புனித பதுவை அந்தோணியார் பாதுகாவலராகக் கொண்டு சிறப்புற்று விளங்கும் ஊரே கல்பாளையத்தான்பட்டி ஆகும்.
ஊர் வரலாறு:
ஊரின் முன்னோர்கள் டால்மியாபுரம் அடுத்துள்ள சன்னாநல்லூர் என்ற கிராமத்திலிருந்து நடைபயணமாக வந்து புதுப்பட்டியில் தங்கினர். சிறிது காலமே அங்கு வாழ்ந்த அவர்கள் இடம்பெயர்ந்து கல்பாளையத்தான்பட்டியில் குடியேறினர். ஒரே இரவில் கிணறு வெட்டி அதன் மூலம் தண்ணீர் எடுத்து வந்தனர். அந்த ஊர் தான் கல்பாளையத்தான்பட்டி என்று அழைக்கப்படுகிறது.
புனித பதுவை அந்தோணியார் கோயில் வரலாறு :
எங்கள் முன்னோர்கள் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கீற்றுக்கொட்டகையில் ஆலயம் அமைத்து வழிபட்டு வந்துள்ளனர். பின் கேரளா, ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு நடைபயணமாகச் சென்று நன்கொடை வசூல் செய்து வந்து கி.பி.1896 ஆம் ஆண்டு அருள்தந்தை.பத்தியநாதரால் புனித பதுவை அந்தோணியார் கோயில் கட்டப்பட்டு கி.பி.2000 ஆம் ஆண்டில் கோயில் புதுப்பிக்கப்பட்டது.
அற்புதங்கள் :
புனித பதுவை அந்தோணியார் பில்லி சூனியம், பிசாசின் பிடியிலிருந்து விடுதலை, குழந்தை வரம் என பல்வேறு அற்புதங்களை வாரி வழங்கும் கோடி அற்புதராகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
பரிசுத்த கிறிஸ்தானியம்மாள் ஸ்தல வரலாறு :
முதன்முதலில் முன்னோர்கள் 1904 ஆம் ஆண்டு ஓட்டுக் கட்டிடத்தில் பரிசுத்த கிறிஸ்தானியம்மாளின் சுரூபம் கொண்டு வந்து வழிபட்டனர். பின் 1992 ஆம் ஆண்டு ஓட்டுக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு கோபுரம் எழுப்பி பரிசுத்த கிறிஸ்தானியம்மாள் கோயில் தற்போது அழைக்கப்படுகிறது. பரிசுத்த கிறிஸ்தானியம்மாள் நினைவு நுழைவுவாயில் 2010 ஆம் ஆண்டு கல்பாளையத்தான்பட்டி எல்லையில் கட்டப்பட்டு உள்ளது.
நாடகம் மற்றும் அன்னதானம் :
1906 ஆம் ஆண்டுகளில் இருந்து ஈராண்டுகளுக்கு ஒரு முறை பரிசுத்த கிறிஸ்தானியம்மாளின் வரலாற்று சரித்திர நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் திங்கள் அன்னதானமும் நடைபெறுகிறது.
ஆரோக்கிய அன்னை ஆலயம் :
நுழைவுவாயிலின் அருகில் ஆரோக்கிய அன்னையின் சிற்றாலயம் ஒன்று கி.பி.1924 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. ஆரோக்கிய அன்னையின் தேர்ப்பவனியானது ஆண்டு தோறும் செப்டம்பர் 7 ஆம் தேதி ஆடம்பர திருப்பலியும் சிறப்புடன் நடைபெறுகிறது.
புனித செபஸ்தியார் கோயில் :
சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு செபஸ்தியார் சிலுவைத் திண்ணையானது ஓட்டுக் கட்டிடம் கட்டப்பட்டது. 2013ஆம் ஆண்டு கோபுரம் எழுப்பி இன்றைய செபஸ்தியார் கோயில் உருவாக்கப்பட்டது. இவ்விடம் பல்வேறு பிரட்சனைகளுக்கு தீர்வு காணும் இடமாகத் திகழ்கிறது.
புனித சக்தி நிறை சந்தியாகப்பர் அருள் வழங்கும் புண்ணிய பூமியாம் புதுப்பட்டி நீண்ட காலமாக இயேசுவின் வழியை பின்பற்றி வாழும் கிறிஸ்தவ மக்கள் நிறைந்த ஊராகும்.
ஆலய தொடக்கமும், வளர்ச்சியும்:
புதுப்பட்டியில் உள்ள புனித சந்தியாகப்பர் ஆலயம் கி.பி.1925 ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கலாம் என்று முன்னோர்களால் கூறப்பட்டு வருகிறது.
ஆலயத்தின் வளர்ச்சி நிலைகள் :
ஆலயத்தின் முன்புறமுள்ள மண்டபம் கி.பி.1990-ல் கட்டப்பட்டது. அதே ஆண்டில் இரதங்கள் நிறுத்துவதற்கு கற்காரை கட்டடம் ஒன்று கட்டப்பட்டது. மிகச்சிறிதாக இருந்த மருகிருதம்மாள் ஆலயமானது இடிக்கப்பட்டு கி.பி.2008 ஆம் ஆண்டு மணிக்கூண்டு அமைக்கப்பட்டு புனித மருகிருதம்மாள் கோயில் புதுப்பொலிவுடன் கட்டப்பட்டு திருச்சி ஆயர் மேதகு அந்தோணி டிவோட்டா அவர்கள் தலைமையில் மலைப்பட்டி பங்குத்தந்தை அருட்பணி. லூயிஸ் பிரிட்டோ முன்னிலையில் அர்ச்சிக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. கோவிலை சுற்றி சுற்றுச்சுவர், இரும்பு கதவு அமைக்கப்பட்டு கோயில் புனிதமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கி.பி.2011 ஆம் ஆண்டு ஊரின் முகப்பில் புனித வீரசந்தியாகப்பர் குருசடியானது திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு அருட்பணி.தாமஸ் பால்சாமி தலைமையில், பங்குத்தந்தை அருட்பணி.ஜேம்ஸ் செல்வநாதன் முன்னிலையில் அர்ச்சித்து புனிதப் படுத்தி மக்களின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. கி.பி.2013 ஆம் ஆண்டு புனித மருகிருதம்மாள் நாடக மேடை கட்டப்பட்டு, ஆலய முன்புறம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
கி.பி.2014 ல் கொடிமரமானது உயரமான கருங்கல் கிரானைட் மேடையுடனும், இரும்பு கிரில் கேட் பாதுகாப்புடனும் கட்டி முடிக்கப்பட்டது.
திருவிழாக்கள் :
புனித சந்தியாகப்பர் திருவிழாவானது ஆண்டுதோறும் ஆடி மாதம் 9,10 தேதிகளில் நடைபெறுகிறது. தை மாதம் புனித அந்தோணியார் திருவிழாவும் நடைபெறும்.
நாடகமும், அன்னதானமும் :
ஆடி மாதம் புனித மருகிருதம்மாள் சரித்திர நாடகம், அன்னதானமும் நடைபெறும்.
புதுமைகள் :
திண்டுக்கல் அருகே யாகப்பன்பட்டி என்ற இடத்தில் வாழும் மக்களுக்கு ஆபத்து வருவதை கனவில் எச்சரித்து அவர்களது உயிரையும் உடைமையையும் காப்பாற்றி இருக்கிறார்.
நடைபெறும் வழிபாடுகள்:
ஞாயிறுதோறும் மறைக்கல்வி வகுப்புகள், மாதந்தோறும் அன்பிய கூட்டங்கள், மாதம் ஒரு திருப்பலி , கிறிஸ்துமஸ் மற்றும் புனித வார நிகழ்ச்சிகள் அனைத்துமே நமது புதுப்பட்டியிலேயே நடைபெறுவது தனிச்சிறப்பாகும்.
மக்கள் தொகை :
புதுப்பட்டி சுமாராக 1300 கிறிஸ்தவ மக்கள் வசிக்கின்றனர் . சுமார் 320 குடும்பங்கள் உள்ளன
விண்ணும் மண்ணும் வியந்து போற்றும் வீரசெபஸ்தியாரை பாதுகாவலராகக் கொண்டு இறைமகன் இயேசுவின் வழியில் இணைந்து நடக்கும் எமது ஊர் இராயம்பட்டி ஆகும். எங்கள் ஊரை நல்லியம்பட்டி என்றும் கூறுவர்.
ஆலய வரலாறும் , வளர்ச்சியும் :
சுமார் கி.பி.1800 ஆம் ஆண்டு புனித செபஸ்தியார் சிலுவை திண்ணை உருவானது. அக்காலத்தில் வெளியூர் திருவிழாவிற்கு சென்று இவ்வழியாக வந்த கழனிவாசல்பட்டியைச் சேர்ந்த ஆசாரி இந்த சிலுவை திண்ணையில் நோயினால் வயிற்று வலி ஏற்பட அவதிப்பட்டு இந்த சிலுவை திண்ணையில் வேண்டி குணமடைந்தார். இப்போது இருக்கும் சுரூபம் ஆசாரி அவர்கள் செய்து கொடுத்து வழிபாட்டிற்கு வைக்கப்பட்டது.
சுமார் கி.பி.1868-ல் தற்போதுள்ள சப்பரக்கொட்டகையில் கூரைக்கோயில் உருவானது. கி.பி. 1923 ஆம் ஆண்டு சுண்ணாம்பு காரையால் ஆன புதிய கோயில் கட்டப்பட்டு திருவிழாவிற்கு பெரிய ரதம் உருவானது. கி.பி.1996-ல் கோயில் முன்பகுதி மேடை கட்டப்பட்டது. கி.பி. 2000-ஆம் ஆண்டு கோவிலின் சுண்ணாம்பு காரை நீக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. கி.பி 2002-ஆம் ஆண்டு மணிக்கூண்டு கட்டப்பட்டது.
திருவிழா :
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 2-வது சனிக்கிழமை திருவிழா நடைபெறும். மே மாதம் கடைசி சனிக்கிழமை புனித செபஸ்தியார் நாடகமும், ஞாயிற்றுக்கிழமை அன்னதானமும் இனிதே நடைபெறுகிறது.
புதுமைகள் :
புனித செபஸ்தியார் பரிந்துரையால் குழந்தை வரம் பெற்றோர், தீராத நோயில் இருந்து குணம் பெற்றோர், கடன் தொல்லையில் இருந்தும் விடுபட்டவர்கள் என இதுபோல் எண்ணிலடங்கா புதுமைகள். நன்மைகளும் நம் புனிதர் வழியாக நமக்கு கிடைக்கின்றன.
மக்கள் தொகை : சுமார் 1300 இறைமக்கள் இவ்வூரில் வாழ்ந்து வருகின்றனர்.
வழிபாடுகள் :
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செப வழிபாடுகளும், மாதந்தோறும் திருப்பலியும் நடைபெறுகின்றன.
நமது மலையடிப்பட்டி பங்கின் நுழைவுவாயிலாக மலைத்தாதம்பட்டி அமைந்துள்ளதும் இவ்வூரின் தனிச்சிறப்பாகும். திருச்சி - திண்டுக்கல் சாலையில் மணப்பாறையில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அழகிய சிற்றுார் மலைத்தாதம்பட்டி ஆகும்.
இவ்வூரின் வடக்கில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையும் மேற்கில் தொம்பச்சி ஆறும் கிழக்கில் சாமியார்ரோடு என்றழைக்கப்படும் கிராமச்சாலையும் தெற்கில் சென்னை- திருவனந்தபுரம் அகல ரயில்பாதையும் எல்லைகளாக அமைந்துள்ளன.
புனித தோமையார் மலையைத் தாண்டி அமைந்திருக்கின்ற காரணத்தினால் மலைத்தாண்டிபட்டி என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தாதம்பட்டியைத் தாண்டிச் சென்றால் மலையை அடையலாம் என்று பொருள்பட மலைத்தாதம்பட்டி என்று விரைவில் பெயர் பெற்றிருக்கலாம் என்றும் கருத்து நிலவுகிறது.
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு வரை மலைத்தாதம்பட்டியில் கோவிலோ சிலுவைத்திண்ணையே கூட அமைந்திருக்கவில்லை. மலைத்தாதம்பட்டியில் பிறந்து முதல் குருவாக அருட்பணியேற்ற அருட்தந்தை. A.M. ஞானப்பிரகாசம் அவர்கள் தான் முதன் முதலாக ஒரு சிலுவையை ஊன்றினார். அச்சிலுவை கொன்னை மரத்தினால் செய்யப்பட்ட மரச்சிலுவையாகும். அவர் பெயர் பெற்ற புனிதஞானப்பிரகாசியார் திருச்சிலுவை என்று அது அழைக்கப்பட்டு வந்தது.
நாளடைவில் சிறிய சிலுவை திண்ணை ஊர்ப்பொதுமக்கள் அமைத்தார்கள். பல்வேறு காலகட்டங்களில் கோவில் அமைப்பதற்காக பொதுமக்கள் எடுத்த முயற்சிகள் தடைபட்டன. புனித தோமையார் ஊர்ப்பொதுமக்கள் பலரின் கனவில் வந்து ஊரில் ஆலயம் அமைத்தால் தோமையார் மலைக்கு வருவதையும் என் மீது கொண்ட பக்தியையும் நிறுத்தி விடுவீர்கள் என்று கூறியதாக மூதாதையர்கள் அடிக்கடி கூறி வந்துள்ளனர். அருட்பணி. மரியானந்தம் சுவாமிகள் பங்குத்தந்தையாக நம் பங்குக்கு வருவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சிறிய ஆலயம் ஊர்மக்களால் புனிததோமையாரிடம் வேண்டுதல் வைத்து ஒப்புதல் பெற்று கட்டினார்.
அருட்பணி. மரியானந்தம் சுவாமிகள் பங்குத்தந்தையாக இருந்த காலத்தில் கோவிலானது ஆயர் தலைமைக்கு ஊர்மக்களால் எழுதிக்கொடுக்கப்பட்டு ஆயர்.தாமஸ் பெர்ணாண்டோ அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது. அருட்தந்தை.யூஜின் அவர்களின் பெருமுயற்சியால் ஆயர் அவர்களின் அனுமதியின் பெயரில் தற்போதுள்ள அழகான ஆலயம் 2006-இல் கட்டிமுடிக்கப்பட்டு மேதகு ஆயர். அந்தோணி டிவோட்டா அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு புனித ஞானப்பிரகாசியாருக்கு மறு அர்ப்பணிப்பு செய்யப்பட்டது.
மலைத்தாதம்பட்டி மக்கள் புனித தோமையாரின் தீவிர பக்தர்களாக இருப்பினும், புனித ஞானப்பிரகாசியாரையும் தங்கள் பாதுகாவலராகக் கொண்டுள்ளனர். மேலும், பனிமய அன்னையின் பால் தீவிர பக்தியும் கொண்டுள்ளனர். இன்று வரை, புனிததோமையாரிடமும், புனிதஞானப்பிரகாசியார் வழியாகவும் வேண்டுதல் வைத்து உடல் நலம் பெற்றவர்கள் ஏராளம்.
தினந்தோறும் மாலை 7 மணியளவில், ஆலயத்தில் செபமாலை, நற்செய்தி வாசித்தல் போன்ற வழிபாடுகள் உள்ளூர் மக்களால் நடத்தப்படுகிறது. மலைத்தாதம்பட்டியில் இரண்டு அன்பியங்கள் மூலம் மாதந்தோறும் அன்பியக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. திருவிழாக்காலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஆண்டுதோறும் உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்தநாள், திங்கள் மாலை 6.30 மணியளவில் புனிததோமையாரின் திருக்கொடியானது ஊர்வலமாக மலைத்தாதம்பட்டியில் இருந்து எடுத்து வரப்பட்டு, புனித தோமையார் மலையில் ஏற்றப்படுகிறது. அன்று முதல் பெரிய திருவிழா ஆரம்பமாகிறது.
அதே நேரத்தில் சனிக்கிழமை இரவு புனித தோமையார் சப்பரபவனியானது நுாறு ஆண்டுகளுக்கு மேலாக சப்பரத்தில் பவனி வரும் சுருபத்தைக்கொண்டு பவனியாக, ஆடம்பர நிகழ்வாக ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்துவரும் திங்கள் மாலை 6.00 மணியளவில் புனித தோமையார் திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.
ஜூன் மாதம் 17-ஆம் நாள் புனித ஞானப்பிரகாசியார் திருவிழாவிற்கான திருக்கொடி ஏற்றப்பட்டு ஞானப்பிரகாசியார் திருவிழா ஆடம்பர பாடல் திருப்பலியுடன் ஆண்டுதோறும் துவங்குகிறது. அதனைத்தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி பாடல் திருப்பலிக்குப் பிறகு புனித ஞானப்பிரகாசியார் திருவிழா ஆரம்பமாகிறது. அதிவிமரிசையாக சப்பர பவனியும் நடை பெறுகிறது. அதனைத்தொடர்ந்து அடுத்தநாள் புனித ஞானப்பிரகாசியார் திருக்கொடி இறக்கப்படுகிறது
ஜூலை மாதம் 3- ஆம் தேதி நடைபெறும் புனித தோமையார் திருவிழாவிற்காக புனித தோமையார் மலைக்கு ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி திருயாத்திரையாக மலைத்தாதம்பட்டி மக்கள் செல்வது வழக்கமாகும்.
1940-1950 மற்றும் 1978-1980 - ஆம் ஆண்டுகளில் புனித தோமையார் நாடகமானது, ஜூலை 3-ஆம் தேதி நடத்தப்பட்டு வந்துள்ளது. சிலகால இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் தொடரப்பட்டு, இன்று வரை புனித தோமையாரின் வாழ்க்கை வரலாற்றை மலைத்தாதம்பட்டியைச் சேர்ந்த மக்களே இந்நாடகத்தில் மிக அற்புதமாக சித்தரிக்கப்பட்டு நடித்து வருவது தான் இதன் தனிச்சிறப்பாகும். ஜூலை 5-ஆம் தேதி புனித தோமையார் பெயரில் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
புனித பனிமய மாதாவை தங்கள் பாதுகாவலியாகக் கொண்டுள்ள நம் ஊர் மக்கள் ஆண்டுதோறும் ஜனவரி 17-ஆம் தேதியன்று மலைத்தாதம்பட்டியிலிருந்து ஊர்வலமாக பொங்கல் வைப்பதற்காக புனித பனிமய மாதா ஆலயத்திற்குச் செல்வது இன்றுவரை பழக்கத்தில் உள்ளது. உடன் கால்நடைகளையும் அழைத்து வந்து மந்திரித்து புனித பனிமய அன்னையின் ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்து தங்களின் பக்தி முயற்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இப்பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
(கலிங்கம்பட்டியார்) புனித சந்தியாகப்பர் பாதுகாவலராகக் கொண்டு கிறிஸ்துவின் வழிநடக்கும் ஊர் தான் பிச்சைமணியாரம்பட்டி ஆகும்.
கோயில் வரலாறும், வளர்ச்சியும் :
சுமார் கி.பி.1950 ஆம் ஆண்டு கலிங்கப்பட்டியார் குடும்பத்தைச் சார்ந்த அருளப்பன் என்பவர் திருச்சி கல்லறைக் கோயிலில் உதவியாளராக வேலை செய்தார்.
அங்கிருந்த பங்குத்தந்தையிடம் மூன்று சுரூபங்களையும், சிறிய தொகையையும் பெற்று மண் சுவர் எழுப்பி கூரை வேய்ந்து சிறிய கூரை கோயிலை உருவாக்கியுள்ளனர்.
கி.பி.1970-ல் பெரியதனம் வேளாங்கண்ணி, நாட்டாண்மை சவரிமுத்து, மணியம் பிலவேந்திரம் மற்றும் இறை மக்களின் கூட்டு முயற்சியால், கி.பி.1975-ல் ஓட்டுக் கட்டிடம் கட்டப்பட்டது. மேதகு ஆயர் தாமஸ் பெர்ணாண்போ தலைமையில், பங்குத்தந்தை அருட்பணி.பத்திநாதர் முன்னிலையில் அர்ச்சிக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது.
கி.பி.2002-ல் ஊர்ப்பெரியோர்கள், பங்குத்தந்தையர்கள் மற்றும் இறைமக்கள் உதவியுடன் கற்காரை கட்டடப்பணி ஆரம்பிக்கப்பட்டு, கி.பி.2003 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பங்குத்தந்தை அருட்பணி.யூஜின், மற்றும் அருள்தந்தை ஜெயராஜ் ஆகியோர்களால் புனிதப்படுத்தப்பட்டது.
திருவிழா
கி.பி 1991 முதல் ஒவ்வொரு வருடமும் ஜூன் - 25 ஆம் தேதி புனித சந்தியாகப்பர் திருவிழா நடைபெறுகிறது.
வழிபாடுகள்:
ஞாயிறு மறைக்கல்வியும், செப வழிபாடுகளும், மாதந்தோறும் திருப்பலியும் நடைபெறுகின்றன.
ஊரின் வரலாறு :
திருச்சி சமயபுரம் அருகே திருப்பட்டூர் என்னும் ஊரில் இருந்து இடம்பெயர்ந்து பிச்சைமணியாரம்பட்டி என்னும் ஊரில் குடியேறி உள்ளனர். பின் இருப்பு பாதை பணிகள் நடைபெற்றதால் அங்கிருந்து இடம்பெயர்ந்து தற்போதுள்ள பொன்னக்கோன்பட்டியில் நிரந்தரமாக குடியேறினர்.
ஊர்ப் பெயர்க் காரணம் :
இவ்வூரில் வாழ்ந்து வந்த பொன்னுக்கோன் என்பவர் நினைவாக இவ்வூர் பொன்னக்கோன்பட்டி என்னும் பெயர் பெற்றது.
ஆலய - வரலாறு & வளர்ச்சி நிலைகள் :
கி.பி.1952-ல் ஊர்ப் பொதுமக்கள் ஒருங்கிணைந்து புனித லூர்து மாதாவிற்கு ஆலயம் எழுப்ப முடிவு செய்து அடித்தள அமைப்பு கட்டுமான பணி பின் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மலையடிப்பட்டி பங்குத்தந்தை அருட்பணி.பைபிள் S.தேவராஜ் அவர்களின் உதவியோடு புனித லூர்து அன்னை ஆலயமானது கி.பி.1992 - ல் கட்டி முடிக்கப்பட்டு புனிதம் செய்யப்பட்டது.
மக்கள் தொகை :
சுமாராக 250 நபர்கள் இவ்வூரில் வாழ்ந்து வருகின்றனர்.
நடைபெறும் வழிபாடுகள் :
தவக்காலங்களில் சிலுவைப் பாதையும், மாதமொரு முறை மலையடிப்பட்டி பங்குத்தந்தையால் திருப்பலியும், வேளாங்கன்னி பாத யாத்திரை பக்தர்களால் ஜெபமாலை வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
திருவிழா :
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் புனித லூர்து அன்னை திருவிழாவானது நடைபெறும்.
அன்னதானம் :
புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் அன்று சமபந்தி அன்னதானம் வெகு சிறப்புடன் நடைபெறுகிறது.
புனித செபஸ்தியாரை தங்கள் ஊரின் நேசமிகு பாதுகாவலராக ஏற்றுக்கொண்டு வணங்கி வருகின்றனர்.
ஊர்ப் பின்னணி
கி.பி.1940-ஆம் ஆண்டு பொன்னக்கோன்பட்டியைச் சேர்ந்த இன்னாசிமுத்து மகன் சவரிமுத்து பொன்னக்கோன்பட்டியை விட்டு பிரிந்து வடக்கு திசையில் குடிபெயர்ந்தார். தங்கள் பாதுகாவலரான புனித செபஸ்தியார் பெயரையே ஊரின் பெயராக கொண்டு செபஸ்தியார் பட்டி என வழங்கினர்.
ஆலயத் தொடக்கம் மற்றும் ஆலய வளர்ச்சி நிலைகள் :
அக்காலக்கட்டத்தில் அங்கு வாழ்ந்த ஊர்ப்பெரியோர்களான ஊர்தலைவர் வேளாங்கன்னி, முக்கியஸ்தர்கள் அந்தோணிச்சாமி - நம்பக்கவுண்டர் சோலைக்கவுண்டர், சிவந்திகவுண்டர், ரெங்கசாமிக்கவுண்டர், பதினெட்டுப்பட்டி மணியம் பாலசுப்பிரமணி, கோவில்பிள்ளை இராயப்பன், கோல்காரர் முத்தப்பா, கரிக்கா ராவுத்தர், பாபு சாயிபு என பல்வேறு மதத்தவரும் ஒருங்கிணைந்து முதன்முதலாக புனித செபஸ்தியார் சிலுவைத் திண்ணையை உருவாக்கியுள்ளனர்.
கி.பி.1996 ஆம் ஆண்டு கல்வி அமைச்சராக இருந்த திரு.பொன்னுச்சாமி அவர்கள் நன்கொடை வழங்கி ஆலய பணியைத் தொடங்கி வைத்துள்ளார்.
கி.பி.2001 ஆம் ஆண்டு சுற்றுவட்டப்பகுதியில் உள்ள அனைத்து மக்களின் (உதவியோடு செபஸ்தியார் ஆலயத்தைக் கட்டி முடித்தனர். கி.பி. 2002 ஆம் ஆண்டு பங்குத்தந்தை அருட்பணி.மரிய அற்புதம் அவர்கள் செபஸ்தியார் ஆலயம் புனிதம் செய்து திறந்து வைத்தார்.
கி.பி.2012 ஆம் ஆண்டு அருட்பணி.லூயிஸ் பிரிட்டோ, அருட்பணி.ஜேம்ஸ் செல்வநாதன் ஆகியோரின் உதவியுடன் கேடயம் செய்யப்பட்டு நிறுவப்பட்டது.
மத வேறுபாடுகளின்றி, அனைத்து மத சகோதரர்களும் இணைந்து ஒற்றுமையாக திருவிழாவை நடத்தி வருவது இவ்வூரின் சிறப்பாகும்.
புதுமைகள் :
சாதி , மத , இன பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் புனித செபஸ்தியார் வழியாக இறைவனிடம் கேட்கப்பட்ட அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறியதால் புனித செபஸ்தியாரை தங்கள் நேசமிகு புனிதராக ஏற்றுக்கொண்டு வணங்கி வருகின்றனர்.
இயேசு சபை நிறுவனர் புனித லொயோலா இஞ்ஞாசியார் பாதுகாவலராக கொண்ட இறைமக்கள் வாழும் ஊர் கானப்பாடி புதூர் ஆகும்.
ஊர்ப் பாதுகாவலர் மற்றும் அதற்கான காரணம் :
எம் முன்னோர்கள் வந்து முதலில் குடியேறிய ஊரான கருங்குளத்தில் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வந்த காரணத்தால் அவரையே தங்கள் பாதுகாவலராகக் கொண்டனர்.
ஊர்ப் பெயர் காரணம் :
கி.பி. 1980 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், சித்தூர் என்னும் கானப்பாடி ஊரில் இருந்து வந்து குடியேறியதால் கானப்பாடி புதூர் என்ற பெயர் பெற்றது.
ஊர்ப் பின்னணி :
கானப்பாடி கிராமத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர் தம் மூன்று மகன்களுடன் பிழைப்பு தேடி கருங்குளம் என்னும் கிராமத்திலிருந்து வந்து குடியேறினர்.
கூலி வேலை செய்து வாழ்ந்து வந்த அவர்கள் நிலையான வசிப்பிடமின்றி ஊர்ஊராக வேலை தேடி அலைந்துள்ளனர். எங்கும் சரிவர வேலை கிடைக்காததால் இறுதியாக ஊத்துப்பட்டி, இளங்காகுறிச்சியை சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்று கூலி வேலை செய்து பிழைத்து வந்துள்ளனர். வீடுகள் இல்லாமல் கூடாரம் அமைத்து அதில் வாழ்ந்துள்ளனர்.
1959-இல் இன்னாசிமுத்து என்பவர் சிறிது சிறிதாக முன்னேறி தம் மூன்று மகன்களுக்காக மூன்று வீடுகளைக்கட்டி இவ்வூர் உருவாக காரணமாக இருந்துள்ளனர்.
ஆலய வரலாறு :
முதலில் ஒரு சிலுவை திண்ணை அமைத்து வழிபாடு செய்து வந்தனர். பின்னர் கி.பி.1925-ல் தொடங்கப்பட்ட ஆலய கட்டுமானப் பணியானது, தடைபட்டு மீண்டும் கி.பி.2001-ல் நன்கொடைகள் பெற்று கட்டப்பட்டு இறுதியாக கி.பி.2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மறைவட்ட அதிபர் அருட்பணி.லூர்துராஜ் அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
திருவிழாக்கள் : ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 4 -ஆம் நாள் புனித இஞ்ஞாசியார் திருவிழா கொண்டாடப்படுகிறது.
வழிபாடுகள் :
ஞாயிறு மறைக்கல்வியும், செபவழிபாடுகளும், மாதந்தோறும் திருப்பலியும் நடைபெறுகின்றன.
மக்கட்தொகை : சுமார் 22 குடும்பத்தினர் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.
கிறிஸ்தவ துறவு வாழ்வுக்கு வித்திட்டவரான புனித வனத்து அந்தோணியாரை பாதுகாவலராகக் கொண்ட இறைமக்கள் வாழும் ஊரே தெற்கு அஞ்சல்காரன்பட்டி ஆகும்.
ஊர் வரலாறு :
ஆதிகாலத்தில் முதியோர்கள் கொல்லிமலையிலிருந்து குடிபெயர்ந்து ஆறுகள் வழியாக நடைபயணம் செய்து கொண்டிருக்கையில் டொம்பச்சி ஆற்றின் இடையில் வரும் வழியில் புனித வனத்து அந்தோணியார் காட்சி கொடுத்து நான் இருக்கிறேன் என்று கூறியதால் அவ்விடத்திலேயே குடியேறினர். இரயில் பாதையின் வடக்கே இரு குடும்பங்கள் வடக்கு அஞ்சல்காரன் பட்டியில் வாழ்ந்து வந்த நிலையில் ஒரு குடும்பத்தினர் இரயில் பாதையின் தெற்கே குடியேறி தெற்கு அஞ்சல்காரன்பட்டி என பெயரிட்டு வாழ்ந்து வருகின்றனர்.
ஆலய தொடக்கம் மற்றும் ஆலய வளர்ச்சி நிலைகள் :
ஊருக்கு மேற்கு புறம் ஆவாரஞ்செடி அருகே ஒரு சிலுவையை ஊன்றி வணங்கி வழிபட்டுள்ளனர். சிலுவையை வணங்கும் போது பிசாசுகளின் தொந்தரவுகள் விலகின. நோய்கள் குணமாகின, பல்வேறு புதுமைகளும் நன்மைகளும் கிடைத்தன.
சுமார் 1935 ஆம் ஆண்டு கூரைக்கோவில் அமைத்து புனித வனத்து அந்தோணியாரின் வழியாக பிணிகள் நீங்கி எண்ணிலடங்கா புதுமைகளை மக்கள் பெற்றனர். நாளடைவில் சுமார் 1960 ஆம் ஆண்டு செங்கல் கட்டிடமாக வளர்ந்துள்ளது
புதுமைகள் :
புனித வனத்து அந்தோணியார் வழியாக பிசாசுகளின் பிடியில் இருந்து விடுதலை பெற்று குணமடைந்துள்ளனர். குழந்தை பாக்கியம், காணாமற் போன பொருள்கள் கிடைத்தல் போன்ற பலவித புதுமைகள் நடந்துள்ளன.
திருவிழா :
ஆண்டுதோறும் ஜனவரி 17 ஆம் தேதி புனித வனத்து அந்தோணியார் திருவிழா கொண்டாடப்படுகிறது.
மக்கள்தொகை :
இவ்வூரில் 89 - ஆண்களும் , 99 - பெண்களும் வாழ்கின்றனர்.
வழிபாடுகள் :
ஞாயிறு மறைக்கல்வியும், செபவழிபாடுகளும், மாதந்தோறும் திருப்பலியும் நடைபெறுகின்றன.
திவ்விய நற்கருணைப் பாப்பரசர் எனப் போற்றப்படும் புனித பத்தாம் பத்தியநாதரை பாதுகாவலராகக் கொண்ட இறைமக்கள் வாழும் ஊரே கோட்டைப்பட்டி ஆகும்.
ஊர்ப் பின்னணி :
கோட்டைப்பட்டியில் உள்ள பத்தியநாதர் கிறிஸ்தவர்களால் மட்டுமே எடுத்து நடத்தப்படுகிறது.
ஆலய தொடக்கம் :
மலையடிப்பட்டி பங்கின் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்பணி.பத்தியநாதர் அவர்களால் 31.01.1982-ல் கட்டப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது. மலையடிப்பட்டி பங்கைச் சேர்ந்த பொன்னக்கோன்பட்டி நாட்டாண்மை மரிய ரெத்தினம் ஆசிரியர், கோட்டைப்பட்டி சந்தியாகு, பொன்னுச்சாமி ஆகியோருடைய முயற்சியால் கட்டப்பட்டது.
ஊர்ப் பாதுகாவலர் மற்றும் பெயர்க் காரணம் :
இவ்வூர் மற்றும் பங்கின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர்களில் குறிப்படத்தக்கவர் பங்குத்தந்தை.பத்தியநாதர் ஆவார். பங்குத்தந்தையின்பால் கொண்ட அன்பால் ஊரின் பாதுகாவலராக திருத்தந்தை புனித பத்தாம் பத்தியநாதரை பாதுகாவலராக கொண்ட கோயில் கட்டப்பட்டது.
மக்கள் தொகை : கோட்டைப்பட்டியில் கிறிஸ்தவக் குடும்பங்கள் பன்னிரெண்டு உள்ளது. ஆண்கள் - 28 , பெண்கள் - 25, சிறுவர்கள் - 15 என மொத்தம் 65 பேர் வசிக்கின்றனர்.
நடைபெறும் வழிபாடுகள் :
ஆண்டுதோறும் தை மூன்றாம் நாள் பத்தியநாதர் திருவிழா பொங்கல் வைத்து கொண்டாடப்படுகிறது.
பக்தி முயற்சிகள் :
இளைஞர் - இளம் பெண்கள் வழிகாட்டுதலோடு இரவு செப வழிபாடுகள் நடைபெறுகின்றன.
சிந்தனைக்கு:
திவ்விய நற்கருணை பாப்பரசர் புனித பத்தாம் பத்தியநாதர் நமக்கு காட்டிய வழியைப் பின்பற்றி தினமும் திருப்பந்தியில் பங்கு கொள்ள ஆர்வமுடன் இருக்கும்.
வேத போதக நாடுகளின் பாதுகாவலியான புனிதை குழந்தை தெரசம்மாளை பாதுகாவலியாகக் கொண்ட இறைமக்கள் வாழும் ஊரே மொட்டப்பெருமாம்பட்டி ஆகும்.
ஆலய தொடக்கம் & வளர்ச்சி :
கி.பி.1925 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மறைமாவட்ட மேதகு ஆயர் ஜேம்ஸ் மெண்டோண்சா அவர்கள் உத்தரவின்படி மலையடிப்பட்டி பங்கு மொட்டப்பெருமாம்பட்டியில் அப்போதைய பங்குத்தந்தை சிரே சுவாமி அவர்களால் ஊர்ப்பெரியோர்கள், கோயில்பிள்ளை செபஸ்தியான் மற்றும் ஊர்ப் பொதுமக்களால் சிறிய கோயில் கட்டி வணங்கி வந்தனர்.
கி.பி.1992 ல் திருச்சி மறைமாவட்ட ஆயர் S.L.கபிரியேல் அவர்கள் ஆசியுடன் அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி.தேவராஜ் அவர்கள் முயற்சியாலும் கற்காரைக் கட்டிடம் கட்டப்பட்டு 01.03.1992 ல் ஆயர் அவர்களால் புனிதப்படுத்தி திறந்து வைக்கப்பட்டது.
திருவிழா :
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1ஆம் தேதி புனித குழந்தை தெரசம்மாள் திருவிழா கொண்டாடப் பட்டு வருகிறது. மேலும் ஜனவரி 17 ஆம் தேதி பொங்கல் திருவிழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
வழிபாடுகள் :
செப வழிபாடுகளும், மாதந்தோறும் திருப்பலியும் நடைபெறுகின்றன. புனித குழந்தை தெரசம்மாளை பிற மதத்தவரும், இனத்தவரும் தனது தெய்வம் போல் வணங்கி வருவதே இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
மக்கட்தொகை : சுமாராக 100 பேர் இக்கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
‘இறையன்பினால் உந்தப்பட்டு, கீழே கிடக்கும் ஒரு குண்டூசியை எடுப்பதன் மூலம் ஓர் ஆன்மாவை மீட்க முடியும் என்றார்’.- புனித தெரசம்மாள்.