அமைந்துள்ள கொடிமரத்தில், பங்குத்தந்தை கொடியினை புனிதப்படுத்தி, கொடி ஏற்றுவது வழக்கமாக இருந்து வந்தது. இதில் மலைத்தாதம்பட்டி மக்களும் இணைந்து கொண்டாடி வந்தனர்.
எனினும், பின்னாட்களில் 1993 லிருந்து, மலையடிப்பட்டி மக்கள் கொடியேற்று விழாவிற்கு செல்வது குறைந்து போனது.
மலையடிப்பட்டிக்கென தனியாக ஒரு கொடிமரம் தேவையெனும் மக்களின் கோரிக்கையின் படி, 1993-ஆம் ஆண்டில், தேர் நிலைக்கு அருகில், ஒரு புதிய கொடிமரம் மலையடிப்பட்டி மக்களால் நிறுவப்பட்டு, இன்றுவரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. புதிய கொடிமரம் நடப்பட்டபோது, ஒரு சிறு விபத்து நிகழ்ந்ததும் எதிர்பாராத ஒன்று. எந்த ஒரு திருவிழா நடைபெறுவதற்கு முன்பும், இக்கொடிமரத்தில் கொடியேற்றி, நவநாட்களைத் தொடங்குவது பாரம்பரியமாக இருந்து வருகிறது.
"மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே".
(எபிரேயர் 7:17)
1838-1843 களில் முதல் சவேரியார் கூரை ஆலயமும் சுற்றுச்சுவரும் ஒரே இரவில் கட்டப்பட்ட வேளையில், பங்குத்தந்தை இல்லமும் கட்டப்பட்டிருக்க வேண்டும். இந்த கட்டடம் 1885 வரை அரை வீடாக உபயோகத்தில் இருந்து வந்தது.
அருட்தந்தை பெனடிக்ட் புர்தி அடிகளாரின் 43 ஆண்டுகால (1853-1895) மறைப்பணிக்காலத்தின் போது, இறைமக்களின் உதவியுடன், அந்த பழைய சவேரியார் ஆலயமும், பங்குத்தந்தை இல்லமும் தகர்க்கப்பட்டு, தற்போதுள்ள புதிய சவேரியார் ஆலயமும், ஆலயத்திற்கு அருகிலேயே புதிய பங்குத்தந்தை இல்லமும் (அரை வீடு) ஒன்றையும் கட்டி எழுப்பப்பட்டது. மேலும் ஆலய வலதுபுறத்தில் சவேரியார் பாடசாலைக் கட்டடமும் கட்டப்பட்டு, மூன்று கட்டடங்களும் 1885-இல் ஒரே நாளில் அர்ச்சிக்கப்பட்ட நிகழ்வு குறிப்பிடத்தகுந்தது.
ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக, பயன்படுத்தப்பட்டு வந்த இந்த இல்லமானது, கால ஓட்டத்தில் பல்வேறு மாற்றங்களை பெற்றது. குறிப்பாக, அக்கால குதிரை லாயமானது, பிற்காலத்தில் உணவு அறையாக மாற்றம் செய்யப் பட்டிருந்தது. இரு கழிவறைகள் மற்றும் குளியலறைகள் கிழக்குப் பகுதியில் இணைக்கப் பட்டன. உள்ளறைகள் அனைத்திலும் கழிவறைகள் இணைக்கப்பட்டன. ஒரு சாண எரிவாயு தொட்டி கட்டப்பட்டது - பின்னாட்களில் இது குடிநீர் தொட்டியாக மாற்றம் செய்யப் பட்டது. எனினும், குறிப்பிடத்தகுந்த மிகப் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. உள்ளே இருந்த கிணறு, ஊற்றெடுக்காததால், பின்னாட்களில் இது, குப்பைத்தொட்டியாக உபயோகிக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் முழுவதுமாக மூடப்பட்டது.
இச்சூழ்நிலையில், அருட்தந்தை T. யூஜின் அவர்கள் முயற்சியால் சிதிலமடைந்த இக்கட்டடம் 120 ஆண்டுகளுக்குப் பின், தரைமட்டமாக்கப்பட்டு, புதிதாகக் கட்டப்பட்டது. ஒரு வருடமாக இக்கட்டிடம் கட்டப்பட்டபோது, கோவிலினுள், ஒரு பகுதியில் தடுப்பு அமைத்து, அதனைத் தன் அறையாக, தந்தையவர்கள் பயன்படுத்தி வந்தார்கள்; இதற்காக ஒரு தற்காலிக கழிவறையும், கோவிலுக்கு பின்புறத்தில் அமைக்கப்பட்டது.
புதிய இல்லத்திற்கான அடிக்கல் வட்டார அதிபர் தந்தி S. லூர்துராஜ் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு, முன்னாள் பங்குத்தந்தை பத்திநாதர் அவர்களால் 07-06-2004 அன்று நடப்பட்டது. இப்புதிய கட்டடத்திற்கான பொருளாதார உதவியானது, ஜெர்மானிய உபகாரி எர்ஸ்பிஸ்டும் கோல்ன் (Erzbistum Koln, Germany) அவர்களிடமிருந்து பெறப்பட்டது. ஓராண்டு காலமாக, புதிதாய்க் கட்டப்பட்ட பங்குத்தந்தை இல்லமானது, 10-03-2005 அன்று, அப்போதைய ஆயர் மேதகு அந்தோணி டிவோட்டா அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு, முன்னாள் பங்குத்தந்தை திருத்துவதாஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, ‘சிறுமலர் இல்லம்’ எனப் பெயரிடப்பட்டது. (லூர்து அன்னை கெபி, பங்குத்தந்தை இல்லம், தோமையார் சமூகப் பணிக்கூடம், சவேரியார் பள்ளி ஆகிய நான்கு கட்டடங்களுக்கும் ஒரே நாளில் அடிக்கல் நாட்டப்பட்டு, ஒரு வருடங்களுக்குப் பின் ஒரே நாளில் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.) இன்று வரை இக்கட்டிடம், பங்குத்தந்தையர்கள் நிம்மதியாக வசிக்க ஏதுவான இல்லமாக விளங்குகிறது.
அதுவரை, மக்கள் தங்கள் இல்ல விழாக்கள் மற்றும் பொது விழாக்களை, வீட்டிலேயே பந்தல் அமைத்து கொண்டாடி வந்தனர். காலப் போக்கில், மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்த நிலையில், விழாக்கள் கொண்டாடுவதற்கென ஒரு கூடம் தேவையென மக்கள் உணரத்தொடங்கினர். இத்தேவையை உணர்ந்த, அப்போதைய பங்குத்தந்தை T. யூஜின் அவர்கள், ஸ்பெயின் நாட்டு உபகாரி திரு. மனோஸ் அவர்களின் நிதியுதவியுடன், ஒரு புதிய சமுதாயக் கூடத்தை அமைக்கத் திட்டமிட்டார்.
மலையடிவாரத்தில், நூற்றாண்டு வளைவிற்கு வலதுபுறமாக இருந்த, தோமையார் கன்னியர்களுக்குச் சொந்தமான முந்திரித் தோப்பினைப் பெற்று, அவ்விடத்தில் புதிய கூடமானது எழுப்பப்பட்டது. இந்நிலத்திற்கு மாற்றாக, சவேரியார் கோவிலுக்கு வலப்புறமிருந்த, பழைய நெசவுத்தறி இருந்த பகுதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அப்போதைய துவரங்குறிச்சி பங்கு தந்தை Fr. சின்னப்பன் அவர்களால் 07-06-2004 அன்று கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஓராண்டிற்குப் பின், மிகப்பொலிவுடன் எழுப்பப்பட்ட இந்த கூடம், ‘புனித தோமையார் சமூகக் கூடம்’ எனப் பெயரிடப்பட்டு 10-03-2005 அன்று, அப்போதைய ஆயர் மேதகு அந்தோணி டிவோட்டா அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு, முன்னாள் பங்குத்தந்தை Fr. தாமஸ் பால்சாமி (திண்டுக்கல் ஆயர்) அவர்களால் திறந்து வைக்கப் பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. (லூர்து அன்னை கெபி, பங்குத்தந்தை இல்லம், தோமையார் சமூகப் பணிக்கூடம், சவேரியார் பள்ளி ஆகிய நான்கு கட்டடங்களுக்கும் ஒரே நாளில் அடிக்கல் நாட்டப்பட்டு, ஒரு வருடங்களுக்குப் பின் ஒரே நாளில் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.)
மலையடிப்பட்டி மட்டுமல்லாது, சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலுள்ள மக்களும், இந்த கூடத்தை தங்கள் தேவைகளுக்கு சிறு தொகையை காணிக்கையாக அளித்து, பயன்படுத்தி வருகின்றனர்.